

உச்சநீதிமன்றத்தின் 53-வது தலைமை நீதிபதியாக இன்று காலை பொறுப்பேற்றுக் கொண்டார் சூரியகாந்த். இதற்கு முன்பு தலைமை நீதிபதியாக பணியாற்றி வந்த பி.ஆர்.கவாய் அவர்களின் பதவிக்காலம் நேற்று மாலையுடன் முடிவடைந்த நிலையில், இன்று சூரியகாந்த் அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டார். டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், இந்தியாவின் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சூர்யகாந்திற்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த விழாவில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா மற்றும் டெல்லி துணைநிலை கவர்னர் ஆகியோர் பங்கேற்றனர். மேலும் இலங்கை மற்றும் மலேசியா உள்ளிட்ட ஆறு நாடுகளைச் சேர்ந்த நீதிபதிகளும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டனர்.
கடந்த 2019 ஆவது ஆண்டில் சூரியகாந்த் அவர்கள் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார். அன்றிலிருந்து இன்று வரை இந்தியாவில் நடைபெற்ற சில முக்கிய வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கும் அமர்வில் இவரும் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது, சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்தது, பீகாரில் நடைபெற்ற சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் மற்றும் பெகாசஸ் உளவு மென்பொருள் வழக்கு உள்ளிட்ட முக்கிய வழக்குகளில் தீர்ப்பை வழங்கிய உச்சநீதிமன்றத்தின் அமர்வுகளில் நீதிபதி சூர்யகாந்த் இடம் பெற்றிருந்தார்.
இன்று பதவியேற்றுள்ள சூரியகாந்த் அடுத்த 15 மாதங்களுக்கு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக செயல்படுவார். இவருடைய பதவிக்காலம் வருகின்ற 2027 பிப்ரவரி ஒன்பதாம் தேதியுடன் முடிவடைகிறது. பி.ஆர்.கவாய் அவர்களின் பதவிக்காலம் நிறைவு பெறுவதற்கு சில நாட்களுக்கு முன்னதாகவே அடுத்த தலைமை நீதிபதியை தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார. இதன்படி கடந்த அக்டோபர் 30ம் தேதியே உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சூரியகாந்த் நியமிக்கப்பட்ட நிலையில், இன்று காலையில் அவர் பதவியேற்றுக் கொண்டார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் வயதுவரம்பு 65 ஆண்டுகள் ஆகும். இந்நிலையில் 2027 பிப்ரவரி 9ஆம் தேதியுடன், தலைமை நீதிபதி சூர்யகாந்திற்கு 65 வயது பூர்த்தி அடைவதால் அன்றுடன் அவரது பதவிக்காலமும் முடிவுக்கு வருகிறது.
ஹரியானா மாநிலத்தில் உள்ள ஹிசார் என்ற மாவட்டத்தில், ஒரு சிறிய நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர் சூர்யகாந்த். சிறு நகரத்திலிருந்து இன்று நாட்டின் உயரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் சூர்யகாந்த்.
ஹரியானா மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட உயர் நீதிமன்றங்களில் வழக்குரைஞராக பணியாற்றிய சூரியகாந்த், கடந்த 2018 ஆம் ஆண்டு ஹிமாச்சல் பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார். இதனைத் தொடர்ந்து 2019 ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாகவும் பொறுப்பேற்றார். இந்நிலையில் இன்று நாட்டின் உயரிய பதவிகளில் ஒன்றான உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் சூரியகாந்தி பொறுப்பேற்றுள்ளார்.