

கரண்ட் பில் மீண்டும் திடீரென 3 அல்லது 4 மடங்காக அதிகரித்ததாக இணையதளத்தில் மக்கள் அதிர்ச்சியுடன் பதிவு செய்துள்ளது தற்போது பேசப்படும் தகவலாகி வருகிறது. இந்த தகவலை வெறும் செய்தியாக அனைவராலும் கடந்து போக முடியாது. ஏனெனில் கரண்ட் பில் என்பது அனைவருக்கும் பொதுவான விஷயம்.
பல லட்சம் குடும்பங்களுக்குக் கூடுதல் மின் கட்டணம் வந்துள்ளதாகப் புகார்கள் பதிவாகியுள்ளதாகவும் குறிப்பாக தவெக ஆட்சியில்தான் மின் கட்டணம் உயர்ந்துள்ளதாகப் பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் தரப்பில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
அதற்கு காரணம் தவெக அரசு தனது தேர்தல் அறிக்கையில் வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்றும் இந்த சலுகை 500 யூனிட்டுகளுக்கு குறைவாக பயன்படுத்துபவர்களுக்கு பொருந்தும் என அறிவித்திருந்தது. அதேசமயம் 500 யூனிட்டுகளுக்கு அதிகமாக பயன்படுத்துபவர்களுக்கு எந்த வித்தியாசமும் இல்லாமல் பழைய மாதிரி 100 யூனிட் இலவசமாக வழங்கப்படும் எனவும் கூறப்பட்டது.ஆனால் மாத அடிப்படையில் மின் கட்டண கணக்கீடு மற்றும் 200 யூனிட் இலவச மின்சாரம் என்ற வாக்குறுதிக்கு மாறாக, 500 யூனிட்டிற்குள் மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளுக்கு மட்டுமே 200 யூனிட் இலவசம் என முதலமைச்சர் விஜய் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து தவெகவின் தேர்தல் வாக்குறுதி மீறப்பட்டதாக அல்லது மாற்றப்பட்டதாக அப்போதே பெரும் விமர்சனத்திற்குள்ளானது. மேலும் பழையபடி இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின் கணக்கீடு செய்வதும் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
ஆனால் ஆட்சி மாறியதால் மின்கட்டணம் அதிகமானதா என்பது உறுதிப்படுத்தப் படாத தகவலாகவே உள்ளது. சமூக ஊடகங்களில் அரசியல் காரணங்களால் மிகைப்படுத்தப்பட்ட அல்லது தவறானதாகவும் இருக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
முறையற்ற மீட்டர் வாசிப்பு (Meter reading), தாமதம் மற்றும் கணக்கீட்டுத் தவறுகளால் அதிக கட்டணம் விதிக்கப்படுவதாக லட்சக்கணக்கான குடும்பங்கள் கூடுதல் மின்கட்டணம் செலுத்துவதாக புகார் தெரிவித்துள்ள நிலையில், இது அரசியல் விவாதப் பொருளாகியுள்ளது எனலாம்.
ஏற்கனவே எழுந்த பொதுமக்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து, தமிழ்நாடு மின் விநியோகக் கழகம் (Tamil Nadu Power Distribution Corporation Limited ) நிறுவனம் கள ஆய்வுகளை தீவிரமாக முன்னெடுத்து, தவறான பில் வழங்கும் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.மின்சாரத் துறை அமைச்சர் மற்றும் அரசு தரப்பு, முறையான சீரமைப்புப் பணிகளுக்கும் வெளிப்படைத்தன்மைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அதிகப்படியான இருமாதக் கட்டண ரசீதுகள், தாமதமான மீட்டர் அளவீடுகள் மற்றும் இலவச மின்சாரப் பலன் மறுக்கப்படுதல் ஆகியவை குறித்துப் பொதுமக்களிடமிருந்து வந்த புகார்களைத் தவிர, பல பிரிவுகளில் தொடரும் முறையற்ற கட்டண வசூல் நிகழ்வுகளும் அதிகாரிகளால் சுட்டிக்காட்டப்பட்டு அதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
தவறான மீட்டர் அளவீடுகள், பழுதடைந்த மீட்டர்கள் மற்றும் கட்டண வசூல் செயல்முறையில் உள்ள குறைபாடுகள் காரணமாக வீட்டு நுகர்வோருக்குத் தவறான மற்றும் மிகைப்படுத்தப்பட்ட கட்டண ரசீதுகள் வழங்கப்படுவதாகவும், இது பயன்பாட்டு நிறுவனத்தின் நிதிநிலையையும் பாதிப்பதாகவும் கூறப்பட்ட நிலையில் தமிழ்நாடு மின் விநியோகக் கழகம், கட்டண மதிப்பீடுகளைக் கடுமையாக்குமாறு தனது களப்பணியாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளதுடன், தவறான கட்டணப் பட்டியல்களுக்குப் பொறுப்பான அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
அதே நேரத்தில், அனைத்து மக்களுக்கும் மின்கட்டணம் கடுமையாக உயர்ந்துவிட்டது என்ற தகவலும் உறுதிப்படுத்தப்படவில்லை. மாறாக, 500 யூனிட்டிற்குள் மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரத் திட்டம் நடைமுறைக்கு வந்ததால், பல குடும்பங்களின் கட்டணம் குறைந்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
மின்கட்டணம் அதிகமாக பல காரணங்கள் இருக்கலாம். தமிழ்நாட்டில் மின்கட்டணம் பொதுவாக இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வசூலிக்கப்படுகிறது. ஆகவே, ஒரு மாத மின்பயன்பாடு அதிகரித்தாலோ அல்லது பருவநிலை காரணமாக (உதாரணமாக கோடையில் , ஏசி பயன்பாடு போன்றவைகளால்) மின்சார பயன்பாடு உயர்ந்தாலோ, கட்டணமும் அதிகமாகத் தோன்றலாம். அரசு சார்பில் மின்கட்டணம் உயர்வுக்கு மீட்டர் ரீடிங் தவறுகள், மென்பொருள் கணக்கீட்டு பிரச்சினைகள் போன்ற காரணங்களும் விவாதிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்கட்டண உயர்வு ஏற்பட்டதா என்பதை உறுதிப்படுத்த, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (TNERC) அல்லது அரசு வெளியிடும் அதிகாரப்பூர்வ கட்டண அறிவிப்புகளைப் பார்க்க வேண்டும்.மேலும் உங்கள் மின் ரசீதில் உள்ள யூனிட் பயன்பாடு, பழைய கட்டணத்துடன் ஒப்பீடு உடன் அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஆகியவற்றைச் சரிபார்ப்பது நல்லது.
இந்த விதிமுறைகளை மீறி உங்களுக்கு அதிக மின்கட்டணம் வந்தால் உடனடியாக உங்கள் பகுதியில் உள்ள மின்சார அலுவலகத்துக்கு சென்று புகார் அளிக்கலாம். காரணம் என்ன என்றும் அறியலாம்.