

தமிழ்நாட்டில் சட்ட மன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கூட்டணியை பலப்படுத்தும் நோக்கத்தில் திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட முன்னணி கட்சிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதிமுக கூட்டணியில் தவெக இணையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஈரோடு மக்கள் சந்திப்பில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
தவெக-வை அடுத்த அதிமுக-வாக மாற்றுவேன் என செங்கோட்டையன் தெரிவித்த நிலையில், தவெக தலைமையில் கூட்டணியை பலப்படுத்த முயற்சி செய்து வருகிறார். இந்நிலையில் அதிமுக கூட்டணியில் பாஜக இணைவது உறுதியாகியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாஜக சார்பில் தமிழக சட்டமன்றத் தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் இன்று சென்னைக்கு வரவுள்ள பியூஷ் கோயல், கூட்டணியை பலப்படுத்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள அவரது வீட்டில் சந்திக்கவுள்ளார். இவரது வருகை தமிழ்நாட்டு அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில தேர்தல்களில் பாஜக தமிழ்நாட்டில் சொல்லிக் கொள்ளும் படியான வெற்றியைப் பெறவில்லை. இந்நிலையில் வரப்போகும் சட்டமன்றத் தேர்தலில், பாஜக குறிப்பிட்ட அளவில் வெறறியைப் பெற வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் கருத்து வேறுபாடு காரணமாக பாஜக - அதிமுக கூட்டணி முறிந்த நிலையில், இரு கட்சிகளும் தனித்தனியே போட்டியிட்டு தோல்வியடைந்தன. இதனால் சட்ட மன்றத் தேர்தலில் கூட்டணியை பலப்படுத்தும் நோக்கத்தில் இருகட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன.
அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாகி இருக்கும் நிலையில், இந்தக் கூட்டணியில் தேமுதிக மற்றும் பாமக-வை இணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட இருக்கிறது. தவெக-வின் ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தேமுதிக மற்றும் பாமக-வை தங்கள் கூட்டணியில் இணைக்க களத்தில் இறங்கியுள்ளார். இந்நிலையில் கூட்டணியை பலப்படுத்தும் முயற்சியில் அதிமுக முந்திக் கொள்ள நினைக்கிறது. இதனால் தான் தற்போது பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் இன்று சென்னைக்கு வரவுள்ளார்.
கூட்டணியை பலப்படுத்துவது, கூட்டணி விரிவாக்கம், தொகுதி பஙகீடு, ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் உள்ளிட்டோரை கட்சியில் இணைப்பது உள்ளிட்டவை குறித்து இருவரும் ஆலோசனை செய்யவுள்ளனர். ஏற்கனவே அதிமுக-வில் இருந்து செங்கோட்டையன் தவெக-வில் இணைந்ததால், அதிமுக-வின் பலம் குறைந்து விட்டதாக கருதப்படுகிறது.
இந்நிலையில் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனை அதிமுகவில் இணைக்க பாஜக முயற்சி செய்து வருகிறது. மேலும் கூட்டணியை பலப்படுத்தவும் அதிமுக மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பிறகு, கமலாலயத்தில் பாஜக நிர்வாகிகளை சந்திக்கவுள்ளார் பியூஷ் கோயல். தேர்தல் பணி குறித்து பாஜகவினர் இடையே ஆலோசிக்க உள்ளார். மேலும் இவர் கிண்டியில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.
தேர்தலை எதிர்சகொள்வது எப்படி? கள வியூகம் என்ன? கூட்டணியை பலப்படுத்துவது எப்படி என்பவை குறித்து நிர்வாகிகளுக்கு பியூஷ் கோயல் ஆலோசனை வழங்க உள்ளார்.
மத்திய வர்த்தகம், தொழில்துறை மற்றும் ஜவுளித்துறை அமைச்சராக உள்ள பியூஷ் கோயல், தமிழகத்தில் பாஜகவின் வெற்றிக்கு உறுதுணையாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல்வேறு முக்கிய பொறுப்புகளில் பதவி வகித்த இவர் பாஜகவின் தேசிய பொருளாளராகவும் இருந்துள்ளார்.
மேலும் கடந்த 2021 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் ராஜ்ய சபா தலைவராகவும் பதவி வகித்துள்ளார். இந்நிலையில் இவருடைய அரசியல் அனுபவம், தமிழக பாஜகவின் வெற்றிக்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.