

தமிழ்நாடு அரசு நடத்தும் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான விண்ணப்பத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பாடம் எடுக்கக் கூடிய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு(TET Exam) வரும் 18-ம்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
அந்த வகையில் தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்ற TET எனும் ஆசிரியர் தகுதி தேர்வில் பாஸாக வேண்டும் என்பது கட்டாயம். ஆண்டுதோறும் இரண்டு முறை இந்த ‛டெட்' தேர்வு(TET Exam) நடத்தப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டுக்கான ‘(2026) ‛டெட்' தேர்வு தேதிகளை தற்போது ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இந்த ஆசிரியர் தகுதித் தேர்வின் மூலமாக தான் தொடக்க கல்விக்கான இடைநிலை ஆசிரியர், உயர்நிலை மற்றும் மேல் நிலைப் பள்ளிகளுக்கான பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
விண்ணப்பதாரர் www.trb.tn.nic.in என்ற ஆசிரியர் தேர்வு வாரிய ஆதிகாரப்பூர்வ இணைய தளம் மூலமாக ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்றும் விண்ணப்பதாரர் தங்களுடைய பதிவுடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, 2026-ம் ஆண்டுக்கான டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் வருகின்ற பிப்ரவரி 18-ம் தேதியிலிருந்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் ஏப்ரல் 10-ம்தேதி விண்ணப்பம் சமர்பிக்க கடைசி நாள் எனவும் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
தற்காலிகமாக தேர்வு தேதியும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வுக்கான முதல் தாள் தேர்வு ஜூலை 4-ம் தேதியும், 2-ம் தாள் தேர்வு ஜூலை 5-ம் தேதியும் நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த தேதிகள் மாற்றப்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், தேர்வுத் திட்டம், தேர்விற்கான விண்ணப்ப கட்டணம் மற்றும் தேவையான பிற விவரங்களை https://www.trb.tn.gov.in என்ற தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வமான இணைய தளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்றும் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.