குட் நியூஸ்..!! சினிமா தயாரிப்பாளர்கள் அறிவித்த ஸ்டிரைக் ஒத்திவைப்பு..!

செப்டம்பர் 1 தமிழ் சினிமா ஸ்ட்ரைக் ஒத்திவைப்பு!: தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடி முடிவு - தியேட்டர்களில் புதிய படங்கள் வெளியாகும்!
Cinema Ticket
Cinema
Updated on

தமிழ் திரையுலகில் தயாரிப்பாளர்கள் சங்கங்களால் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் அறிவிக்கப்பட்டிருந்த படப்பிடிப்பு மற்றும் புதிய திரைப்படங்கள் வெளியீட்டு நிறுத்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் என இரண்டு சங்கமும் கூட்டாக ஒரு முக்கிய முடிவினை அறிவித்தனர்.

அதாவது செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் தமிழில் எந்த புது படங்கள் திரையரங்கில் ரிலீஸாகாது என்றும் எந்த படப்பிடிப்பும் நடக்காது என்றும் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் உள்ளிட்ட அனைத்து பணிகளும் நிறுத்தப்படும் என்று தெரிவித்தனர். இதனால் தமிழ் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இந்த பிரச்சனையை தமிழ்நாடு முதல்வருக்கும் சம்பந்தப்பட்ட துறை அமைச்சருக்கும் கொண்டு சென்று தீர்வு காண இருப்பதாகவும் அறிவித்தனர்.

திரையரங்குகளில் வெளியாகும் புதிய திரைப்படங்களை 8 வாரங்களுக்குப் பிறகே ஓடிடி (OTT) தளங்களில் வெளியிட வேண்டும் எனத் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கமும், விநியோகஸ்தர்கள் சங்க கூட்டமைப்பும் வற்புறுத்தின. செப்., 1 முதலே இதை நடைமுறைப்படுத்த வேண்டும். இதை உறுதி செய்து தயாரிப்பாளர்கள் சங்கம் கடிதம் கொடுத்தால் மட்டுமே திரையரங்குகளில் படங்களை வெளியிடுவோம் என்று முடிவெடுத்தனர்.

திரைப்பட விநியோகஸ்தர்களின் இந்த நிர்பந்தத்தத்துக்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும், இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் எந்த புதிய படங்களையும் வெளியிட மாட்டோம் எனக் கூறி திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர் வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளனர். வேலைநிறுத்தம் ஏற்பட்டால் திரைப்படத் துறைக்கு ரூ.200 கோடி முதல் ரூ.500 கோடி வரை இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

அதேவேளையில், "நாங்கள் வேலைநிறுத்தம் செய்யப்போவதில்லை; எந்தப் படம் வந்தாலும் திரையிடுவோம்" எனத் திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் அறிவித்தார். இருவேறு கருத்துகளால் அடுத்த மாதங்களில் வெளிவரவிருந்த பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் பாதிக்குமோ என்ற அச்சமும் குழப்பமும் ரசிகர்களிடையே எழுந்தது.

Cinema theater
Cinema theater Img credit: AI Image

இப்பிரச்சனை குறித்துத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் ஆகஸ்ட் 26 அன்று அமைச்சர் ராஜ்மோகனை சந்தித்து பேசப்பட்டது. இது தொடர்பாக சென்னையில் நடைபெற்ற தயாரிப்பாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின், சங்கத் தலைவர் தமிழ்குமரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழ் சினிமாவில் நிலவி வரும் அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு அமைச்சர் ராஜ்மோகனை சந்தித்தோம்.சட்டமன்றக் கூட்டத்தொடர் நடந்து வரும் சூழலில், தற்போது உள்ள நடைமுறையையே தொடர்ந்து பின்பற்றுமாறு அமைச்சர் ராஜ்மோகன் அறிவுறுத்தியுள்ளார். கூட்டத்தொடர் முடிந்ததும் முதல்வர் விஜயின் ஆலோசனைப்படி அரசு தலைமையில் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், மற்றும் திரையரங்கு உரிமையாளர்களை அழைத்து பேசி தீர்வு காணப்படும். அதுவரை வேலை நிறுத்தம் வேண்டாம் என அறிவுறுத்தினார்.

அரசின் இந்த அறிவுறுத்தலை ஏற்று, செப்டம்பர் 1 முதல் அறிவிக்கப்பட்டிருந்த புதிய திரைப்படங்கள் வெளியீடு, படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்கான வேலைநிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது" என்றார்.

அரசு தரப்பில் பேச்சுவார்த்தை உறுதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, செப்டம்பர் 1 முதல் திட்டமிட்டபடி புதுப் படங்கள் திரையரங்குகளில் வெளியாகும் என்பதுடன் படப்பிடிப்புகளும் தடையின்றி நடைபெறும் என்பதால் தமிழ் திரையுலகினரும் ரசிகர்களும் நிம்மதி அடைந்துள்ளனர்.

இதையும் படியுங்கள்:
ஹாய் திரைவிமர்சனம்: கவின் - நயன்தாரா ஜோடி கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட் ஆனதா? படம் எப்படி இருக்கு?
Cinema Ticket
இதையும் படியுங்கள்:
டாக்ஸிக் திரை விமர்சனம்: கேஜிஎஃப் 2-க்கு பின் யஷ் ஏமாற்றினாரா? முழு அலசல்!
Cinema Ticket
logo
Kalki Online
kalkionline.com