

வீடு வாங்குவோர் நிம்மதி பெருமூச்சு விடும் வகையில் வீடு தராமல் இழுத்தடித்தால் வங்கிகளும், கட்டுமான நிறுவனங்களும் தான் கடனை ஏற்க வேண்டும் என்ற கோரிக்கயை உச்சநீதிமன்றம் ஒப்புக்கொண்டு உள்ளது.
சொந்த வீடு வாங்குவதற்காக பணம் செலுத்திவிட்டு, கட்டுமான நிறுவனங்கள் வீட்டை ஒப்படைக்காததால் இஎம்ஐ (EMI) கட்ட முடியாமல் தவிக்கும் நடுத்தர வர்க்க மக்களுக்கு உச்சநீதிமன்றம் ஒரு மிகப்பெரிய நல்ல செய்தியை அறிவித்துள்ளது. அதாவது தாங்கள் முன்பதிவு செய்த குடியிருப்பு தங்களுக்குக் கிடைக்காத நிலையிலும், அதற்கான மாதத் தவணைகளை (EMI) செலுத்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டதாகக் கூறி வீடு வாங்குபவர் ஒருவர் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்ற அமர்வு விசாரித்தது. அப்போது சப்வென்ஷன் திட்டத்தின் கீழ் வீடு வாங்கி ஏமாந்த வாடிக்கையாளர் ஒருவருக்கு ஆதராக, அவருக்கு எதிராக வங்கிகள் எந்தவித கட்டாய நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு அதிரடி இடைக்கால தடை விதித்துள்ளது.
பொதுவாக அடுக்குமாடி குடியிருப்பு (flats)கட்டப்படும் போதே இந்த திட்டத்தின் கீழ் மக்கள் வீடு வாங்குவார்கள். இதில் வாடிக்கையாளர், வங்கி மற்றும் கட்டுமான நிறுவனம் ஆகிய மூன்று தரப்பும் இணைந்த ஒரு முத்தரப்பு ஒப்பந்தம் போடுவார்கள். இந்த திட்டத்தின்படி, வங்கி தனது கடன் தொகையை நேரடியாக கட்டுமான நிறுவனத்தின் கணக்கில் செலுத்திவிடும். வீடு வாங்குபவர்களிடம் குடியிருப்புகள் ஒப்படைக்கப்படும் வரை, அந்த வீட்டு கடனுக்கான மாதத் தவணைகளை கட்டுமான நிறுவனங்களே(பில்டர்) செலுத்த வேண்டும். வீடு கைக்கு வந்த பிறகு தான் வாடிக்கையாளர் இஎம்ஐ கட்ட தொடங்க வேண்டும். இதுதான் விதிமுறை. ஆனால், முத்தரப்பு ஒப்பந்தத்தின்படி கட்டுமான நிறுவனங்கள் வங்கிகளுக்குச் செலுத்த வேண்டிய தவணைகளைச் செலுத்தத் தவறும் நிலையில், வங்கிகள் வீடு வாங்குபவர்களிடமிருந்து அந்தத் தவணைகளை வசூலிக்கத் தொடங்குகின்றன.
அதாவது பல வீட்டு வசதி திட்டங்களில் பில்டர்கள் வீட்டை உரிய நேரத்தில் கட்டி முடிக்காமல் இழுத்தடிப்பதோடு, வங்கிகளுக்கு செலுத்த வேண்டி இஎம்ஐ தொகையையும் பாதியிலேயே நிறுத்தி விடுகிறார்கள். இத்தகைய சூழலில் வங்கிகள் பில்டர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் தவறு செய்யாத மக்களை மிரட்டி அவர்களிடம் இருந்து இஎம்ஐ தொகையை கட்டாய வசூல் செய்து வருகின்றன. இதனால் வீடு கிடைக்காமலும், கையில் இருந்த பணத்தை இழந்து இஎம்ஐயும் கட்ட வேண்டிய இரட்டை பாதிப்புக்கு பொதுமக்கள் ஆளாகி வந்தனர்.
தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வீட்டின் உடமையை பெற முடியாததுடன், வங்கியின் இஎம்ஐ தொகையையும் கட்டாயமாக செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறி பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதி வி.மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் போது, நிதி நிறுவனங்கள் 'சப்வென்ஷன்' திட்டத்தின் விதிமுறைகளைப் பின்பற்றுவதில்லை என்று மனுதாரரின் வழக்கறிஞர் வாதிட்டார். இம்மனுவின் மீது நோட்டீஸ் அனுப்ப ஒப்புக்கொண்ட நீதிமன்ற அமர்வு, அதே வேளையில் அவர்கள் இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் காலத்தில் இஎம்ஐ கட்டக்கோரி மனுதாரருக்கு எதிராக வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் எந்தவொரு கட்டாய நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்றும் தெளிவுபடுத்தியது.
கட்டுமானப் பணிகள் பாதியில் நின்றுபோன வீட்டுவசதித் திட்டங்களில் வீடு வாங்குபவர்களுக்காக, கடன் தவணை விடுவிப்பு முறையை கட்டுமானப் பணிகளின் நிலைகளுக்கு ஏற்ப (stage-linked disbursal) உறுதி செய்யும் வகையிலான ஒரு முறையான கடன் நிவாரணத் திட்டத்தை உருவாக்க வேண்டும் என்றும் இம்மனு கோரியிருந்தது.
மேலும் இத்தகைய தேக்கமடைந்த வீட்டுவசதி திட்டங்களில் ஏமாந்த வாடிக்கையளர்களுக்கு பிரத்யேக ‘கடன் நிவாரண திட்டத்தை’ உருவாக்குவது குறித்து பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
மேலும் வழக்குத்தாரர், கட்டுமான பணியின் முன்னேற்ற நிலைக்கு ஏற்ப மட்டுமே வங்கிகள் கடன் தொகை வழங்கும் நடைமுறையை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும்.
சப்பென்ஷன் திட்டத்தின் (subvention)கீழ் வீடு கட்டிக்கொடுக்கப்படாமல் ஏமாற்றப்பட்டால் வழங்கப்பட்ட முழு கடன் தொகையின் இழப்பையும் வங்கியும், கட்டுமான நிறுவனமும் (பில்டர்) தான் சமமாக பிரித்து ஏற்க வேண்டும். வாடிக்கையாளரை வற்புறுத்தக் கூடாது என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு உருவாக்க வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த ஆண்டு ஜூலை மாதம், தேசிய தலைநகர் பிராந்தியத்தில் (NCR) வீடு வாங்குபவர்களை ஏமாற்றுவதற்காக வங்கிகளுக்கும் கட்டுமான நிறுவனங்களுக்கும் இடையே நிலவிய "முறையற்ற கூட்டு" (unholy nexus) தொடர்பாக 22 வழக்குகளைப் பதிவு செய்ய மத்திய புலனாய்வுத் துறைக்கு (CBI) உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, மொஹாலி மற்றும் பிரயாக்ராஜ் ஆகிய நகரங்களில் உள்ள ரியல் எஸ்டேட் திட்டங்களில் வீடு வாங்குபவர்களை ஏமாற்ற வங்கிகளுக்கும் கட்டுமான நிறுவனங்களுக்கும் இடையே நிலவியதாகக் கூறப்படும் முறையற்ற கூட்டுச் சதி குறித்து விசாரிக்க, மேலும் ஆறு வழக்குகளைப் பதிவு செய்ய சிபிஐ-க்கு செப்டம்பர் 2015-ல் நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.
இதனை உச்சநீதிமன்றம் விசாரிக்க ஒப்புக்கொண்டுள்ளதால் இனிவரும் காலங்களில் வீடு வாங்குவோர் வங்கிகளாலும், பில்டர்களாலும் ஏமாற்றப்படுவத முற்றிலும் தடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.