

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்நிலையில் அரிசி, சர்க்கரை, சமையல் எண்ணெய், தக்காளி மற்றும் வெங்காயம் உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்வு சாமானிய மக்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் சமையல் எண்ணெய் மீதான அடிப்படை இறக்குமதி வரியை மத்திய அரசு குறைத்தது. இதனால் சந்தையில் சமையல் எண்ணெயின் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதுகுறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.
இந்நிலையில் தமிழக மக்களின் பட்ஜெட்டைப் பதம் பார்க்கும் விதமாக அத்தியாவசியப் பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்திருப்பது பலருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. இந்த விலை உயர்வால், நடுத்தர மற்றும் ஏழை மக்கள் அன்றாட செலவுகளை சமாளிக்கத் திணறி வருகின்றனர்.
மாதந்தோறும் வாங்கும் சம்பளம் மட்டும் உயராத நிலையில், அடிக்கடி அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வது நிதி நெருக்கடியை ஏற்படுத்துகிறது. இதனால் சாமானிய மக்கள் கடன் வாங்கும் சூழலுக்குத் தள்ளபடுகின்றனர்.
கடந்த சில நாட்களில் அரிசி விலை உயர்வு தான் மக்களை அதிகம் வாட்டியது. சமீபத்திய நாட்களில் அரிசியின் விலை திடீரென 20%-க்கும் மேல் உயர்ந்தது. அரிசியின் விலை தற்போது ரூ.300 முதல் ரூ.600 வரை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு மேலும் தொடர வாய்ப்புள்ளது என வியாபாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாட்டில் அரிசி விலை உயர்வால், ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த அரிசி மூட்டைகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.
அரிசியின் விலையேற்ற விவரம்:
* ரூ.1,400-க்கு விற்பனயான 26 கிலோ டீலக்ஸ் பொன்னி அரிசி தற்போது ரூ.1,800-க்கு விற்பனையாகிறது.
* ரூ.1,900-க்கு விற்பனயான 26 கிலோ வெள்ளை பொன்னி அரிசி தற்போது ரூ.2,300-க்கு விற்பனையாகிறது.
* ரூ.1,600-க்கு விற்பனயான 26 கிலோ பப்பெட் பொன்னி அரிசி தற்போது ரூ.1,950-க்கு விற்பனையாகிறது.
* ரூ.900-க்கு விற்பனயான 26 கிலோ இட்லி அரிசி தற்போது ரூ.1,200-க்கு விற்பனையாகிறது.
* ரூ.1,500-க்கு விற்பனயான 26 கிலோ பச்சரிசி தற்போது ரூ.1,800-க்கு விற்பனையாகிறது.
* ரூ.1,800-க்கு விற்பனயான 25 கிலோ சிவாஜி பொன்னி அரிசி தற்போது ரூ.2,400-க்கு விற்பனையாகிறது.
* ரூ.3,300-க்கு விற்பனயான 30 கிலோ பாஸ்மதி அரிசி தற்போது ரூ.3,600-க்கு விற்பனையாகிறது.
அரிசி விலை மட்டுமின்றி மற்ற அத்தியாவசியப் பொருட்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்துள்ளது.
* ரூ.132-க்கு விற்பனையான 1 கிலோ துவரம் பருப்பு இப்போது ரூ.142-க்கு விற்பனையாகிறது.
* ரூ.120-க்கு விற்பனையான 1 கிலோ உளுந்து இப்போது ரூ.127-க்கு விற்பனையாகிறது.
* ரூ.88-க்கு விற்பனையான 1 கிலோ கடலை பருப்பு இப்போது ரூ.93-க்கு விற்பனையாகிறது.
* ரூ.98-க்கு விற்பனையான 1 கிலோ பாசிப் பருப்பு இப்போது ரூ.110-க்கு விற்பனையாகிறது.
* ரூ.260-க்கு விற்பனையான 1 கிலோ சீரகம் இப்போது ரூ.310-க்கு விற்பனையாகிறது.
இது மொத்த விலை நிலவரம் தான். பொதுமக்கள் சில்லறை விற்பனைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்களை வாங்கும் போது, மொத்த விலையைக் காட்டிலும் ரூ.5 முதல் ரூ.10 வரை கூடுதலாக கொடுக்க வேண்டியிருக்கும்
விலைவாசி உயர்வில் இருந்து தப்பிக்க என்ன செய்யலாம்?
* அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு நடுத்தர மக்களை வெகுவாக பாதித்தாலும், சிக்கனமாக செலவு செய்தால் இந்த பாதிப்பிலிருந்து ஓரளவு தப்பிக்க முடியும்.
* அத்தியாவசியப் பொருட்களை சில்லறை விலையில் வாங்காமல், ஒரு மாதத்திற்குத் தேவையான மளிகைப் பொருட்களை மொத்தமாக வாங்கி வைப்பது சிறந்தது. இதன்மூலம் அடிக்கடி செலவு செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.
* விலைவாசி உயர்வை சமாளிக்க பட்ஜெட் போட்டு, சிக்கனமாக செலவு செய்யலாம்.
* தேவையற்ற செலவுகளைக் குறைத்து அவசிய மற்றும் அத்தியாவசிய செலவுகளுக்கு முன்னுரிமை அளிக்கலாம்