

தமிழகத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 4-ந் தேதி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி என்கிற SIR பணியினை தேர்தல் கமிஷன் தொடங்கியது. இதில் இறந்து போன வாக்காளர்கள், நிரந்தரமாக இடம் மாறிய வாக்காளர்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பெயர் சேர்த்திருந்த வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டது. சுமார் 40 நாட்கள் நடந்த இந்த பணி, டிசம்பர் மாதம் 14-ந் தேதி நிறைவடைந்தது.
அதன் தொடர்ச்சியாக 19-ந் தேதி வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில் 5.43 கோடி பேர் மட்டுமே இடம் பெற்றிருந்தனர். மொத்தம் 97.37 லட்சம் வாக்களர்களின் பெயர்கள் அதில் நீக்கப்பட்டு இருந்தன. இதில் இறந்த வாக்காளர்களின் எண்ணிக்கை 27 லட்சம் பேர், நிரந்தரமாக இடம் பெயர்ந்தோர் மற்றும் குறிப்பிட்ட முகவரியில் வசிக்காதவர்கள் 66 லட்சத்து 45 ஆயிரம் பேர், மற்றும் இரட்டை பதிவு உள்ளிட்ட காரணங்களால் மற்றவர்கள் நீக்கப்பட்டதாக தேர்தல் கமிஷன் விளக்கம் அளித்தது.
தமிழகத்தில் கடந்த அக்டோபர் 27-ந்தேதி நிலவரப்படி 6.41 கோடி வாக்காளர்கள் இருந்தனர். அதைத்தொடர்ந்து இறுதி வாக்காளர் பட்டியலை தயாரிக்கும் பணி தொடங்கிய நிலையில் வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதவர்கள், பெயர் நீக்கப்பட்டவர்கள், 1.1.2026 அன்று 18 வயதை பூர்த்தி செய்யும் புதிய வாக்காளர்கள் போன்றோர் தங்களின் பெயரை சேர்க்க பல்வேறு கட்டங்களாக கடந்த டிசம்பர் 27, 28, ஜனவரி 3, 4 மற்றும் கடந்த 30-ம்தேதி வரை கால அவகாசம் அளித்தது தேர்தல் ஆணையம். ஆனால் காலஅவசாசம் வழங்கப்பட்டு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்ட போதிலும் தேர்தல் ஆணையத்தில் இத்தகைய முயற்சிக்கு பெரியளவில் பலன் கிடைக்கவில்லை. சுமார் 47 லட்சம் பேர் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க ஆர்வம் இல்லாத காரணத்தால் மனு கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது
இதனிடையே, 22 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர். புதிதாக வழங்கப்பட்ட படிவங்கள் சரிபார்க்கப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் நாளை அதாவது வரும் 17-ந்தேதி வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டதால் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதன்படி, இறுதி வாக்காளர் பட்டியல் வரும் 23-ம்தேதி வெளியிடப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவித்துள்ளார்.