

2027-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு பொதுமக்களுக்கு வழங்கப்படவுள்ள விலையில்லா வேட்டி, சேலைகளை உற்பத்தி செய்ய நிர்வாக அனுமதி வழங்கி, முன்பணமாக ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.
தமிழகத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின் போது ரேஷன் கடைகளின் மூலமாக பொதுமக்களுக்கு விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆட்சிகளில் கடைபிடிக்கப்பட்ட விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டம் தவெக ஆட்சியிலும் தொடரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழர் திருவிழாவான பொங்கல் பண்டிகையை உலகம் முழுவதும் வாழும் தமிழக மக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் மற்ற எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழக அரசு சார்பாக பொங்கல் பரிசு தொகுப்பானது தமிழக மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கடந்த தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி, ரேஷன் கடைகளில் அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2,500 ரொக்கப் பணம் வழங்கப்பட்டது. அதன்பிறகு, சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைத்த திமுக, முதல் வருடத்தில் பொங்கல் பரிசு தொகையான ரூ.1000க்கு பதிலாக மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. ஆனால் தரம் குறைந்த மளிகை பொருட்கள் வழங்கப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், 2023, 2024 ஆகிய ஆண்டுகளில் பொங்கல் பண்டிகையையொட்டி ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. ஆனால், கடந்த ஆண்டு (2025) பொங்கல் பரிசு தொகுப்பு (பச்சரிசி, சக்கரை, முழு கரும்பு, வேட்டி மற்றும் சேலை) மட்டுமே வழங்கப்பட்டது. ரொக்கப் பணம் எதுவும் வழங்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற இருந்ததால், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்கப் பணமும் வழங்கப்படும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்தார்கள். மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் திமுக அரசும் தமிழக சட்டப்பேரவை தேர்தலை கணக்கில் வைத்து இந்தாண்டு (2026) பொங்கல் பண்டிகையையொட்டி எந்த ஆட்சி காலத்திலும் இல்லாத வகையில் ரூ.3000 ரொக்க பணமும், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீளக்கரும்பும் வழங்கியது.
இந்ந நிலையில் நடந்து முடிந்த தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் தவெக ஆட்சியை கைப்பற்றிய நிலையில், அடுத்த ஆண்டு பொங்கல் பரிசாக கடந்த ஆட்சி காலங்களில் வழங்கப்பட்டு வரும் வேட்டி சேலை வழங்கும் திட்டம் தொடருமா.? அல்லது நிறுத்தப்படுமா.? என்ற கேள்வி மக்களிடையே எழுந்தது.
இந்த நிலையில் தவெக ஆட்சியிலும் பொங்கல் பண்டிகையையொட்டி இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டத்திற்கான நிதியை ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அந்த வகையில், வரும் 2027ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வேட்டி, சேலை திட்டத்திற்கு 300 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு குடும்ப அட்டை தாரர்களுக்கு வேட்டி, சேலை வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் நூல் கொள்முதல் செய்து வேட்டி, சேலை தயாரிக்கும் பணியை மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்படும்.
இந்த திட்டத்தை செயல்படுத்த மொத்தம் 642 கோடி நிதி ஒதுக்கீடு செய்யகோரிய நிலையில், முன்பணமாக தற்போது ரூ.300 கோடி ஒதுக்கிடு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, வரும் 2027-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு, பயனாளர்களுக்கு வழங்க 2.27 கோடி வேட்டிகள், 2.27 கோடி சேலைகள் கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு கூட்றவு துறையின் கீழ் இயங்கும் கைத்தறி கூட்டுறவு நெசவாளர் சங்கங்களின் மூலம் இவைகள் தயாரிக்கப்பட உள்ளது. இதன்படி, நூல் கொள்முதல், உற்பத்தி முன்பணம் வழங்க இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆட்சியில் கடைசி நேரத்தில் இலசவ வேட்டி, சேலை கொள்முதலுக்கு பணம் ஒதுக்கப்பட்டதால் தரமற்ற வேட்டி, சேலை வழங்கப்பட்டதாக பல்வேறு புகார்கள் எழுந்தது. அதனை தவிர்க்கும் வகையில் 6 மாதங்களுக்கு முன்பே பணிகள் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
வேட்டி, சேலைகள் கொள்முதல், உற்பத்தி, தரக் கட்டுப்பாடு மற்றும் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் திட்டமிட்டபடி மேற்கொள்ளப்பட உள்ளன. பின்னர், நியாய விலைக் கடைகள் மூலம் பயனாளிகளுக்கு அவை விநியோகிக்கப்படும்.
மேலும், இந்த வேட்டி, சேலை உடுத்துவதற்கு வசதியாக இருக்கும் வகையில் புதிய நூல் ரகங்களை பயன்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. புதிய ரகத்தில் தயார் செய்ய அரசுக்கு ரூ.642.88 கோடி செலவாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.