
தமிழக அரசு குடிமக்களின் நலனை காக்கவும், அவர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும் பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் கொண்டு வரப்பட்ட மகளிர் உரிமைத்தொகை திட்டம், நான் முதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டம், தமிழ்புதல்வன் திட்டம் உள்ளிட்ட பல நலத்திட்டங்கள் தமிழக மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இலவச முழு உடல் பரிசோதனைக்காக கடந்த 3-ம்தேதி நலம் காக்கும் ஸ்டாலின் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக மின்சார வாகனத்தின் விற்பனை அதிகரித்து கொண்டே வருகிறது. சுற்றுச்சூழலுக்கு மின்சார வாகனங்கள் பாதிப்பை ஏற்படுத்தாது என்பதால் மத்திய மற்றும் மாநில அரசும் மின்சார வாகனத்தின் பயன்பாட்டை ஊக்குவித்து வருகிறது. இதனால் வாகன உற்பத்தி நிறுவனங்களும் அதிகளவு மின்சார வாகனங்களை உற்பத்தி செய்து வருகின்றன.
அந்த வகையில் மின்சார வாகன விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் உணவு டெலிவிரி ஊழியர்களுக்கு இ ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம் வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணையை பிறப்பித்துள்ளது.
தமிழ்நாடு இணையம் சார்ந்த தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள டெலிவரி ஊழியர்கள் மட்டுமே இந்த மானியத்தை பெறமுடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற தொழிலாளர்கள் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற முடியாது. அந்தவகையில், ஸ்விக்கி, சோமேட்டோ, அமேசான் போன்ற இணைய வழி சேவை(online delivery) நிறுவனங்களில் பணி புரியும் ஊழியர்கள் மட்டுமே இந்த மானிய திட்டத்தின் மூலம் பயன்பெற முடியும். முதல் கட்டமாக இந்த திட்டத்தின் கீழ் 2,000 டெலிவரி ஊழியர்கள் மட்டும் மானியம் பெற்று பயன்பெற உள்ளனர். இதற்காக ரூ.4 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் மானியத்தைப் பெற, தமிழ்நாடு இணையம் சார்ந்த தொழிலாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக இருக்க வேண்டியது கட்டாயம். தமிழ்நாடு தொழிலாளர்கள் நலவாரியத்தில் நீங்கள் இதுவரை உறுப்பினராகவில்லை எனில் https://tnuwwb.tn.gov.in/ என்ற இணையதளத்திற்கு சென்று New Registration என்ற ஆப்ஷனை கிளிக் செய்து உங்களுடைய பணி விவரங்கள் மற்றும் இதர தகவல்களை பதிவு செய்து நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்துகொள்ள வேண்டும்.
இந்த திட்டத்தின் கீழ் மானியம் பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஆணவங்கள் உங்களிடம் இருந்தால் நீங்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
ஆதார் அட்டை
ரேஷன் அட்டை (முகவரி சான்று)
ஓட்டுநர் உரிமம்
பணிபுரியும் நிறுவனத்தின் சான்றிதழ்
வங்கி பாஸ்புக்கின் முதல் பக்கம்
நலவாரிய அட்டை
போன்ற ஆவணங்களை கொண்டு இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் தொழிலாளர்கள் https://tnuwwb.tn.gov.in/ என்ற இணையதளத்திற்கு சென்று அதில் Subsidy for eScooter/என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்களுடைய நலவாரிய நிரந்தர பதிவு எண் மற்றும் பாஸ்வேர்டை பதிவிட்டு உள்ளே (Login)நுழைய வேண்டும். பின்னர் அதில் கேட்கப்பட்டுள்ள ஆவணங்களை பதிவேற்றி வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாதவர்கள், அல்லது ஆன்லைனில் விண்ணப்பிக்க தெரியாதவர்கள் அருகில் உள்ள இ-சேவை மையங்களுக்கு சென்றும் விண்ணப்பிக்கலாம். அதேபோல, உங்களிடம் ஏற்கனவே இருசக்கர வாகனம் இருந்தாலும் இ-ஸ்கூட்டர் மானியத்துக்கு விண்ணப்பிக்க முடியும்.
உங்கள் மாவட்டத்தில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையாளர் அலுவலகத்தின் மூலம் நீங்கள் மானியத்திற்கு விண்ணப்பித்து இருந்தால் உங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிற ஆவணங்களை கொண்டு உங்களின் விண்ணப்பத்தின் நிலையை தெரிந்து கொள்ள முடியும்.