

இந்திய தேர்தல் ஆணையம் கடந்தாண்டு அக்டோபர் 27-ம் தேதி நாட்டில் உள்ள ஒன்பது மாநிலங்கள் மற்றும் மூன்று யூனியன் பிரதேசங்களில் எஸ்ஐஆர்(SIR)(Special Intensive Revision - SIR) என்ற சிறப்புத் தீவிரத் திருத்தப் பணியைத் தொடங்கியது.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 2003-ம் ஆண்டிற்குப் பிறகு, தற்போது மீண்டும் SIR என்ற சிறப்புத் தீவிரத் திருத்தப் பணியை மேற்கொண்டது. இந்தப் பணிகள் கடந்தாண்டு நவம்பர் 4-ம்தேதி தொடங்கி, டிசம்பர் 14-ம்தேதி நிறைவடைந்தன.
தமிழகத்தில் கடந்த அக்டோபர் 27-ம்தேதி நிலவரப்படி 6.41 கோடி வாக்காளர்கள் இருந்தனர். SIR பணிகளை முன்னிட்டு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 5.43 கோடி பேர் மட்டுமே இடம் பெற்றிருந்தனர். அதாவது, பல்வேறு காரணங்களால் சுமார் 97.37 லட்சம் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
அதனை தொடர்ந்து பல கட்டங்களாக பேர் சேர்க்க, நீக்க மற்றும் திருத்தம் செய்ய காலஅவகாரம் வழங்கப்பட்ட நிலையில் பலரும் தங்கள் பெயர்களை சேர்க்க விண்ணப்பித்திருந்தனர்.
இந்தப் பணிகளின் ஒரு முக்கிய கட்டமாக, இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று (பிப்ரவரி-23ம்தேதி) வெளியானது. அதில் தமிழகத்தில் சுமார் 97.37 லட்சம் போலி மற்றும் தகுதியற்ற வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்ட நிலையில், சுமார் 5.67 கோடி வாக்காளர்களைக் கொண்ட இறுதி வாக்காளர் பட்டியலை தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.
அந்த வகையில், SIR பணிகளுக்குப் பிறகு தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5 கோடி 67 லட்சத்து 7 ஆயிரத்து 380 (5,67,07,380) ஆக உள்ளது.
ஆண் வாக்காளர்கள் - 2,77,38,925
பெண் வாக்காளர்கள் - 2,89,60,838
மூன்றாம் பாலினத்தவர்கள் - 7,617
SIR பிறகு இதுவரை 27.53 லட்சம் பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
மற்றொரு சிறப்பாக, தமிழகத்தில் ஆண்களை விட பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 12 லட்சத்துக்கும் அதிகமாக உள்ளது. அதனால் இந்த தேர்தலில் பெண்களின் வாக்கை பெறுவதற்காக அனைத்து கட்சிகளும் வரிந்து கட்டிக்கொண்டு கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அள்ளித்தரும் என்பதில் சந்தேகமில்லை.
2025ல் 6.41 கோடி வாக்காளர்கள் இருந்த நிலையில், SIR பணிகளுக்குப் பிறகான இறுதி வாக்காளர் பட்டியலில் 5.67 கோடி வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறுகையில், ‘இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் விடுபட்டிருந்தால் அல்லது தவறு இருந்தால், தேர்தல் ஆணைய இணையதளத்தில் (eci.gov.in) மேல்முறையீடு செய்யலாம்’ என்றார்.
மேலும், புதிதாக சேர்க்கப்பட்ட வாக்காளர்களுக்கு 15 நாட்களுக்குள் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும். மேலும், பட்டியலில் பெயர் சேர்க்க விரும்புவோர் இப்போதும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
https://elections.tn.gov.in என்ற வலைதளத்தில் சென்று வாக்காளர்கள் தங்கள் பெயரை சரிபார்த்துக் கொள்ளலாம்.
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், பெயர் சேர்க்க படிவம் 6, திருத்தம் செய்ய படிவம் 8, பெயரை நீக்க படிவம் 7 ஆகியவற்றை இணையதளம் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ சமர்ப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.