

தமிழ்நாட்டில் தவெக தலைமையிலான அரசு பொறுப்பேற்றதில் இருந்து எந்தவொரு துறையில் மோசடி அல்லது குளறுபடி நடந்தாலும் உடனடியாக விமர்சனங்கள் கிளம்புவதற்கு முன்பாக விரைவான துறை ரீதியான நடவடிக்கைகளை முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு எடுத்து வருகிறது.
தவெக விஜய் முதல்வராக பதிவியேற்றத்தில் இருந்து அரசியல் களம் நாள்தோறும் அதிரடியான மாற்றங்களுடன் பட்டையை கிளப்பி வருகின்றது. அதனை உண்மையாக்குவது போல் டாஸ்மாக் கடைகள் மூடல், சிங்கப்பெண் திட்டம், போதைப்பொருள் தடுப்பு, பெண்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை என்று மக்களுக்கு தேவையானதை விஜய் ஒவ்வொன்றாக செய்து வருகிறார்.
இதற்கிடையே நடிகர் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம், சின்னத்திரை சங்கம் என பலரும் முதலமைச்சர் விஜய்யை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வைத்து வருகின்றனர். இந்நிலையில், அவர்களது முதல் கோரிக்கைக்கு விஜய் பச்சைக்கொடி காட்டியுள்ளார்.
அதாவது 1957-ஆம் ஆண்டு தமிழ்நாடு திரையரங்குகள் (ஒழுங்குமுறை) விதியின் கீழ், திரையரங்குகளுக்கு வழங்கப்படும் 'C' படிவ உரிம நிபந்தனை 14-A-இன் படி, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து திரையரங்குகளிலும் தினசரி நான்கு காட்சிகள் திரையிடப்பட்டு வருகிறது.
மேலும், உள்ளூர் பண்டிகை நாட்கள் அல்லது பொது விடுமுறை நாட்களில், மேற்கண்ட நான்கு காட்சிகளுக்கு கூடுதலாக ஒரு சிறப்புக் காட்சி, அதாவது நாளொன்றுக்கு ஐந்து காட்சிகள், மாவட்ட ஆட்சியர்கள் அல்லது சென்னை காவல் ஆணையர் ஒப்புதலுடன் திரையிடப்பட்டு வருகிறது.
திரைப்படத் துறையைச் சேர்ந்த உறுப்பினர்கள், கடந்த மே 16-ம்தேதி முதலமைச்சர் விஜய்யை சந்தித்து, பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். அக்கோரிக்கைகளில், தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் அனைத்துத் திரைப்படங்களையும் ஒரு நாளைக்கு ஐந்து காட்சிகளாகத் திரையிட அனுமதிக்க வேண்டும் என்பதே அவர்களது முதன்மையான கோரிக்கையாக இருந்தது.
இதையடுத்து தமிழ்நாட்டிலுள்ள அனைத்து திரையரங்குகளிலும் புதிதாக வெளியாகும் தமிழ்த் திரைப்படங்களுக்கு, முதல் ஏழு நாட்கள் ஒரு நாளைக்கு ஐந்து காட்சிகள் திரையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், வார இறுதி நாட்கள், பொது விடுமுறை நாட்கள், உள்ளூர் பண்டிகை நாட்களிலும் தினசரி 5 காட்சிகள் திரையிட அனுமதி வழங்கி முதல்வர் விஜய் உத்தவிட்டுள்ளார்.
இந்தக் காலகட்டங்களில் கூடுதல் காட்சியை திரையிடுவதற்கு, உரிமம் வழங்கும் அதிகாரிகளிடமிருந்தோ அல்லது மாநில அரசிடமிருந்தோ திரையரங்கு உரிமையாளர்கள் அனுமதி பெறத் தேவையில்லை என்று திரைத்துறையினரின் கோரிக்கைகளை பரிசீலித்து, தியேட்டர் விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்தாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் விஜய்யின் இந்த அறிவிப்புக்கு ரசிகர்களும் திரையரங்கு உரிமையாளர்களும் நன்றி தெரிவித்துள்ளனர்.
ரோகிணி சில்வர் ஸ்கிரீன்ஸின் எக்ஸ் தள பதிவில், “எங்கள் கோரிக்கையை சாதகமாகப் பரிசீலித்து, புதிதாக வெளியாகும் அனைத்துப் படங்களுக்கும், வெளியான நாளிலிருந்து தொடர்ந்து ஏழு நாட்களுக்கும், அத்துடன் அனைத்து வார இறுதி நாட்கள் மற்றும் பொது விடுமுறை நாட்களிலும், எந்தவொரு கூடுதல் அரசாணை அல்லது சிறப்பு அனுமதியும் இன்றி ஐந்து காட்சிகளை நடத்த வழிவகை செய்த தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள். இந்த முடிவு, திரைப்படக் காட்சித் துறைக்கு பெரிதும் ஆதரவளிப்பதோடு, தமிழகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கும் பயனளிக்கும்.” கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே சமீபத்தில் தமிழகத்தில் திரைப்பட டிக்கெட் கட்டணத்தை ரூ.250 ஆக நிர்ணயிக்க வேண்டும் என திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் தமிழக அரசிடம் சமீபத்தில் கோரிக்கை வைத்திருந்தார். ஆனால் டிக்கெட் விலை உயர்வு குறித்த கோரிக்கை தொடர்பாக இப்போதைக்கு முதலமைச்சர் விஜய் எந்தவொரு உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.