

2026-ம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் ஏப்ரல் 23-ம்தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் சூடுபிடித்துள்ளது. 234 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மே 4-ம்தேதி நடைபெறுகிறது. தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து, பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக, அத்துடன் புதிய மற்றும் வளர்ந்து வரும் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தைகள், தொகுதி பங்கீடு மற்றும் தேர்தல் பிரச்சாரங்களை தீவிரப்படுத்தியுள்ளன. வேட்புமனுத் தாக்கல், பிரச்சாரப் பயணம் மற்றும் கூட்டணிகள் உறுதி செய்யப்படுவது போன்ற நிகழ்வுகளால் அரசியல் களம் பரபரப்பாக உள்ளது.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் களம் பரபரப்பாக இயங்கி வரும் நிலையில் அவ்வப்போது வெளியாகும் தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புகள் வாக்காளர்கள் மற்றும் வேட்பாளர்களின் கவனம் பெற்று வருகிறது.
இதற்கிடையே ஒரு வாக்காளருக்கு, வாக்காளர் அடையாள அட்டை இல்லாத நிலையிலும் தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ள ஆதார் உள்ளிட்ட 12 ஆவணங்களை காட்டி வாக்களித்து தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்ற முடியும் என்று தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் வாக்காளர் அடையாள அட்டையில் சிறு சிறு பிழைகள் இருந்தால் வாக்களிக்க முடியுமா என்ற சந்தேகம் வாக்காளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, வாக்காளர் அட்டையில் பெயர் அல்லது முகவரியில் எழுத்துப் பிழைகள் இருந்தால், தங்களால் வாக்களிக்க முடியுமா என்ற கேள்வி பலரிடமும் எழுந்துள்ளது. இது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் தெளிவான விளக்கத்தை அளித்துள்ளது.
தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி, வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள தட்டச்சுப் பிழைகள் அல்லது எழுத்துப் பிழைகள் போன்ற சிறிய குறைபாடுகள் இருந்தால் பிரச்சனையில்லை என்றும் ஒரு வாக்காளரின் அடையாளத்தை அந்த அட்டையின் மூலம் உறுதிப்படுத்த முடியும் பட்சத்தில், இத்தகைய பிழைகளை தேர்தல் அலுவலர்கள் புறக்கணிக்கலாம் என்று ஆணையம் தெரிவித்துள்ளது. அதாவது, அட்டையில் உள்ள புகைப்படம் மற்றும் இதர விவரங்கள் ஒரு நபரின் உண்மையான அடையாளத்தை மெய்ப்பிக்கும் வகையில் இருந்தால், எழுத்துப் பிழைகளைக் காரணம் காட்டி ஒருவருடைய வாக்களிக்கும் உரிமை பறிக்கப்படாது என்று கூறியுள்ளது.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951-ன் கீழ், போலி வாக்காளர்களைத் தடுப்பதற்கும், உண்மையான வாக்காளர்களை அடையாளம் காண்பதற்கும் வாக்காளர் அடையாள அட்டை மிக முக்கியமான ஆவணமாகக் கருதப்படுகிறது.
வாக்காளர் பட்டியலில் ஒருவருடைய பெயர் இருப்பது மட்டுமே வாக்களிப்பதற்கான முழு உரிமையைத் தந்துவிடாது. தேர்தல் நடத்தை விதிகளின்படி வாக்குச்சாவடிக்குச் செல்லும் போது, வாக்காளர்கள் தங்களது அடையாள அட்டையைத் தவறாமல் சமர்ப்பிக்க வேண்டும். அடையாள அட்டையைக் காட்டத் தவறினாலோ அல்லது அதைச் சமர்ப்பிக்க மறுத்தாலோ, அவர்களுக்கு வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட வாய்ப்புள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரி போன்ற தேர்தல் நடக்கும் பகுதிகளில் ஏறத்தாழ 100 சதவீத வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. எனவே, உங்கள் வாக்காளர் அட்டையில் சிறிய பிழைகள் இருந்தாலும் கவலைப்படத் தேவையில்லை; உங்கள் அடையாளம் சரியாக இருக்கும் பட்சத்தில், வரும் ஏப்ரல் 23-ம்தேதி நடைபெறும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் நீங்கள் தாராளமாக வாக்களிக்கலாம். உங்கள் வாக்குரிமையை நிலைநாட்டத் தவறாதீர்கள் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.