

தமிழ்த் திரையுலகில் திரையரங்கக் காட்சிகள்,ஓடிடி வெளியீடு, சிறிய பட்ஜெட் திரைப்படங்களின் எதிர்காலம் எனப் பல விஷயங்களில் புதிய மாற்றங்களைக் கொண்டு வரும் முயற்சிகள் தொடங்கி உள்ளன.திரையுலகினர் தமிழக அரசிடம் முன் வைத்துள்ள முக்கிய கோரிக்கைகள் என்னென்ன என்பதைப் பார்ப்போம்!!!
தமிழ் சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல; ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் கூட! திரையரங்குகளின் வருமானம், ஓடிடி வெளியீடு, சிறிய படங்களின் எதிர்காலம் எனப் பல விஷயங்கள் தற்போது விவாதப் பொருளாகியுள்ளன. இந்நிலையில் தமிழக அரசிடம் திரையுலகினர் முன்வைத்துள்ள புதிய கோரிக்கைகள் என்னென்ன? அவை நிறைவேறினால் ரசிகர்களுக்கும் திரைப்படத் துறையினருக்கும் என்னென்ன மாற்றங்கள் கிடைக்கும் என்பதை இக்கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்..
தமிழகத்தில் தற்போது திரைப்படங்களின் முதல் காட்சி பொதுவாக காலை 9 மணிக்குத் தொடங்குகிறது. ஆனால், கேரளா, ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களில் அதிகாலை 6 மணிக்கே திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. இதனால் தமிழகத் திரைப்பட ரசிகர்களும் தயாரிப்பாளர்களும் சில சிக்கல்களைச் சந்திப்பதாகக் கூறப்படுகிறது. மற்ற மாநிலங்களில் படம் பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விமர்சனங்களையும் கதையின் முக்கியத் தகவல்களையும் பகிர்ந்துவிடுவதால், தமிழக ரசிகர்கள் முதல் காட்சியைப் பார்ப்பதற்கு முன்பே படத்தைப் பற்றிய பல தகவல்களைத் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.
இந்தச் சூழலில், அக்டோபர் இறுதியில் சென்னையில் தமிழக அமைச்சர் ராஜ்மோகன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தயாரிப்பாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் உள்ளிட்ட திரையுலகப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அப்போது காலை 6 மணி முதல் முதல் காட்சியைத் தொடங்கவும், நள்ளிரவு 2 மணி வரை திரையரங்குகளை இயக்கவும் அனுமதி கோரப்பட்டுள்ளது. இதன் மூலம் தினமும் கூடுதலாக சுமார் 1,200 காட்சிகளைத் திரையிட முடியும் என்பது தயாரிப்பாளர் ஜி. தனஞ்செயனின் கருத்து.
அடுத்த முக்கியமான கோரிக்கை ஓடிடி தொடர்பானது. தற்போது பல திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியான நான்கு வாரங்களிலேயே ஓடிடியில் வந்துவிடுகின்றன. இதனால் வீட்டிலேயே படத்தைப் பார்த்துக் கொள்ளலாம் எனப் பலர் நினைப்பதால் திரையரங்குகளுக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைகிறது என்பது திரையரங்கு உரிமையாளர்களின் வாதம். எனவே, திரையரங்கு வெளியீட்டுக்குப் பிறகு எட்டு வாரங்கள் கழித்தே ஓடிடியில் வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆனால் தயாரிப்பாளர்களுக்கு ஓடிடி உரிமை மூலம் கிடைக்கும் வருமானமும் முக்கியமானது என்பதால் இந்த விவகாரத்தில் சமநிலை அவசியமாகிறது.
இன்னொரு சுவாரஸ்யமான கோரிக்கை, சிறிய முதலீட்டில் உருவாகும் திரைப்படங்களுக்காக தமிழக அரசே தனியாக ஓர் ஓடிடி தளத்தை உருவாக்க வேண்டும் என்பதாகும். பெரிய நடிகர்கள் இல்லாமல், நல்ல கதையம்சத்துடன் உருவாகும் பல திரைப்படங்களுக்கு முன்னணி ஓடிடி தளங்களில் இடம் கிடைப்பதில்லை. அரசின் தனி ஓடிடி தளம் அமைந்தால் இத்தகைய படங்களுக்கும் ரசிகர்களைச் சென்றடைய வாய்ப்பு கிடைக்கும்.
மேலும், திரையரங்குகளில் ஒவ்வொரு காட்சியும் முடிந்ததும் டிக்கெட் விற்பனை மற்றும் வசூல் விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்யும் முறையைக் கொண்டுவர வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. இதனால் உண்மையான வசூல் விவரங்கள் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் என அனைவருக்கும் வெளிப்படையாகத் தெரியவரும். சிறிய பட்ஜெட் படங்களுக்கான மானியங்கள் மற்றும் நிலுவையில் உள்ள அரசு திரைப்பட விருதுகளையும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.
திரையுலகின் மற்ற எதிர்பார்ப்புகள் :
இத்துடன் திரையரங்குகளில் டிக்கெட் விலையை முறைப்படுத்துவது , ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு கட்டணங்களைக் கட்டுப்படுத்துவது போன்ற விஷயங்களும் ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளன.. குறிப்பாக ஒரு திரைப்படம் வெற்றி பெற்றதா , தோல்வி அடைந்ததா என்பதை அதன் உண்மையான வசூல் விவரங்களைக் கொண்டே தீர்மானிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது..அதே போல, சிறிய தயாரிப்பாளர்கள் தங்களுடைய படங்களை விளம்பரப்படுத்துவதற்கும் திரையரங்குகளைப் பெறுவதற்கும் போதிய வாய்ப்புகள் கிடைக்க வேண்டும்..
பெரிய நட்சத்திரங்களின் படங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்காமல் புதிய இயக்குனர்கள், அறிமுக நடிகர்கள் ஆகியோருக்கும் சமமான வாய்ப்புகள் கிடைத்தால் தமிழ் சினிமாவில் பல புதிய திறமைகள் வெளிச்சத்திற்கு வரலாம்.
மேலும் திரையரங்குகளில் குடும்பத்துடன் திரைப்படம் பார்க்க வருபவர்களுக்கு பாதுகாப்பான சூழல், சுத்தமான கழிப்பறைகள், பார்க்கிங் வசதிகள் ஆகியவையும் மேம்படுத்த வேண்டும்.. திரைப்படத் தொழில்நுட்பக் கலைஞர்களின் நலன்,புதியவர்களுக்கான பயிற்சி வாய்ப்புகள் போன்றவற்றிலும் கவனம் செலுத்தினால் ஒட்டுமொத்த திரையுலகமும் வளர்ச்சி பெறும்.