மீனவர்களுக்கு இனி பயம் தேவையில்லை..! கேரள பாணியில் தமிழகத்திலும் வருகிறது கடல் ஆம்புலன்ஸ் சேவை..!

மீனவர்களுக்கு இனி பயம் தேவையில்லை..! கேரள பாணியில் தமிழகத்திலும் வருகிறது கடல் ஆம்புலன்ஸ் சேவை..!
கடல் ஆம்புலன்ஸ் திட்டம்
கடல் ஆம்புலன்ஸ் திட்டம்

மணிகண்டன், எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில் பயனுள்ள தகவல்களையும் புதிய சிந்தனைகளையும் கல்கி ஆன்லைன் வாசகர்களுக்கு வழங்கி வருகிறார்.

Updated on: 

மீனவர்கள் தினத்தை முன்னிட்டு மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

என் அன்பான மீனவ சொந்தங்கள் அனைவருக்கும் இனிய உலக மீன்வள தின நல்வாழ்த்துகள்!

மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பது, அவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவது, மீன்பிடித் தொழிலை நவீனப்படுத்துவது, மீனவர்களின் குழந்தைகளுக்கு தரமான கல்வி, குடும்பங்களுக்கு உரிய சமூகப் பாதுகாப்பு என நமது முதல்-அமைச்சர் பல்வேறு பரிந்துரைகளை வழங்கி உள்ளார். அதனையேற்று, மீன்வளம் மற்றும் மீன்வர் நலத்துறை நம் மீனவர்களின் வாழ்வாதாரம் வளம் பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை இலக்காக வைத்து வடிவமைத்து வருகிறது.

குறிப்பாக, மீனவர்களின் இன்னுயிர் காக்க, மீனவர்களின் கடல் பாதுகாப்பை உறுதிசெய்ய தமிழ்நாட்டில் முதன்முறையாக கடல் ஆம்புலன்ஸ் திட்டத்தை செயல்படுத்தவும், மேலும் தற்போது ரூ.5 லட்சமாக உள்ள மீனவர்களுக்கான காப்பீட்டுத் தொகையை இரண்டு மூன்று மடங்காக உயர்த்துவது குறித்தும் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

அதேநேரத்தில் நிலையான மீன்பிடி முறைகளை ஊக்குவிப்பதுடன், அரசு விதிகளையும் புயல் எச்சரிக்கையையும் பின்பற்றி மீனவர்கள் பாதுகாப்புடன் இருப்பதுடன், கடல் வளங்களைப் பாதுகாத்து, அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் மீன்வளச் செல்வம் கிடைத்திட உறுதியேற்போம்.

மீனவர்களின் இடர்பாடுகளில் என்றும் துணைநிற்பதோடு அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், அவர்களின் குடும்பங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் முதல்-அமைச்சர் தளபதி தலைமையிலான அரசு என்றும் உறுதுணையாக இருக்கும்.

மீனவர் நலன் காப்போம்!

கடல் வளம் பாதுகாப்போம்!

வளமான தமிழ்நாட்டை உருவாக்குவோம்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே முதன்முறையாகக் கடல் ஆம்புலன்ஸ் சேவையைக் கேரள அரசு 2020-ஆம் ஆண்டு தொடங்கியது. 2017-ஆம் ஆண்டு ஏற்பட்ட ஒக்கி புயலுக்குப் பிறகு, ஆழ்கடலில் விபத்து மற்றும் அவசர மருத்துவ உதவி தேவைப்படும் மீனவர்களின் உயிரைக் காக்க இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டது.

கேரள மீன்வளத்துறை சார்பில் மொத்தம் 3 அதிநவீனக் கடல் ஆம்புலன்ஸ்கள் இயக்கப்படுகின்றன. இவை கொச்சி கப்பல் கட்டும் தளத்தால் (Cochin Shipyard Limited) சுமார் ரூ. 18.24 கோடி செலவில் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டவை.சுமார் 23.8 மீட்டர் நீளமும் 6 மீட்டர் அகலமும் கொண்ட இந்தப் படகுகள், மணிக்கு 14 நாட்டிக்கல் மைல் வேகத்தில் செல்லக்கூடியவை. 4 மீட்டர் உயர அலைகளையும் தாங்கிச் செல்லும் திறன் கொண்டவை

ஒரே நேரத்தில் 10 மீனவர்களுக்கு முதலுதவி மற்றும் அவசர மருத்துவச் சிகிச்சை அளிக்கும் வசதி இதில் உள்ளது. பரிசோதனை அறை, மருத்துவப் படுக்கைகள், உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் ஒரு சிறிய சவக்கிடங்கு (Mortuary freezer) ஆகியவையும் இதில் அமைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு படகிலும் 24 மணி நேரமும் பணியாற்ற 2 துணை மருத்துவப் பணியாளர்கள் (Paramedical staff) மற்றும் பயிற்சி பெற்ற 4 கடல் மீட்புப் படை வீரர்கள் (Sea Rescue Squad) நியமிக்கப்பட்டுள்ளனர்

கேரளாவின் இந்த முன்மாதிரித் திட்டத்தைத் தொடர்ந்து, தமிழ்நாட்டிலும் முதன்முறையாகக் கடல் ஆம்புலன்ஸ் சேவையைத் தொடங்க மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. உலக மீனவர் தினத்தை முன்னிட்டு இது குறித்த அறிவிப்பை வெளியிட்ட மீன்வளத்துறை, நடுக்கடலில் ஆபத்தில் சிக்கும் தமிழக மீனவர்களை விரைவாக மீட்டு முதலுதவி அளிப்பதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கம் எனத் தெரிவித்துள்ளது. மேலும், கடல் ஆம்புலன்ஸ் திட்டத்துடன் இணைந்து, தற்போது மீனவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ரூ. 5 லட்சம் காப்பீட்டுத் தொகையை இரண்டு முதல் மூன்று மடங்காக உயர்த்துவது குறித்தும் அரசு பரிசீலித்து வருகிறது. இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும்பட்சத்தில் தமிழக மீனவர்களின் கடல்சார் பாதுகாப்பு மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
இனி ரூ.2.50 லட்சம் வருமானம் இருந்தாலும் இலவச மருத்துவ காப்பீடு! தமிழக அரசின் அதிரடி..!
கடல் ஆம்புலன்ஸ் திட்டம்