

வேலையில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, 60 வயதுக்கு மேற்பட்ட பல முதியவர்கள் குடும்பத்தினரால் புறக்கணிக்கப்படுவதையும், தனிமையையும், மனச்சோர்வையும் எதிர்கொள்கின்றனர். தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் மூத்த குடிமக்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அவர்களின் நல்வாழ்வை மேம்படுத்தவும், வீடுகளில் உள்ள முதியவர்கள் சோர்வடையாமல் ஊக்கம் பெற உதவும் வகையில் தமிழக அரசால் உருவாக்கப்பட்டுள்ளது தான் ‘அன்புச்சோலை’ திட்டம்.
இந்தத் திட்டத்தின்கீழ் அமைக்கப்படும் 'அன்புச் சோலை - முதியோர் மனமகிழ் மையங்கள்', மூத்த குடிமக்களின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவும் சமூக மையங்களாகச் செயல்பட உள்ளன.
மதிய உணவு, யோகா பயிற்சி, பொழுதுபோக்கு அம்சங்களுடன் தமிழகத்தில் 25 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள பராமரிப்பு மையங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் தொடங்கி வைத்தார்.
அந்த வகையில், கோவை, திருச்சி, சேலம், திருப்பூர், ஈரோடு, தூத்துக்குடி, வேலூர், தஞ்சாவூர், திண்டுக்கல் ஆகிய 10 மாநகராட்சிகளில் தலா 2 மையங்களும், பெருநகர சென்னை மாநகராட்சியில் தண்டையார்பேட்டை, சோழிங்கநல்லூர், விருகம்பாக்கம் ஆகிய இடங்களிலும், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தலா ஒரு மையம் என்று 25 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த மையத்தில் நூலகம் உள்ளிட்ட முதியோர்களுக்கான பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. யோகா கற்றுக்கொடுக்கவும், தேவையான திறன் மேம்பாட்டு சேவைகள் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முதியோர்கள் எளிதாக விளையாடும் விளையாட்டுகள் அந்த மையங்களில் இருக்கும். அதோடு, முத்துமாலை கோர்த்தல், கூடை பின்னுவது போன்ற கைத்தொழிலிலும் ஈடுபடலாம்.
இந்த மையங்கள், தமிழ்நாடு அரசின் நிதியுதவியுடன் தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் பகலில் மட்டும் இயங்கும் மையமாக செயல்படும் என்றும், ஒவ்வொரு மையமும் குறைந்தபட்சம் 50 மூத்த குடிமக்கள் பயன்பெறும் வகையில் போதிய இடவசதி, போதுமான உட்கட்டமைப்பு வசதிகளை கொண்டிருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்புச்சோலை மையங்களுக்கு வரும் முதியவர்களுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் ஆதரவுடன் மதிய உணவு மற்றும் சிற்றுண்டி வழங்கப்படும் என்றும், தகுதி வாய்ந்த பராமரிப்பாளர்கள் மற்றும் பிசியோதெரபிஸ்ட் என்ற இயன்முறை மருத்துவர் ஒருவர் பணியமர்த்தப்பட்டு முதியோரின் பராமரிப்பு உறுதி செய்யப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
வீடுகளில் உள்ள சிரமங்களை முதியோர் மறக்கவும், இந்த மையங்களுக்கு வரும் மற்ற முதியோருடன் மனம் விட்டு பேசி மகிழவும் இந்த மையங்கள் உறுதுணையாக இருக்கும். இங்கு பகல் நேரத்தில் 50 பேர் தங்க முடியும். படுத்து ஓய்வெடுக்க 5 கட்டில்கள் போடப்பட்டு இருக்கும்.
வேலைக்கு செல்லும் பெண்கள், தங்கள் வீட்டிலுள்ள முதியோர்களை பகல் நேரங்களில் பராமரிக்க முடியாத நிலை உள்ளது. எனவே, வேலைக்கு செல்லும் பெண்களுக்காகவும், வேலைக்கு செல்ல ஆர்வமுள்ள பெண்களுக்காகவும், அவர்களது வீட்டு முதியவர்களுக்கு தனிமையில்லாமல் நேரத்தை சிறந்த முறையில் செலவு செய்து, மகிழ்வாக வாழ வழிவகை செய்யும் நோக்கத்தோடும் ‘அன்புச் சோலை’ மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.