

தமிழக அரசின் நிதிநிலைமை மற்றும் கடன் சுமை குறித்த இந்த புதிய அதிர்ச்சியூட்டும் புள்ளி புள்ளி விபரங்கள் வெளியாகி உள்ளன. நடப்பு நிதியாண்டின் முதல் மூன்று மாதங்களிலேயே தமிழக அரசு வாங்கியுள்ள கடன்களும், அதற்காக செலுத்தியுள்ள வட்டித் தொகையும் பொருளாதார வல்லுநர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே தமிழக அரசின் மொத்தக் கடன் சுமை சுமார் 10 லட்சம் கோடி ரூபாயைத் தொட்டுள்ள நிலையில், தற்போது வெளியாகிய புதிய புள்ளி விவரங்கள் மாநிலத்தினுடைய நிதி நெருக்கடியை பட்டவர்தனமாக வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
தமிழக அரசுக்கு மாநில சரக்கு மற்றும் சேவை வரி, முத்திரைத்தாள் மற்றும் பதிவு கட்டணம், விற்பனை மற்றும் வர்த்தகம் மீதான வரி என பல வகைகளில் வருவாய் கிடைக்கிறது. வரவை விட செலவு அதிகம் இருப்பதால் கடன் பத்திரங்கள் விற்பனை மற்றும் வங்கிகள் போன்றவற்றில் கடன்கள் வாங்கப்படுகின்றன. இவற்றில் கடன் பத்திரங்கள் விற்பனை வாயிலாக பெறப்படும் கடன்கள் தான் அதிகம். இவ்வாறு வாங்கப்படும் கடன்களில் சாலை அமைப்பது, பாலம் கட்டுவது உள்ளிட்ட பல்வேறு உள் கட்டமைப்புப் பணிகளை அரசு மேற்கொள்கிறது.
மாநில அரசு வாங்கிய கடனை விட அதற்கு செலுத்தப்படும் வட்டியின் அளவு தான் மக்களை மிகவும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. அரசு பணியாளர்களின் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் பழைய கடன்களுக்கான வட்டி போன்ற அத்தியாவசியத் தேவைகளை சமாளிக்க, தொடர்ந்து ரிசர்வ் வங்கி மூலமாக கடன் பத்திரங்களை விற்பனை செய்து அரசு நிதியை திரட்டி வருகிறது.
இந்த ஆண்டின் மொத்த கடன் இலக்கு அதாவது நடப்பு முழு நிதியாண்டில் மட்டும் கூடுதலாக 1.22 கோடி ரூபாய் கடன் வாங்குவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. மாநிலத்தின் மொத்த வருவாயில் 22.82% தொகை, மக்கள் நலத்திட்டங்களுக்காக பயன்படாமல் வெறும் வட்டி கட்டுவதற்கே செலவிடப்படுகிறது. இத்தகைய கடன் சுமை வருங்காலத் தலைமுறையின் பொருளாதார சுதந்திரத்தை வெகுவாக பாதிக்கும். எனவே அரசு தேவையற்ற செலவினங்களை குறைத்து வருவாயை பெருக்குவதற்கு சில மாற்று வழிகளை ஆராய வேண்டும் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நடப்பு நிதியாண்டின் முதல் மூன்று மாதங்களில் ஏப்ரல் முதல் ஜூன் வரை தமிழக அரசு 20,881 கோடி ரூபாய் கடன் வாங்கி உள்ளது. மேலும் இக்காலக் கட்டத்தில் வட்டியாக மட்டும் 14,618 கோடி ரூபாய்செலுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன..
ஏப்ரல் - ஜூன் கடன்: ₹20,881 கோடி (மூலதன திட்டங்கள் மற்றும் வளர்ச்சி பணிகளுக்காக பெறப்பட்டது).
செலுத்தப்பட்ட வட்டி: ₹14,618 கோடி (முந்தைய நிலுவை கடன்களுக்கான வட்டி தொகை).
இந்த ஆண்டின் மொத்த கடன் இலக்கு: ₹1.22 லட்சம் கோடி.
தமிழக அரசின் மொத்த கடன்: ஏற்கனவே ₹10 லட்சம் கோடி என்ற அளவை எட்டியுள்ளது.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள தனியார் விடுதியில் திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு கட்சி நடவடிக்கைகள் குறித்தும், உள்ளாட்சி தேர்தல் வந்தால் அதனை எதிர்கொள்வது குறித்தும் ஆலோசனைகள் வழங்கினார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பொழுது, தேர்தல் பிரச்சாரத்திலும் ஆட்சிக்கு வந்த பிறகும் திமுக தான் மக்கள் தலையில் கடன் சுமையை ஏற்றி விட்டதாக இல்லாததையும் பொல்லாததையும் பேசிய முதல்வர் விஜய், ஆட்சிக்கு வந்து இரண்டரை மாதங்களில் சுமார் 20,000 கோடி வரை கடன் வாங்கி உள்ளது குறித்து முதல்வர் விஜய்க்கு தெரியுமா? பிரச்சாரம் செய்து மக்களை ஏமாற்றினார்கள் என்பது இன்று வெட்ட வெளிச்சமாக தெரிகிறது என்று பேசிய முன்னாள் அமைச்சர், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். லட்சக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நிறைய பேர் மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளனர். நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். ஆனால் தமிழ்நாட்டில் ஆளும் கட்சியான தவெக அமைச்சர்கள் மற்றும் தவெகவினர் அனைவரும் திரையரங்கில் படம் பார்த்து, அழுது ரீல்ஸ் போட்டுக்கொண்டு இருந்தார்கள். டெல்லியில் ஜனநாயகத்தை காப்பாற்ற போராட்டம் நடந்து கொண்டிருந்த வேளையில் ஜனநாயகன் படத்தைப் பார்ப்பதற்கு டிக்கெட் வாங்கி கொடுத்து, விளம்பரப்படுத்தி, போஸ்டர் ஒட்டப்பட்டுக் கொண்டிருந்தது என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.