
தமிழ்நாட்டில் அரசுப் பணியாளர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு, நிரூபிக்கப்பட்டால் முதல் நடவடிக்கையாக சஸ்பென்ட் செய்யப்படுவது வழக்கம். பணி ஓய்வு நாட்களில் கூட ஒருசில ஊழியர்கள் சஸ்பென்ட் செய்யப்படுவது உண்டு. இதுநாள் வரை இந்த முறை தான் அமலில் இருந்து வந்தது. ஆனால் தற்போது விதிமுறைகளில் திருத்தத்தை மேற்கெண்டுள்ள தமிழக அரசு, பணி ஓய்வு பெறும் நாட்களில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை சஸ்பெண்ட் செய்யக் கூடாது என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி இனி அரசு ஊழியர்கள் பணி ஓய்வு நாட்களில் நிம்மதியாக ஓய்வு பெற முடியும். ஆனால் குற்றம் சாட்டப்பட்ட வழக்கின் விசாரணை முடிந்த பிறகே பணப் பலன்கள் கிடைக்கும்.
அரசு ஊழியர்கள் தவறு செய்தால் முதலில் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வழக்கு விசாரணை முடிய கால தாமதம் ஆகும் பட்சத்தில் ஒழுங்கு நடவடிக்கையை மேற்கொள்ள தற்காலிகமாக அரசு ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்படுவார். கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் சஸ்பென்ட் நடவடிக்கையில் மாற்றம் கொண்டு வர தமிழ்நாடு அரசு சார்பில் அரசாணை கொண்டு வரப்பட்டது. ஆனால் இதற்கு அப்போது ஒப்புதல் கிடைக்காத நிலையில், தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது.
அரசு ஊழியர்களை சஸ்பெண்ட் செய்வதற்கு சில வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது. இதன்படி அரசு ஊழியர்களின் மீது சுமத்தப்பட்ட குற்றத்தின் பின்னணியில் முகாந்திரம் உள்ளதா, குற்றத்திற்கான தண்டனை குறித்தும் விசாரணை நடத்த வேண்டும். தண்டனை வழங்கும் அளவிற்கு குற்றத்தில் உண்மைத்தன்மை உள்ளதா என்பதைப் பற்றியும் தீர விசாரிக்க வேண்டும்.
இதன் முலம் கால விரயம் தவிர்க்கப்படும். இதன்மூலம் பணி ஓய்வு நாட்களில் சஸ்பென்ட் செய்வது தவிர்க்கப்பட்டு, 3 மாதங்களுக்கு முன்பே சரியான முடிவை எடுக்க வேண்டும்.
நடவடிக்கை மற்றும் விசாரனைக்கு உரிய கால அளவை ஒழுங்கு நடவடிக்கை அதிகாரிகள் பின்பற்ற வேண்டியது அவசியமாகும். ஓய்வு பெறும் ஊழியர் தரப்பு நியாயத்தையும் கேட்டு, உரிய முடிவை எடுக்க வேண்டியது அவசியமாகிறது. ஆகையால் குற்றம் சாட்டப்பட்ட அரசு ஊழியரை பணி ஓய்வு நாளில் சஸ்பெண்ட் செய்யக் கூடாது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
மேலும் குற்றம் தொடர்பான விசாரணையை 3 மாதத்திற்குள் முடிக்கவில்லை என்றால், விசாரணை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்த நடைமுறை லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்குப் பொருந்தாது எனவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்பு அரசு ஊழியர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.