திக் திக் திக்... தொடர்கதை: மூன்றாவது கண் - அத்தியாயம் 2

இயற்கையைக் காக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தும் ஒரு நல்ல திகில் கதை!
Tamil series story | Moonravathu Kann
Tamil series story | Moonravathu Kann Image credit: Chatgpt
சூர்ய ரத்னா

சிங்கப்பூரின் முதல் பெண் தமிழ் நாவலாசிரியர் (மேற்கே உதிக்கும் சூரியன்), முன்னாள் ஆசிரியர், பயிலரங்கு பயிற்றுவிப்பாளர். அனுபவம் வாய்ந்த எழுத்தாளர். வானொலி, தொலைக்காட்சி நடிப்பு, குரல் நடிப்பு (2020, 2023 சிங்கப்​பூர்த் தேர்தல்கள் உள்பட), மொழிபெயர்ப்பு, சிறுகதைகள், நாவல்கள், தொலைக்காட்சி/ வானொலி கதை வசனம், கல்வி அமைச்சின் கதைநூல்கள் மற்றும் பெரிய புத்தகங்கள் உள்பட சுமார் 60க்கும் மேற்பட்ட சிறுவர் கதைகள் படைத்துள்ளார். 2023-ல் நந்தவனம் பெளண்டேஷனின் ‘சாதனைப் பெண்கள் விருது (சிங்கப்பூர்)’ பெற்றார். சொந்த யூடியூப் சேனல் ந​டத்துகிறார். (Cozy Library, Ratham Singapore True Crime Stories). தற்போது கல்கி ஆன்லைனில் எழுதி வருகிறார்.

Updated on: 
MM strip
MM strip
இதையும் படியுங்கள்:
திக் திக் திக்... தொடர்கதை: மூன்றாவது கண் - அத்தியாயம் 1
Tamil series story | Moonravathu Kann

திக் திக் திக்... சிறுகதை: மூன்றாவது கண் - அத்தியாயம் 2

“நீ கேட்ட வார்த்தை 'பெர்கி’னா வெளியேறு’னு அர்த்தம். ஆனா நாங்க யாருமே எதுவும் சொல்லலை. ஏதோ வார்த்தை உன் காதிலே அப்படி விழுந்திருக்கலாம்.”

சருகுகளும் சுள்ளிகளும் கனமாக மிதிபடும் ஓசை கேட்டது. யாருமில்லை. லாம் குழுவிலிருந்த தோழி சீக்கிரமாகத் தன் பையைத் திறந்து, சாப்பிடுவதற்காக வைத்திருந்த ஆப்பிள் பழத்தை எடுத்தாள். லாம் மோதி அடிபட்ட மரத்தின் அடியில் பழத்தைப் பயத்துடன் வைத்தாள். கைகளைக் கூப்பி அவள் மொழியில் வழிபாட்டுச் சொற்களைச் சொல்லி வணங்கினாள். தாய்லாந்து மொழி, புத்த மந்திரங்கள் போலத் தோன்றியது.

கலக்கத்துடன் திரும்பி வந்தவள், “நாம இந்த இடத்துக்குள்ளே வரலை. இந்த இடம் நம்மை உள்ளே வர அனுமதிச்சிருக்கு. நாம இங்கிருந்து வெளியே போக விடாம கூடப் பண்ணலாம். சீக்கிரம் கிளம்புவோம்,” என்றாள்.

அவள் சொன்னதற்காக இல்லையென்றாலும், லாமை மருத்துவரிடம் அழைத்துச் செல்வதற்குக் கிளம்பியாக வேண்டும். இளைஞர்கள் தாங்களே பார்த்துக் கொள்வதாகச் சொல்ல, அனிதாவும் ஜானுயும் தங்கள் வழியில் தொடர்ந்தனர்.

“அந்தப் பொண்ணு என்ன, திடீர்’னு பழத்தை எல்லாம் எடுத்து மரத்துக் கிட்டே வைக்குது? இது கோஸ்ட் மன்த்கூட இல்லையே?”

“நான்தான் சொன்னேனே, அங்கே என்னவோ இருந்தது’னு?”

“அங்கே என்னவோ இருந்தது’னு, அங்கிருந்தவங்களே பார்க்கலை, உணரலை. அந்தப் பொண்ணு சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கிட்டு, ஒரு ‘அட்டன்ஷன்-சீக்கிங்’ வேலையைப் பார்த்துட்டா! என்னவோ பெரிய பக்திமான் மாதிரியும், மத்தவங்க மேலே அவளுக்கு மட்டும்தான் அக்கறை இருக்கிற மாதிரியும்! இந்த இடம் போகவிடாம பண்ணுமாம்? ரியலி?”

ஜானு சமாதானம் ஆகவில்லை. வாதமும் செய்யவில்லை.

ஒரு சிறிய குடியிருப்பின் சிதைந்த மிச்சங்கள் தென்பட்டன. ஆங்காங்கே பாசி படர்ந்த செங்கற்களும், தடிமனான மரப்பலகைத் துண்டுகளும் மண்ணோடு மண்ணாகவும் கிடந்தன. காலத்தால் துருப்பிடித்த வேலிகள், அவற்றைச் சுற்றிப் படர்ந்து வளர்ந்திருந்த புதர்களும் தாவரங்களும், சற்றுத் தள்ளி, எளிதில் செல்ல முடியாத புதர்கள் நிறைந்த இடத்தில் மூடப்பட்ட நிலையில் ஒரு பழைய கிணறு என மறந்தும் மறைந்தும் போன என்றோ ஒரு காலகட்டத்து வாழ்க்கையின் மீதங்கள். 

காலையில் ஜானு வருவதற்கு முன் அனிதா அருகிலிருந்த உணவகத்தில் புதிய நாப்கின் மாற்றியிருந்தாள்.

இப்போது சேனிட்டரி நாப்கின் கூடுதல் ஈரமான காரணம் புரியவில்லை. ஈரப்பதம் அதிகரித்த வெப்பநிலை? வியர்வை? லாமின் பிரச்னையால் நேரம் கடந்தது? உடல் வாடை வருவது போலவும் அனிதாவுக்கு அசெளகரியமாக இருந்தது.

அருகில் கழிவறையும் இல்லை. கைத்தொலைபேசியைத் தன் பையில் போட்டு ஜானுவிடம் நீட்டினாள்.       

“யாராவது வரதுக்குள்ளே கீழே போய்ப் பேடு (pad) மாத்திட்டு வந்திடறேன். ரொம்ப கசகச’னு இருக்கு.”

“சிசிடிவி இருக்கப் போகுது, பார்த்து மறைவா போய்க்க.”

“அங்கேயே இல்லை. இந்த இடிஞ்சு போன இடத்திலேயா சிசிடிவி இருக்கப் போகுது?” என அலட்சியத்துடன் விரைந்தாள் அனிதா.  

சிதிலமடைந்த ஓர் அனாதைச் செங்கல் படிக்கட்டில் ஜானு ஓய்வாக அமர்ந்தாள். ஒவ்வொரு சலசலப்பும் ஒரு நோக்கத்துடன் நிகழ்ந்து கொண்டிருக்கிறது, நிழல்களுக்குள் பதுங்கியபடி ‘என்னவோ’வின் விழிகள் பார்த்துக் கொண்டிருக்கின்றன என்ற எண்ணத்தை மட்டும் அவளால் உதற முடியவில்லை.

மறைவான, தாழ்வான பகுதிக்குச் சென்றதும், டீ-ஷர்ட் கீழே மறைக்கும் அளவுக்கு லெக்கிங்சையும் உள்ளாடையையும் ஜானு கீழிறக்கினாள். அசெளகரியம். யாராவது பார்த்து விடுவார்கள் என்ற கூச்சம், அவசரம்.

புது நாப்கினுடைய பிளாஸ்டிக் கவருக்குள் திணிக்கும் முன்பாகவே இரத்தத்தில் நனைந்த நாப்கின் கைதவறிக் கீழே விழுந்தது. பிளாஸ்டிக்கில் சுற்றினாலும் குப்பைத்தொட்டி கண்ணில் படும்வரை இரத்த நாப்கினைத் தன் பையில் வைக்க வேண்டும்.

கீழே கிடந்த இரத்த நாப்கினை புதர்களுக்குள் வீசினாள். யாருக்குத் தெரியப் போகிறது?

சுருட்டப்பட்டிருந்த நாப்கின் பசை விட்டு திறந்து கொண்டது. அவளுக்கும் அவள்  உதைத்திருந்த இரத்த நாப்கினுக்கும் நடுவில் ஜானு சொன்ன அந்த ‘என்னவோ’, உருவம் பெற்றிருந்ததை அவள் உணரவில்லை. ‘என்னவோ’வின் முகம், உடல், கூரிய நகங்கள் எல்லாவற்றையும் போர்த்திப் படர்ந்திருந்தது, பாசி இறுகப் பற்றியிருந்த மரப்பட்டைத் தோல். கண்கள் அணைந்து கொண்டிருந்த நெருப்புத் தணலின் அம்பர் நிறத்தில் ஒளிர்ந்தன. மண்டை ஓடு மூக்கு. அதாவது, துவாரம் மட்டுமே. அனிதா முன்னால் நடந்து போக, நின்றிருந்த இடத்திலிருந்தே ‘என்னவோ’வின் வாயின் இருளிலிருந்து நாக்கு நீண்டு கொண்டே போய் இரத்த நாப்கினைத் தொட்டது.

‘கைகளைக் கழுவணும், பிசுபிசுக்குது,’ என்ற அனிதாவின் சிந்தனை கலைந்தது. உலகத்தையே இருளால் போர்த்திவிட வேண்டும் என்கிற ஒரே நோக்கத்துடன் இருண்டு வந்த வானத்தால்.

நாப்கினிலிருந்த மாதவிடாய் இரத்தம் முழுவதும் ‘என்னவோ’வால் உறிஞ்சப்பட்டது. நாப்கின் வெள்ளையாக மாறிப் பின்னர் கருகிக் கறுத்ததும், அனிதாவுக்குக் காய்ச்சல் வந்து உடல் நடுங்கத் தொடங்கியதும் ஒரே நேரத்தில் நிகழ்ந்தது.

‘காய்ச்சலா....? கொசு கடிச்சிடுத்தா?’    

குழப்பம். தாழ்வான பகுதியிலிருந்து மேலேறுவதற்காக அனிதா புல்மேட்டில் தன் வலது காலை ஊன்றினாள்.

Tamil series story | Moonravathu Kann
Tamil series story | Moonravathu Kann Image credit: Chatgpt

‘என்னவோ’வின் கரம், அனிதாவின் இடது காலைப் படக்கெனப் பிடித்து ஒரே இழு. தடுமாறிக் குப்புறச் சறுக்கி விழுந்தாள். அனிதாவின் மூளை சில வினாடிகள் ஸ்தம்பித்தது. எழுந்தாள். மேலேறினாள். இழுக்கப்பட்டாள். சற்றுத் தள்ளிப் போய் ஏற முயற்சிக்கும் முன்னரே அதே இடத்தை அடைந்தாள். மறுபடியும் முன்நோக்கி விரைய, மீண்டும் ஆரம்பித்த இடம்.

எல்லா பக்கமும் ஒரே மாதிரி காட்சிகள். பதட்டம். இறுக்கமான மனநிலை. திசை தெரியாமல், ஒவ்வொரு திருப்பத்திலும் மூச்சிறைக்கத் தொலைந்து கொண்டிருந்தாள்.

தொலைவில் ஜானு காத்திருந்தது தெரிந்தது. அங்கே நல்ல வெயில்.

“ஜானு! ஜானு!”

காய்ச்சலும் தொண்டை வரட்சியும் அனிதாவைச் சத்தமாக ஒலி எழுப்ப விடவில்லை.

‘இவ்வளவு நேரமாகிவிட்டது. என்னைக் காணவில்லை என்று தேடக்கூடவா மாட்டாள்?’

அனிதாவால் பலவீனமாக முணுமுணுக்கத்தான் முடிந்தது. கால்கள் தடுமாறின. கண்கள் இருண்டன. தரையில் சாய்ந்தாள்.

தொண்டையின் ஆழத்திலிருந்து உறுமலா முனகலா எனப் புரியாத ஓசையை ‘என்னவோ’ எழுப்பியது. ‘சண்டையிடு அல்லது தப்பியோடு’ தருணம்.  தப்பிப்பது இரண்டாம் பட்சம். எதனோடு சண்டை போடுகிறோம் என்றே தெரியவில்லையே.... அதுவே ஒரு மிரட்டல். பயம் வளர்ந்ததே தவிரக் குறையவில்லை.

‘ப்ளீஸ், யாராவது வாங்களேன்.....’

புற்களின் ஊடே சரசர என்ற சத்தம். அனிதாவின் காலணிகள் மீதேறியவை – சிவப்பு எறும்புகள். ஒவ்வொன்றும் நடுவிரல் நீளத்துக்கும் அகலத்துக்கும் இருந்தன. சிவப்பு எறும்புகள் பெரியவைதான். இவ்வளவு பெரிதா? பயத்தில் தட்டிவிட முயன்று கடிபட, வலியில் துடிதுடித்தாள் அனிதா. கவச உடல் இயந்திரங்களாய் அவள்மீது ஏறிய கால்கள். அவற்றின் பகைப்பட்டியலில் அவளது பெயர் இருந்திருக்க வேண்டும். போர் வெறியுடன் பத்து, நூறு, ஆயிரம் எனப் படையெடுத்து வந்தன.

“ஆ...!”

காலணிகளை முழுவதுமாக துளைத்தன. இரும்புக் கம்பிகளையும் வெட்டும் வலிமையோடு எறும்புகள் தங்களின் அரிவாள் தாடைகளால் அனிதாவின் சதையைப் பற்றிக் கிழித்தன.

“பெர்கி! பெர்கி! பெர்கி!”

கணுக்கால்கள், கெண்டைக்கால்கள், முழங்கால்கள், தொடைகள். முகம்வரை ஒவ்வொரு கடியும் நெருப்பில் காய்ச்சிய ஊசிகளாய் உடலுக்குள். நரக வேதனை.

“பெர்கி! பெர்கி! பெர்கி!”

இருட்டிக் கொண்டு வந்தது பொழுது மட்டுமல்ல...

“அனி! அனி!”

ஜானுவின் குரல். முகத்தில் நீர்.

கண் விழித்த அனிதாவுக்குள் இன்னும் நடுக்கம் இருந்தது.

“அரை மணி நேரமாச்சு, போன ஆளைக் காணோம்’னு தேடிப் பார்த்தா, இங்கே கிடக்கிறே...?”

‘அரை மணி நேரந்தானா?’

வெப்பமும் வெளிச்சமுமாக இருந்தது வெயில். எறும்புகள் நினைவுக்கு வந்தன. தன் கைகால்களை, உடலைப் பார்த்தாள். உராய்ந்த அடையாளங்கள், சிறு காயங்கள் மட்டுமே.

“ஆம்புலன்ஸ் கூப்பிடவா?” என்று ஜானு கேட்டுக் கொண்டிருக்கும்போதே கடுங்காய்ச்சலின் தாக்கம் தாங்காமல் அனிதா மயங்கிப் போனாள். 

நேச்சர் ட்ரெக்கிற்குள் நுழைவதற்கு முன் அனிதா போட்ட புகைப்படத்திற்குப் புதிதாக ஒரு பதிவு.

“நூறு வருஷமா அங்கே ஒரு பெனுங்கு (penunggu) வசிக்குதாம். அந்த வட்டாரத்திலே வாழ்ந்த என் பாட்டி சொன்னது. பழங்களைப் பறிக்கிறப்போ, 'பசிக்குது, இரண்டு பறிச்சிக்கிறேன்’னு' அந்தக் காலத்திலே அனுமதி கேட்பாங்களாம். நேச்சர் ட்ரெக்கை உருவாக்கிறதுக்கு முன்னாலே கண்ட்ராக்ட் எடுத்தவங்க வழிபாடு பண்ணாங்களாம். பெனுங்கு பாதுகாப்பிலே இருக்கிற இடம். காட்டுக்குள்ளே ஒரு ஆன்மா. நம்ம ‘ஈக்கோ சிஸ்டம்’குள்ளே கண்ணுக்குத் தெரிந்தது தெரியாதது எல்லாத்துக்கும் ஒரு இடம் இருக்கிறதை நினைச்சாலே ரொம்ப ஆச்சரியம், இல்லை?”  

அதற்கு அனிதா பதில் போடச் சில நாட்கள் எடுக்கலாம். போடாமலும் இருக்கலாம்.  

பொழுது சாய்ந்தது. மறுநாள் காலை திறக்கப்படும் வரை நேச்சர் ட்ரெக் மூடப்பட்டது. ஆள் நடமாட்டம் இல்லை. அப்போதும் ‘பெனுங்கு’ தூங்கவில்லை. அசைவற்ற முகத்தில், இமைக்காத தணல் விழிகள். அதன் பார்வையில், மர வேர்களின் ஆழம். அந்த விழிகளில் இரக்கமும் இல்லை. வன்மமும் இல்லை. காலங்காலமாகத் தொடர்ந்துவரும் ஒரு காவலனின் அசைக்க முடியாத கடமையுணர்வு மட்டுமே இருந்தது.

(நிறைந்தது)

இதையும் படியுங்கள்:
மினி தொடர்கதை: பாம்பே டோஸ்ட் - அத்தியாயம் 1
Tamil series story | Moonravathu Kann
logo
Kalki Online
kalkionline.com