ஹோட்டல்களுக்கு தமிழக அரசு வழங்கும் ரூ.1,00,000 பரிசு - விண்ணப்பிப்பது எப்படி..?
தமிழக மக்களின் நலம் காக்கவும், அவர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும் அரசு பல்வேறு நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் தமிழக அரசு ஹோட்டல், சிறிய அளவிலான தெருவோர உணவு கடை வைத்திருப்பவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் ஹோட்டல்களில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை அதிகளவு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதை கவனித்த தமிழக அரசு ஹோட்டல், சிறிய அளவிலான தெருவோர உணவு கடைகளில் இத்தகைய பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாமலும், உணவு பாதுகாப்பு முறைகள் மற்றும் அரசின் விதிமுறைகளை பின்பற்றி உணவு விநியோகம் செய்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசை அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை குறைக்க அரசு பல முக்கிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.
இதன் ஒருபகுதியாக சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு மாநிலம் முழுவதும் தடை விதித்துள்ளது.
எனவே சுற்றுச்சூழலுக்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை குறைக்கும் வகையிலும், ஹோட்டல்களின் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், அரசின் விதிமுறைகளை பின்பற்றுபவர்களை ஊக்குவிக்கும் விதமாகவும் இந்த திட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. அதேபோல், ஹோட்டல்களில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக எளிதில் மட்ககூடிய பொருட்களை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக அரசு அறிவித்துள்ள ரூ.1 லட்சம் பரிசு யாருக்கெல்லாம் கிடைக்கும், அதற்கான விதிமுறைகள் என்ன, அதற்கு எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்து கீழே பார்க்கலாம்...
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின் நெறிமுறைகளை பின்பற்றி பெரிய மற்றும் நடுத்தர ஹோட்டல்களில், மக்களுக்கு பாதுகாப்பான உணவை வழங்கிடும் வகையில், பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாமல் மட்கும் தன்மையுள்ள பொருட்களை கொண்டு, உணவு பரிமாறுதல், மற்றும் உணவுகளை பேக்கீங் செய்யும் உணவகங்களுக்கு ரூ.1 லட்சம் பரிசுத்தொகையுடன் கூடிய விருது வழங்கப்படும் என்றும் அதேபோல் பதிவு சான்று பெற்ற சிறிய அளவிலான தெருவோர உணவு கடைகளுக்கு ரூ.50 ஆயிரத்துடன் கூடிய விருது வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி?
சிறந்த உணவகங்களுக்கான விருதை பெற விருப்பமுள்ளவர்கள், வரும் அக்டோபர் 15-ம்தேதிக்குள் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள B- பிளாக் இரண்டாவது தளத்தில் உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பத்தை வாங்கி பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். அதேபோல் மற்ற மாவட்டத்தினர் அந்தந்த மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பின் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம்.
பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட உணவகத்தினை அதிகாரிகள் கள ஆய்வுசெய்த பின்னர் பலகட்ட ஆய்வுக்கு பிறகு மாவட்டத்திற்கு தலா ஒரு பெரிய உணவகத்தையும், சிறு உணவகத்தையும் சிறந்த உணவகங்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு விருதும், பரிசுத்தொகையும் வழங்கப்படும்.
இந்த விருதுக்கு விண்ணப்பிக்க உணவகங்களுக்கான தகுதிகள்
* இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் கீழ் உரிமம் அல்லது பதிவுச்சான்று பெற்றிருக்க வேண்டும்.
* ஹோட்டல் மேலாளர் உணவு பாதுகாப்பு பயிற்சி (fostac) பெற்றிருக்க வேண்டும். அதற்கான சான்றை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
* ஹோட்டல் பணியாளர்கள் அனைவரும் தொற்று நோய் இல்லாதவர்கள் என்பதற்கான மருத்துவச் தகுதிச்சான்று அவசியம்.
* இந்திய உணவு பாதுகாப்பு ஆணையரகத்தால் சுகாதார மதிப்பீட்டுச் சான்று பெற்றிருக்க வேண்டும்.
* கழிவு மேலாண்மை விதிமுறைகள் மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டு விதிமுறைகளைப் பின்பற்றுவதை உறுதிப்படுத்தும் சுய அறிவிப்பு சரிபார்ப்பு பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும்.