

2026 மே மாத பொதுத்தேர்தல் முடிவுகளுக்கு பின், தமிழகத்தில் தற்போது 7 சட்டமன்றத் தொகுதிகள் காலியாகியுள்ளன. சட்டமன்றத் தேர்தல்கள் நடந்து முடிந்த சில மாதங்களிலேயே மீண்டுமொரு தேர்தல் களத்தை தமிழ்நாடு எதிர்நோக்குவது கவலையளிக்கிறது. ஒரு சட்டமன்ற தொகுதி காலியானதும் 6 மாதங்களுக்குள் அங்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதி.
மக்களவைத் தேர்தல்களுக்கான முழு செலவையும் மத்திய அரசு ஏற்கிறது. மாநில சட்டமன்ற தேர்தல்கள் மற்றும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான செலவுகளை அந்தந்த மாநில அரசுகளே ஏற்கின்றன. மாநிலப் பொதுத்தேர்தலுக்காக 2026-2027 நிதியாண்டில் ஒட்டுமொத்தமாக ஆயிரத்து முந்நூற்று இரண்டு கோடி ரூபாய்க்கும் அதிகமாக (₹1,302.65 கோடி) அரசு நிதியை செலவழித்தது. இதன் மூலம் 234 தொகுதிகளில், ஒரு தொகுதிக்குச் சராசரியாக 5 கோடி ரூபாய் வரை அரசுக்கு தேர்தல் செலவு ஏற்பட்டுள்ளது.
இதன்படி, தற்போது காலியாக உள்ள 7 தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடத்தத் தோராயமாக 35 கோடி ரூபாய் வரையிலும் மாநில நிதியிலிருந்து செலவாகும்.
இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து அந்தந்த தொகுதிகளில் தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அமலுக்கு வரத் தொடங்குகின்றன. இதனால், அப்பகுதிகளில் பொதுமக்களுக்கான வளர்ச்சி பணிகள் வெகுவாக பாதிப்புக்கு உள்ளாகின்றன.
மாநிலத்தில் அடிக்கடி இடைத்தேர்தல் வருவதால் மாநில கணக்கிலிருந்து தேவையின்றி அதிக நிதி செலவாவது, அரசு இயந்திரங்களின் வழக்கமான செயல்பாடுகள் பாதிக்கப்படுவது, இடைத்தேர்தல் பணியில் அதிக எண்ணிக்கையில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவதால் மாணவர்களின் கற்றல் பாதிக்கப்படுவது, தேர்தல் வன்முறைகள், மக்கள் நிதி மற்றும் விலை கொடுத்து வாங்க முடியாத நேரம் போன்றவை சிலரின் பொறுப்பற்ற செயல்களாலும் சுயநலம் சார்ந்த நடவடிக்கைகளாலும் வீணாவதைத் தேர்தல் ஆணையம் இனியும் அனுமதிக்க கூடாது. இவற்றைத் தேர்தல் ஆணையம், சட்டமன்றம் மற்றும் நீதிமன்றங்கள் தகுந்த சட்டத் திருத்தங்கள் மூலம் சரிசெய்ய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் ஒருவரின் இறப்பினால் ஒரு தொகுதி காலியானால், அங்கு இடைத்தேர்தல் நடத்துவதில் தவறில்லை. ஆனால், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களுக்கும் சார்ந்த கட்சிக்கும் எந்தவித நன்மையையும் செய்யாமல், சுயநலத்திற்காகவும் பதவிக்காகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்யும்போது, அவர்களை வெற்றி பெற செய்த வாக்காளர்களின் நம்பிக்கை சிதைக்கப்படுகிறது.
தேர்தல் ஆணையம் இவ்வாறான சூழல்களில், கடந்த தேர்தலில் இரண்டாம் இடத்தில் வந்தவரை சட்டமன்ற உறுப்பினராக அறிவிக்கலாம் அல்லது அதுவரை அருகாமையில் உள்ள சட்டமன்ற உறுப்பினரை பொறுப்பு சட்டமன்ற உறுப்பினராக நியமிக்கலாம். அரசுப் பொறுப்புகளில் காலியாக உள்ள உயர் பதவிகளில் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. (கேரளாவிற்கும் தமிழகத்திற்கும் ஒரே ஆளுநர் நியமிக்கப்படுவதை போல).
வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அதே தொகுதியில் வேறு கட்சியின் சார்பாகப் போட்டியிடுவது மக்களாட்சியின் கண்ணியத்தை குறைக்கும் செயலாகவே வாக்காளர்களால் பார்க்கப்படும்.
மொத்தத்தில் நாட்டின் நிதிநிலைமை மற்றும் மாநிலத்தின் நிதிநிலைமை சிக்கலாக இருக்கும் இந்த நேரத்தில், இவ்வாறான இடைத்தேர்தல்கள் நமக்கு இனியும் தேவையில்லை.
நிதியும் நீதியும் மக்களின் முன்னுரிமைகளாக மாற வேண்டிய காலமிதுவேயாகும்!