இனி ரூ.2.50 லட்சம் வருமானம் இருந்தாலும் இலவச மருத்துவ காப்பீடு! தமிழக அரசின் அதிரடி..!

தமிழக மக்களுக்கு உயர்தர மருத்துவ சிகிச்சைகள் தடையின்றி கிடைப்பதற்காக அரசு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
முதலமைச்சர் காப்பீட்டு திட்டம்|மருத்துவ காப்பீடு
முதலமைச்சர் காப்பீட்டு திட்டம்|மருத்துவ காப்பீடுAI Image
கவிதா பக்கிள்

கவிதா பக்கிள், பிரபல நாளிதழில் 14 ஆண்டுகள் Content Writer-ஆகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தற்போது கல்கி ஆன்லைனில் செய்திகள், விளையாட்டு, சினிமா, கலை, ஆன்மிகம், யோகா ஆகிய பிரிவுகளில் வாசகர்களுக்குப் பயனுள்ள கட்டுரைகளை எழுதி வருகிறார்.

Updated on: 

தகுதியானவர்களுக்கு கூட பயனளிக்காத நிலை உள்ளதால் முதலமைச்சர் மருத்துவ காப்பீடு திட்டத்தின் வருமான உச்சவரம்பை உயர்த்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் அதுகுறித்த அறிவிப்பை தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக மக்களுக்கு உயர்தர மருத்துவ சிகிச்சைகள் தடையின்றி கிடைப்பதற்காக அரசு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின்கீழ் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் லட்சக்கணக்கில் செலவிடப்படும் புற்றுநோய், இதய அறுவை சிகிச்சை, சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்ட அனைத்து சிகிச்சைகளையும் வழங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் ஏழை-எளிய மக்கள், அரசு மற்றும் குறிப்பிட்ட தனியார் மருத்துவமனைகளில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சிகிச்சைகளை இலவசமாக பெற்று வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இந்த திட்டம் பொருந்தும். ஏற்கனவே முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு அட்டை வைத்திருப்பவர்களுக்கு தானாகவே இந்த புதிய ஒருங்கிணைந்த திட்டம் பொருந்தும். மேலும் இந்தத் திட்டத்தில் ஒரு குடும்பத்திற்கு ஆண்டிற்கு 5 லட்சம் முதல் 25 லட்சம் வரையில் அனுமதி அளிக்கப்படுகிறது.

தற்போது இத்திட்டத்தின் மூலம் பயன்பெற பயனாளியின் குடும்ப வருமானம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் குறைவாக இருக்க வேண்டும் என்ற விதிமுறை நடைமுறையில் உள்ளது.

ஆனால் தற்போதைய விலைவாசி உயர்வு மற்றும் ஊதிய மாற்றங்களை கருத்தில் கொள்ளும் போது இந்த வரம்பு மிகமிக குறைவாக உள்ளதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.

இதையும் படியுங்கள்:
தமிழக அரசின் ‘இலவச மருத்துவ காப்பீடு’ ரத்து செய்யப்பட்டதா? கார்டை மீட்பதற்கான வழிகள்!
முதலமைச்சர் காப்பீட்டு திட்டம்|மருத்துவ காப்பீடு

இதனால் குறைந்த ஊதியம் பெறும் தகுதியானவர்களுக்கு கூட இந்த திட்டம் முழுமையாக பயனளிக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

காப்பீடு அட்டை இல்லை என்றால் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றாலும் கூட எம்ஆர்ஐ ஸ்கேன் (MRI Scan) மற்றும் சிடி ஸ்கேன் (CT Scan) போன்ற அதிநவீன பரிசோதனைகளுக்கு ரூ.2500 முதல் ரூ.4000 வரை கட்டணம் செலுத்த வேண்டியது கட்டாயம். வருமான உச்சவரம்பு காரணமாக காப்பீட்டு அட்டை கிடைக்காத சில ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் இதனால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

எனவே மாறிவரும் பொருளாதார சூழலை கருத்தில் கொண்டு முதலமைச்சர் மருத்துவ காப்பீடு திட்டத்தின் ஆண்டு வருமான உச்சவரம்பை ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் முதல் ரூ.3 லட்சம் வரை உடனடியாக உயர்த்த வேண்டும் என்று பொதுமக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில் தான் பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினரின் தொடர் கோரிக்கைகளை ஏற்று, தமிழ்நாடு அரசு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கான (CMCHIS) குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பை உயர்த்தி அறிவித்துள்ளது.

மருத்துவ காப்பீடு
Medical Claim

அதன்படி, குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பை ரூ.1.20 லட்சத்தில் இருந்து ரூ.2.50 லட்சமாக உயர்த்தி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதாவது, தமிழ்நாடு ரேசன் அட்டை மற்றும் தேசிய மக்கள்தொகை பதிவேடு தரவுத்தளத்தில் பெயர் இடம்பெற்றிருக்கும் நபரின் மொத்த குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 2,50,000-க்கு குறைவாக இருந்தால், அந்த நபரும் அவருடைய குடும்பத்தினரும் முதலமைச்சரின் விரிவான சுகாதாரக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீடு பெறத் தகுதியுடையவர் ஆவார். இத்திட்டத்திற்கான பிரீமியத்தை தமிழ்நாடு அரசு செலுத்தும்.

இத்திட்டத்தின் கீழ் பலன்களைப் பெற கிராம நிர்வாக அலுவலர் (VAO), வருவாய் அதிகாரிகளால் இணையவழியில் வழங்கப்படும் குடும்ப அட்டை மற்றும் வருமானச் சான்றிதழை, சம்பந்தப்பட்ட குடும்பத் தலைவரின் சுய அறிவிப்புடன் சமர்ப்பித்தால் போதுமானது. அனைத்து பயனாளிகளின் விவரங்களும், வெளிப்படைத்தன்மைக்காக, தமிழ்நாடு அரசின் சரிபார்ப்புக்கு உட்படுத்தப்பட்டு, உடனடியாக இணையதளத்தில் பதிவேற்றப்படும்.

இந்த புதிய மாற்றத்தின் மூலம் தகுதியான குடும்பங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும்.

இதையும் படியுங்கள்:
மருத்துவ காப்பீடு எடுத்தும் பணம் கிடைக்கவில்லையா..? கிளைம் நிராகரிப்பை தவிர்க்கும் 6 ரகசியங்கள்!
முதலமைச்சர் காப்பீட்டு திட்டம்|மருத்துவ காப்பீடு

தகுதி மற்றும் புதிய வருமான வரம்பு

இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மொத்த மருத்துவக் காப்பீட்டுத் தொகையும் 5 மடங்கு உயர்த்தப்பட்டு, குடும்பம் ஒன்றிற்கு ஆண்டுக்கு ரூ.25 லட்சம் வரையில் சிகிச்சை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய ஒருங்கிணைந்த திட்டத்தின்படி, பயனாளிகள் ரூ.5 லட்சம் வரை ரொக்கமில்லா (Cashless) முறையிலும், அதற்கு மேலான சிகிச்சைச் செலவுகளை திட்டத்தின் தொகுப்பு நிதியிலிருந்தும் (Corpus Fund) பெற்றுக் கொள்ளலாம்.

இதுவரை முதலமைச்சரின் காப்பீட்டு திட்டம் தனியாகவும், மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) தனியாகவும் இருந்தது. இனி இரண்டும் ஒருங்கிணைந்த திட்டமாக வரவிருக்கிறது. மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PM-JAY) திட்டத்தையும் இதனுடன் இணைத்து, வரும் 11.01.2027 முதல் அடுத்த 5 ஆண்டுகளுக்கு இத்திட்டத்தை தொய்வின்றிச் செயல்படுத்த புதிய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களைத் தேர்வு செய்ய தமிழ்நாடு அரசு தற்போது டெண்டர் வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு அட்டை (CMCHIS Card) வைத்திருப்பவர்களுக்கு இந்த புதிய ஒருங்கிணைந்த திட்டம் தானாகவே பொருந்தும்.

பிரதம மந்திரியின் ஆயூஷ் யோஜானா திட்டத்தின் கீழ் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். மேலும் அவர்கள் 6 மாதங்களுக்கு மேல் தமிழ்நாட்டில் இருந்தால் அவர்களுக்கான பிரீயமியத்தை தொழிலாளர் நலத்துறையின் மூலம் செலுத்தவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
முதியோர்களுக்கான அரசு சலுகைகள்: மருத்துவச் செலவைக் குறைத்து நிதியைச் சேமிப்பது எப்படி?
முதலமைச்சர் காப்பீட்டு திட்டம்|மருத்துவ காப்பீடு

இத்திட்டத்திற்கான முழு பிரீமியம் தொகையையும் பொதுமக்களின் நலன் கருதி தமிழ்நாடு அரசே முழுமையாகச் செலுத்துகிறது.