

தவெக தலைவரும், முதல்வருமான விஜய் 200 யூனிட் இலவச மின்சார திட்டத்திற்கு முதலில் கையெழுத்து போட்டுள்ளார். 200 யூனிட் இலவச மின்சாரம் யாருக்கெல்லாம், கிடைக்காது என்பது குறித்து விரிவாக இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தமிழக சட்டசபைக்கு தேர்தல் முடிந்து கடந்த 4-ந்தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டது. 234 சட்டமன்றத் தொகுதிகளை கொண்ட சட்டமனறப் பேரவைத் தேர்தலில் 108 இடங்களுடன் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆட்சி அமைக்க தேவையான 118 எம்எல்ஏக்கள் இல்லாததால் விஜய் ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்நிலையில் காங்கிரஸ், இடது சாரிகள், விசிக, ஐ.யு.எம்.எல். ஆதரவு அளித்ததால் தவெக ஆட்சி அமைப்பதற்கான 118 இடங்களை தாண்டி 120 இடங்கள் கிடைத்துள்ளன.
இதனை தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி. ஜோசப் விஜய், நேற்று தமிழ்நாட்டின் 13-வது முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார்.
சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவருக்குப் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
இதையடுத்து முதலமைச்சர் விஜய் விழா மேடையிலேயே முதல் கையெழுத்து இட்டார். இதுவரை இல்லாத நிகழ்வாக விழா மேடையில் முக்கிய கோப்புகளில் கையெழுத்து இட்டார். அதில் முதலாவதாக 200 யூனிட் மின்சாரம் இலவசம் திட்டத்தில் கையெழுத்து இட்டார். இரண்டாவதாக பெண்களுக்கு எதிரான குற்றங்களை கட்டுப்படுத்துவற்காக சிங்கப்பெண் சிறப்பு அதிரப்படையை உருவாக்கும் திட்டத்தில் கையெழுத்திட்டார். மூன்றாவதாக போதைப்பொருள் தடுப்பு படை உருவாக்கும் கோப்பிலும் முதலமைச்சர் விஜய் கையெழுத்து இட்டார்.
தமிழ்நாட்டில் புதிதாகப் பதவியேற்றுள்ள முதலமைச்சர் விஜய், இரு மாதங்களுக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்திற்கான கோப்பில் தனது முதல் கையெழுத்தை இட்டுள்ளார். இத்திட்டத்தில் பொதுமக்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் நிலவிவந்த நிலையில் இதுகுறித்து தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.
அதன்படி இரு மாதங்களுக்கு மொத்தம் 500 யூனிட்டுகளுக்குள் மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு மட்டுமே இந்த 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும். அந்த வகையில் 2.48 கோடி வீட்டு இணைப்புகளில் 2 கோடி இணைப்புகள் 500 யூனிட்டுக்கு கீழ்தான் மின்சாரத்தை பயன்படுத்துகின்றன.
இது பல நடுத்தர ஏழை எளிய குடும்பங்களின் மின்சார சுமையை கணிசமாக குறைக்கும் குறைக்கும் என்பது உண்மை. இந்தத் திட்டத்திற்கு ஆண்டுதோறும் ரூ. 100 கோடி மானியம் வழங்கப்படும் என மாநில அரசு சுட்டிக்காட்டியுள்ளது.
500 யூனிட்டு மேல் மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோர்களுக்கு 200 யூனிட் இலவசம் மின்சாரம் வழங்கப்படாது என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், வாக்குறுதியாக விஜய் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என கூறியிருந்தார். ஆனால், தற்போது 500 யூனிட் வரை பயன்படுத்தும் நுகர்வோர்களுக்கு மட்டும் 200 யூனிட் மின்சாரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
மாறாக அவர்களுக்கு 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தினால் 100 யூனிட் மின்சாரம் இலவசம் என்ற பழையை நடைமுறையே தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது.