

சென்னையில் பல தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் அமைப்புகள் மூலம் முதியோர் இல்லங்கள் இயக்கப்பட்டு வருகின்றன, மேலும் மத்திய அரசு ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு முதியோர் இல்லம் உருவாக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
முதியோர்கள் கண்ணியமான, அமைதியான மற்றும் கவலையற்ற வாழ்க்கையை விரும்புகிறார்கள். தனிக்குடும்ப கலாச்சாரம் மற்றும் வேலை நிமித்தமாக பிள்ளைகள் வெளிநாடு/வெளியூர் செல்லுதல் மற்றும் வீட்டிற்கு பாரமாக நினைத்தும் பலரும் வயதான பெற்றோரை முதியோர்கள் இல்லங்களில் சேர்த்து விடுகின்றனர். இந்தியாவில் கூட்டுக்குடும்ப சிதைவு, வேலையின்மை, மருத்துவத் தேவைகள் மற்றும் மாறிவரும் சமூகக் காரணிகளால் முதியோர் இல்லங்கள் (Old Age Homes) வேகமாக அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் இந்தியாவில் குடும்பத்தினரால் ஒதுக்கப்பட்டு பராமரிக்காமல் ரோட்டில் கைவிடப்படும் முதியோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.
அப்படி கைவிடப்பட்ட, தனியாக வசிக்கும் அல்லது தங்களைத் தாங்களே கவனித்துக் கொள்ள முடியாத மூத்த குடிமக்களுக்கு சென்னையில் உள்ள முதியோர் இல்லங்கள், பாதுகாப்பான மற்றும் ஆதரவான குடியிருப்பு பராமரிப்பை வழங்குகின்றன.
இந்த வசதிகளில் பெரும்பாலானவை தொண்டு நிறுவனங்கள் அல்லது இலாப நோக்கற்ற நிறுவனங்களால் நடத்தப்படுகின்றன. மேலும் இதுபோன்ற இல்லங்களின் சேவைகளைத் தொடர பொதுமக்களும் நன்கொடைகளை அளித்து வருகின்றனர். இந்த இல்லங்கள் முதியோர் குடியிருப்பாளர்களின் கண்ணியம், பாதுகாப்பு மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை உறுதி செய்வதில் கவனம் செலுத்துகின்றன.
இந்நிலையில் பராமரிக்க யாரும் இல்லாத வயதான முதியோர்கள் தங்குவதற்கு தமிழக அரசு சார்பில் சென்னை வில்லிவாக்கத்தில் மூத்த குடிமக்கள் உறைவிடம் திறக்கப்பட உள்ளது. இந்த உறைவிடத்தில் தங்குவதற்கு விருப்பம் உள்ளவர்கள் ஆதரவற்ற மூத்த குடிமக்கள் விண்ணப்பிக்கலாம் என இந்துசமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.
நிபந்தனைகள்
* 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
* குற்ற வழக்குகளில் சிக்கியவர்களுக்கு அனுமதி இல்லை.
* அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் சொத்து அல்லது அதன் மூலம் நிலையான வருமானம் பெறுபவர்களுக்கு அனுமதி இல்லை.
* விண்ணப்பத்தில் திருமணமானவர், துணையை இழந்தவர் என்பது போன்ற தகவல்களை கண்டிப்பாக குறிப்பிட வேண்டும்.
* வாரிசுகள் எண்ணிக்கை, உறவினர்கள் விவரம் கொடுக்க வேண்டும்.
* பராமரிப்பதற்கு உறவினர்கள் இருக்கும் முதியோர்கள் விண்ணப்பிக்க தகுதி இல்லை.
* இறந்த பிறகு உடலை அடக்கம் செய்ய ஒப்புதல் கொடுக்க வேண்டும்.
* நாட்பட்ட தொற்றுநோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அதற்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் விண்ணப்பிக்க முடியாது.
* அந்த விண்ணப்பத்தில் 10 உறுதிமொழிகள் கொடுக்கப்பட்டிருக்கும் அதற்கு நீங்கள் சம்மதம் தெரிவித்து கையொப்பம் போட வேண்டும். மற்றும் உங்களை இந்த இல்லத்திற்கு அழைத்து செல்பவரும் கையொப்பம் இட்டு தரவேண்டியது கட்டாயம்.
விண்ணப்பம் பெறுவது எப்படி?
தமிழ்நாடு அரசின் இந்துசமய அறநிலையத்துறையின் https://hrce.tn.gov.in/hrcehome/index.php என்ற இணையதள பக்கத்திற்கு சென்று விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை அதனுடன் இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.
நீங்கள் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை சமர்ப்பிக்க இந்த மாதம் 7-ம்தேதி (பிப்ரவரி ) கடைசி நாள் என்றும், மாலை 5.45 மணிக்குள் வரும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய முகவரி
செயல் அலுவலர்,
அருள்மிகு தேவி பாலியம்மன் மற்றும் இளங்காளியம்மன் திருக்கோவில்,
வில்லிவாக்கம்,
சென்னை-600049.
கொளத்தூர் மற்றும் அதனை சுற்றி 10 கிலோ மீட்டர் சுற்றளவில் வசிப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று இந்துசமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.