
பல்வேறு ஊர்களை சேர்ந்தவர்கள் சொந்த ஊர்களை விட்டுவிட்டு படிப்பதற்காகவும், வேலைக்காகவும் சென்னையில் வந்து அதிகளவு தங்கி உள்ளனர். அப்படி சென்னையில் தங்கி இருப்பவர்கள் அடிக்கடி சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாது என்பதால், பண்டிகை மற்றும் விழாக் காலங்களில் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று தங்கள் குடும்பத்தினர், நண்பர்களை சந்தித்து, மகிழ்ச்சியாக கொண்டாடி மகிழ்வார்கள்.
அப்படி சொந்த ஊருக்கு செல்ல பெரும்பாலானவர்கள் நாடுவது பேருந்துகளை தான். ஏனெனில் பண்டிகை காலங்களில் இரயில் டிக்கெட்கள் 3 மாதங்களுக்கு முன்பே புக்காகி விடும். அதேநேரம் ஆம்னி பேருந்துகளில் எந்த நேரத்தில் சென்றாலும் டிக்கெட் கிடைக்கும் என்பதால் பெரும்பாலானவர்கள் இதையே விரும்புகின்றனர்.
இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் பண்டிகை காலங்களில் டிக்கெட்டி விலையை இரண்டு மடங்காக உயர்த்தி விடுகின்றனர். அதனாலேயே சாதாரண நாட்களை விட பண்டிகை நாட்களில் ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து விடுகிறது.
அந்த வகையில் ஆம்னி பேருந்து டிக்கெட் கட்டணங்கள் வழக்கமாக சாதாரண நாட்களில் ஒரு தொகையிலும், விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் அதிகப்படியாகவும், பயணிகளின் தேவைக்கேற்பவும் வசூலிக்கப்படுகிறது. அதேசமயம் பண்டிகை காலங்களில் அதிக கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பதற்காக சில ஆம்னி பஸ் உரிமையாளர்கள் தரமற்ற பஸ்களை இயக்குகின்றனர். அதனால் அதில் பயணிக்கும் பயணிகள் பல இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.
உதாரணமாக சாதாரண நாட்களில் சென்னையில் இருந்து மதுரைக்கு செல்ல ஆம்னி பஸ்களில் ரூ.600 முதல் ரூ.1300 வரை கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், விடுமுறை நாட்களில் இதுவே ரூ.1500-க்கும் அதிகமாகவும், மேலும் சில வழித்தடங்களில் ₹2000-க்கும் மேலாகவும் உயர்த்தி விடுகின்றனர்.
தனியார் ஆம்னி பஸ்கள் அதிக கட்டணம் வசூலிப்பதை கட்டுப்படுத்த அரசு நிரந்தரமாக கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என பயணிகள் நீண்ட காலமாக வலியுறுத்தி வந்தாலும், பண்டிகை காலங்களில் டிக்கெட் விலை உயர்வை அரசால் கூட கட்டுப்படுத்த முடியவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
இந்நிலையில் வரும் அக்டோபர் 1-ம்தேதி சரஸ்வதி பூஜை மற்றும் 2-ம்தேதி காந்தி ஜெயந்தி என தொடர் அரசு விடுமுறை வருவதால் சொந்த ஊருக்கு செல்ல விரும்புபவர்கள் வருகிற 30-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) அன்று ஆம்னி பஸ்களில் பயணம் செய்யலாம் என்று எதிர்பார்த்து 'டிக்கெட்' முன்பதிவு செய்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். ஏனெனில் வெளியூர்களுக்கு செல்லும் பெரும்பாலான ஆம்னி பஸ்கள் கட்டணத்தை 2 மடங்கிற்கு மேல் உயர்த்தி உள்ளனர்.
இதனால் பலருக்கும் சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிப்பதால் என்ன செய்வது என்று தெரியாமல் புலம்பி வருகின்றனர்.
பண்டிகை காலங்களில் ஆம்னி பஸ்களின் டிக்கெட் கட்டணம் உயர்த்துவது புதியதல்ல என்றாலும், இதற்கு எப்போது தான் நிரந்தர தீர்வு கிடைக்கும் என்ற கவலை பொதுமக்களிடையே நீடித்து வருகிறது.
இந்த நிலையில், தமிழக அரசு ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க குழு அமைத்துள்ளது. அந்தவகையில், ஆயுதபூஜை , விஜயதசமி மற்றும் தொடர் வார விடுமுறையை முன்னிட்டு (01.10.2025 முதல் 05.10.2025 வரை) வெளியூர்களுக்கு செல்லும் பயணிகளிடம் தனியார் ஆம்னி பஸ்கள் அதிக கட்டணம் வசூல் செய்வதை தடுக்க தமிழ்நாடு முழுவதும் வட்டாரப்போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மற்றும் போக்குவரத்து சோதனைச்சாவடி ஆய்வாளர்கள் ஆகியோரைக் கொண்டு சிறப்புக்குழு அமைக்கப்பட்டு அதிகப்படியான கட்டணம் வசூல் செய்யும் ஆம்னி பஸ்களை தீவிரமாக சோதனை செய்து அபராதம் விதித்தும், வாகனங்களை சிறைபிடித்தும் வரி வசூல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் அறிவித்துள்ளது.
என்னதான் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், பண்டிகை காலங்களில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க முடிவதில்லை என்பது தான் உண்மை. இதற்கு அரசு நிரந்தர தீர்வு கொண்டு வராத வரை பண்டிகை காலங்களில் இந்த ஆம்னி பஸ்களில் நடக்கும் பணக்கொள்ளை நடந்து கொண்டே தான் இருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.