

இந்திய அளவில் ஆதார் கார்டு மிக முக்கிய தனிநபர் ஆவணமாக இருக்கிறது. வங்கிக் கணக்கு முதல் அரசுத் திட்டங்கள் வரை அனைத்திலும் ஆதார் எண்ணை இணைப்பது அவசியம். வங்கிக் கணக்கு மற்றும் பான் கார்டுடன் ஆதாரை இணைப்பது கட்டாயம் என மத்திய அரசு ஏற்கனவே உத்தரவிட்டது.
இதற்கு கால அவகாசமும் வழங்கப்பட்ட நிலையில், இன்னமும் கூட பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காமல் சிலர் உள்ளனர். இந்நிலையில் தமிழக விவசாயிகள் வேளாண் மானியங்கள் மற்றும் சலுகைகளைப் பெற ஆதார் கட்டாயம் என தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழக அரசு சார்பில் விவசாயிகளுக்கு உர மானியம், பயிர்க் காப்பீடு, மழைக்கால நிவாரணம் மற்றும் குறுவை சாகுபடித் தொகுப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. இதுதவிர ஆண்டுதோறும் 3 தவணைகளில் ரூ.6,000 நிதியுதவி வழங்கும் மத்திய அரசின் பிஎம் கிசான் திட்டமும் நடைமுறையில் உள்ளது.
இதன்படி மத்திய மற்றும் மாநில அரசகன் வேளாண் திட்டங்களில் தொடர்ந்து பயன்பற வேண்டுமெனில் ஆதாரை சமர்ப்பிப்பது அவசியம் என வேளாண் துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் பெரும்பாலும் அனைத்து மக்களுக்கும் ஆதார் கார்டு வழங்கப்பட்டுள்ளது. பிறந்த குழந்தைகளுக்கு கூட ஆதார் கார்டை விரைந்து வழங்கும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
அனைத்து துறை சார்ந்த திட்டங்களிலும் போலியான பயனாளிகளைத் தடுக்கவும், உண்மையான பயனாளிக்கு மானியங்கள் மற்றும் சலுகைகள் சென்றடைவதை உறுதூ செய்ய ஆதார் இணைப்பு அவசியமாகிறது.
மத்திய அரசு கொண்டு வந்த பிஎம் கிசான் திட்டத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தகுதியற்ற மற்றும் போலியான எண்ணற்ற நபர்கள் நிதியுதவி பெற்று வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மோசடியை உடனடியாக தடுக்க ஆதார் இணைப்பு மற்றும் e-KYC சரிபார்ப்பை கட்டாயமாக்கியது மத்திய அரசு. அதோடு கண்டுபிடிக்கப்பட்ட போலியான பயனாளர்கள் திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டனர்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் மாநில அரசு சார்பில் வழங்கப்படும் மானியங்கள் மற்றும் சலுகைகளுக்கு ஆதார் சமர்ப்பிப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதார் கார்டு இல்லாத விவசாயிகள் உடனடியாக ஆதார் பெற விண்ணப்பிக்க வேண்டும் எனவும் வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.
புதிதாக ஆதார் கார்டுக்கு விண்ணப்பித்துள்ளவர்கள், ஆதார் எண் கிடைக்கும் வரை ரேஷன் கார்டு, ஓட்டுநர் ஐடி அல்லது வாக்காளர் அட்டையை சமர்ப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஆதார் கார்டு வந்ததும், உடனடியாக வேளாண் துறையில் பதிவு செய்தல் வேண்டும்.
தமிழ்நாட்டில் சமீபத்தில் தான் பயிர்க் கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பை முதல்வர் விஜய் வெளியிட்டார். இதன்படி ரூ.75,000 வரை பயிர்க் கடன் வாங்கிய விவசாயிகளுக்கு முழுத் தொகையும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ரூ.75,000 முதல் ரூ.1 லட்சம் வரை வாங்கிய விவசாயிகளுக்கு ரூ.75,000 வரை தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் பயிர்க் கடன் தள்ளுபடி சலுகையைப் பெறவும் ஆதார் எண் கட்டாயம் என்பதை விவசாயிகள் மறக்க வேண்டாம். அதோடு தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை விரைவில் தொடங்கவுள்ள நிலையில், விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்யவும் ஆதார் முக்கியமான ஆவணமாக இருக்கும்.
இதற்காக கால அவகாசம் எதையும் தமிழக அரசு நிர்ணயிக்கவில்லை. இருப்பினும் அரசின் சலுகைகளைப் பெற விவசாயிகள் ஆதாரை விரைந்து சமர்ப்பிப்பதே நல்லது.