UPSC 2027: தமிழக மாணவர்களுக்கு மாதம் ரூ.7,500 ஊக்கத்தொகை: விண்ணப்பிப்பது எப்படி?

தமிழ்நாடு அரசின் 2027-ம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வுக்கான ஊக்கத்தொகை திட்டத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
UPSC Exams|UPSC ஊக்கத்தொகை
UPSC Exams|UPSC ஊக்கத்தொகை
Updated on

2027 யுபிஎஸ்சி (UPSC) சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வுக்கு தயாராகும் தமிழக மாணவர்களுக்காக தமிழ்நாடு அரசு UPSC குடிமை பணித்தேர்வு ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி இந்த தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் மாதம் ரூ.7,500 ஊக்கத்தொகை பெற மதிப்பீட்டுத் தேர்விற்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் அறிவித்துள்ளது. 2027-ம் ஆண்டு நடைபெறவுள்ள யுபிஎஸ்சி முதல் நிலைத் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு இந்தத் திட்டம் ஒரு வரப்பிரசாதமாக அமையவுள்ளது.

இந்தியாவில் மிக உயரிய ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பதவிகளுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்ய மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆண்டுக்கு ஒரு முறை சிவில் சர்வீஸ் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ் தகுதியான மாணவர்களைத் தேர்ந்தெடுக்கத் தமிழக அரசு ஒரு தகுதித் தேர்வை நடத்தவுள்ளது. இந்தத் திட்டத்திற்கான சிறப்பு மதிப்பீட்டுத் தேர்வு வரும் செப்டம்பர் 6-ம்தேதி மாநிலம் முழுவதும் நடைபெறவுள்ளது.

முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வு என மூன்று கட்டமாக நடத்தப்படும் இந்த தேர்வில் ஒவ்வொரு கட்டமாக தேர்வர்கள் தெரிவு செய்யப்பட்டு இறுதியாக தகுதிப் பெற்றவர்களின் பட்டியல் வெளியிடப்படும்.

யுபிஎஸ்சி முதல் நிலைத் தேர்வுக்குத் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் எவ்விதப் பொருளாதாரத் தடையுமின்றி, தரமான மற்றும் சிறந்த பயிற்சிகளைப் பெற்று ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற உயர் அதிகாரிகள் உருவாவதை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும் இத்தேர்வை எழுதும் தேர்வர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி வருகிறது.

அந்த வகையில், அடுத்த ஆண்டுக்கான (2027) யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வை எழுத தயாராகும் தேர்வர்கள் மாதம் ரூ.7,500 ஊக்கத்தொகைக்காக நடத்தப்படும் மதிப்பீட்டுத் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் நிலைத் தேர்வுக்கு வழங்கப்படும் இந்த மாதாந்திர ஊக்கத்தொகை மட்டுமன்றி, இந்தத் திட்டத்தின் கீழ் பயின்று முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, முதன்மைத் தேர்வுக்குத் தயாராக ஒருமுறை நிதியுதவியாக ரூ. 25,000 வழங்கப்படும்.

UPSC Exams|UPSC ஊக்கத்தொகை
UPSC Exams|UPSC ஊக்கத்தொகைAI Image

தொடர்ந்து முதன்மைத் தேர்விலும் வென்று நேர்முகத் தேர்வுக்குத் தகுதி பெறுபவர்களுக்கு மேலும் ரூ. 50,000 நிதியுதவியும் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

டெல்லி போன்ற வெளிமாநிலங்களுக்கு சென்று பல்லாயிரக்கணக்கில் பணம் செலவு செய்து படிக்க முடியாத நடுத்தர மற்றும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த சிவில் சர்வீசஸ் தேர்வர்களுக்கு இந்தத் திட்டம் ஒரு மிகப்பெரிய ஊன்றுகோலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

UPSC ஊக்கத்தொகை - மதிப்பீடுத் தேர்வுக்கான நடைமுறை மற்றும் விண்ணப்பிப்பது எப்படி?

* தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் பெற்ற தகுதியான மாணவர்கள் இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

* வரும் செப்டம்பர் 6-ம்தேதி நடைபெறும் மதிப்பீட்டு தேர்வின் மூலம் தகுதியான மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இதையும் படியுங்கள்:
யுபிஎஸ்சி தேர்வில் தமிழக மாணவர்கள்...!
UPSC Exams|UPSC ஊக்கத்தொகை

* மதிப்பீடுத் தேர்வு செப்டம்பர் 6-ம்தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரை நடைபெறவுள்ளது. இதற்கான நுழைவுச் சீட்டு ஆகஸ்ட் மூன்றாம் வாரம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

* தேர்வில் தேர்ச்சி பெறும் 1,000 மாணவர்களுக்கு 10 மாதங்களுக்கு மாதம் ரூ.7,500 வீதம் ஊக்கத்தொகை நேரடியாக அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

* கடந்த ஆண்டைப் போலவே அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியின் கட்டுப்பாட்டில் செயல்படும் அகில இந்திய குடிமை பணிகள் பயிற்சி மையங்களில் சேர்க்கையும் இந்த மதிப்பீடு தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் வழங்கப்படும்.

* விண்ணப்பங்கள் அனுப்புவதற்கான காலம் ஜூலை 18-ம்தேதி முதல் தொடங்கியது.

* விண்ணப்பிக்க கடைசி நாள் வரும் ஆகஸ்ட் 3-ம்தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
யுபிஎஸ்சி தேர்வுக்கான இலவச புத்தகங்களை பெறும் 7 வழிகள்!
UPSC Exams|UPSC ஊக்கத்தொகை

கூடுதல் தகவல்கள் மற்றும் இந்த தேர்வின் மூலம் ஊக்கத்தொகை மற்றும் அகில இந்திய குடிமைப் பணிகள் பயிற்சி மையங்களுக்கான சேர்க்கை பெற விரும்பும் ஆர்வமுள்ள மாணவர்கள் https://www.skilldevelopment.tn.gov.in/ என்ற இணையதளம் சென்று விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com