

தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளதால் அரசியல் களம் சூடுப்பிடித்துள்ளது. ஒவ்வொரு கட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு வாக்குறுதிகளை கொடுத்து வருகின்றனர். தமிழ்நாட்டில் மே 10-ம் தேதியுடன் சட்டப்பேரவை பதவிக்காலம் முடிவடைகிறது.
தமிழக தேர்தல் தேதியை கடந்த 15-ம்தேதி தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அறிவித்துள்ளார். அதன்படி வரும் ஏப்ரல் 23-ம்தேதி ஒரே கட்டமாக நடக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. மே 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
வரும் மார்ச் 30ம்தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. வேட்புமனுத் தாக்கல் செய்ய ஏப்.6 கடைசி நாளாகும்.
இந்த சூழலில் இதுவரை வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காதவர்கள்(புதிய வாக்காளர்) இப்போது ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியாது? விண்ணப்பிக்க கடைசி தேதி என்ன என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்...
புதிய வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் முறை
இந்தியாவில் 18 வயது நிரம்பியவர்கள் புதிய வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். அதாவது, 18 வயதை எட்டியவர்கள் இந்த தேர்தலில் ஓட்டுப்போட தகுதியானவர்கள் என்பதால் புதிய வாக்காளர் அட்டை வேண்டி விண்ணப்பிக்கலாம். அதுவும் வீட்டில் இருந்தபடியே எளியமுறையில் ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பிக்க முடியும்.
புது வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள 'Voter Helpline App' மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.
அல்லது இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ voters.eci.gov.in என்ற தளத்திற்குச் சென்றும் விண்ணப்பிக்கலாம்.
புதிதாக விண்ணப்பிப்பவர்கள் படிவம் 6 (Form 6)-ஐ நிரப்ப வேண்டும். இதற்கு ஆதார் கார்டு, PAN கார்டு அல்லது 10-ஆம் வகுப்பு சான்றிதழ், பிறப்பு சான்றிதழ், உங்களது சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று இருக்க வேண்டும்.
முகவரிச் சான்றுக்காக ஆதார் கார்டு, வங்கி கணக்கு புத்தகம், மின்சார கட்டண ரசீது அல்லது எல்பிஜி சிலிண்டர் கனெக்ஷன் இருந்தால் அவற்றைக் கொடுக்கலாம்.
இந்த ஆவணங்கள் உங்களிடம் சரியாக இருக்கும்பட்சத்தில் மொபைல் எண் கொடுத்து தேர்தல் ஆணையத்தின் வெப்சைட்டில் லாகின் செய்யவும்.'New Registration for General Electors' (Form 6) என்பதைத் தேர்ந்தெடுத்து உங்களது விவரங்களை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். விண்ணப்பித்தவுடன் உங்களுக்கு ஒரு Reference Number கிடைக்கும், அதை வைத்து உங்கள் விண்ணப்பத்தின் நிலையைத் தெரிந்துகொள்ளலாம்.
வாக்காளர் அட்டைக்கு ஆஃப்லைனில் விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள்
விண்ணப்பதாரர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டை விண்ணப்பத்தை தமிழ்நாட்டில் உள்ள அந்தந்த தேர்தல் பதிவு அலுவலகத்தில் நேரடியாகச் சமர்ப்பிக்கலாம்.
படிவம் 6-ன் PDF கோப்பைப் பதிவிறக்கம் செய்யவும் அல்லது உள்ளூர் அலுவலகத்திலிருந்து அச்சிடப்பட்ட பிரதியைப் பெற்று அதில் தேவையான விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். பின்னர் அதனுடன் வயது மற்றும் முகவரி சரிபார்ப்புக்கான துணை ஆவணங்களை இணைத்து பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை அலுவலகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியிடம் சமர்ப்பித்து ஒப்புகை ரசீதைப் பெற்றுக்கொள்ளவும்.
2026 சட்டப்பேரவை தேர்தலில் வாக்களிக்க விரும்பும் புதிய வாக்காளர்கள் வரும் மார்ச் 26-ம்தேதி வரை வாக்காளர் அடையாள அட்டை வேண்டி விண்ணப்பிக்கலாம் என்றும் 15 நாட்களில் அடையாள அட்டை வழங்கப்படும் என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறியுள்ளார்.
வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க முடியாதவர்கள்?
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி, குறிப்பிட்ட சில காரணங்களுக்காக கீழே வகைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க முடியாது என்றும் அப்படி விண்ணப்பிக்கும் பட்சத்தில் அவர்களுடைய விண்ணப்பம் நிராகரிக்கப்படலாம்.
* விண்ணப்பிக்கும் ஆண்டின் தகுதி தேதியின் அடிப்படையில் 18 வயது பூர்த்தியடையாதவர்கள் விண்ணப்பிக்க முடியாது. ஆனால் தற்போது 17 வயது நிரம்பியவர்கள் முன்கூட்டியே விண்ணப்பிக்கலாம் என்றாலும் அவர்களுக்கு 18 பூர்த்தியான பிறகே வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும்.
* பொதுவாக தமிழ்நாட்டில் வசித்து வருபவராக இருக்க வேண்டும்.
* நீங்கள் வசிக்கும் தொகுதியில் நிரந்தர முகவரி இல்லாதவர் என்றால் அங்கு விண்ணப்பிக்க முடியாது. உதாரணமாக, ஒரு குறுகிய கால சுற்றுப்பயணம் அல்லது தற்காலிக வேலைக்காக ஓரிடத்தில் தங்கியிருப்பவர்கள் அந்த முகவரியைப் பயன்படுத்த முடியாது.
* முறையான வயது சான்று அல்லது முகவரி சான்று சமர்ப்பிக்காமல் விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
* ஏற்கனவே ஒரு தொகுதியில் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கும்பட்சத்தில், மீண்டும் ஒரு புதிய அட்டைக்கு விண்ணப்பிக்க முடியாது. அவ்வாறு செய்வது சட்டப்படி குற்றமாகும்.
* இந்தியக் குடியுரிமை இல்லாத வெளிநாட்டவர்கள் விண்ணப்பிக்க முடியாது. ஆனால் வெளிநாடு வாழ் இந்தியர்கள் இதற்கு விதிவிலக்கு, அவர்கள் தனி படிவம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
* உள்நோக்கத்துடன் தவறான தகவல்களை படிவத்தில் நிரப்பினால், அதை கண்டுபிடிக்கும் பட்சத்தில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம்.
* தேர்தல் தொடர்பான குற்றச்செயல்கள் அல்லது ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு, நீதிமன்றத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க முடியாது.
* நீதிமன்றத்தால் மனநலம் குன்றியவர் என்று அறிவிக்கப்பட்டவர்கள் வாக்களிக்கவோ, வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கவோ முடியாது.
- மேலும் வாக்காளர் அடையாள அட்டை தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு 18004257036, 1950 எண்களை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது..
மார்ச் 15-ம்தேதி அடிப்படையில் தமிழகத்தில் 5.69 கோடி வாக்காளர்கள் கணக்கிடப்பட்டுள்ளனர். அந்த எண்ணிக்கையில் பெண்கள் 2.90 கோடி, ஆண்கள் 2.78 கோடியாகும். மேலும் மூன்றாம் பாலினத்தை சார்ந்த வாக்காளர்கள் 7656.