சாலை விபத்துகளில் தமிழகத்துக்கு முதலிடம்; அதிக உயிரிழப்பில் 2-வது இடம்!

Road accident
Road accident
Published on

இந்தியாவில் ஏராளமானவர்கள் சாலை விபத்துகளால் ஒவ்வொரு ஆண்டும் இறக்கின்றனர். உலக அளவில் சாலை விபத்துகள் அதிகம் நடைபெறும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்திய அளவில், அதிக விபத்துகள் நடைபெறும் மாநிலங்களில், தமிழ்நாடு 2-வது இடத்தில் உள்ளது.

நாட்டில் சாலை விபத்துகளும், அதனால் ஏற்படும் மரணங்களும் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் நகரங்களில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. மேலும் கனரக வாகனங்கள் அதிகமாகச் செல்வதால் விபத்துக்கள் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது.

வேலைக்கு சரியான நேரத்திற்கு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் வேகமாகச் செல்வது, போக்குவரத்து விதிகளை மீறுவது போன்றவை விபத்திற்கான முக்கிய காரணங்களாகும். பெரும்பான்மையான விபத்துகளுக்கு முக்கிய காரணமாக கூறப்படுவது மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவது. குடிப்போதையில் வாகனம் ஓட்டுவதால் வாகன ஓட்டுநர்கள் ஓட்டும் திறமையை இழப்பதோடு, முடிவு எடுக்கும் திறனையும் இழந்து விடுகிறார்கள்.

இதையும் படியுங்கள்:
சகாதேவனின் கர்வத்தை அடக்கிய ஸ்ரீ கிருஷ்ணன்!
Road accident

மேலும் ஓட்டுநர்கள் வாகனம் ஓட்டும் போது மொபைல்போனில் பேசுவது, ஏதாவது சாப்பிடுவது, மியூசிக் சிஸ்டத்தை இயக்குவது போன்ற பல்வேறு செயல்களை ஈடுபடுவதால் கவனக்குறைவு ஏற்பட்டு அதிகளவு விபத்துக்கள் நடக்க காரணமாக அமைகிறது.

சில ஓட்டுநர்கள் சாலைகளில் வேக வரம்பை மீறி அதிவேகத்தில் வானத்தை ஓட்டுவதும் விபத்துக்கு வழிகோலுகிறது. மழைக்காலங்களில் மழை நீர் தேங்கிய சாலைகளில் இருக்கும் பள்ளம் மேடுகளை கணிக்க முடியாமல் வாகனங்களை ஓட்ட சிரமம் ஏற்பட்டு விபத்துக்கு அடிகோலுகின்றது.

நமது நாட்டில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிவதில்லை. போக்குவரத்து விதிகளை பற்றி கவலைப்படாமல் வாகனங்களை இயக்குகின்றனர். சாலைகளில் ஆங்காங்கே லாரிகளை நிறுத்தி விபத்துகளை ஏற்படுத்துகின்றனர். சட்டத்தின் மீது மக்களுக்கு மரியாதை மற்றும் பயம் இல்லாததால்தான் இந்த விபத்துகள் நடப்பதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளளார்.

இந்தியாவில் தற்போது சாலை விபத்துகளை கண்காணிக்க ஒருங்கிணைந்த தகவல் அமைப்பை மத்திய அரசு ஏற்படுத்தி உள்ளது. அந்த அமைப்பில் அனைத்து மாநிலங்களும் தங்களது மாநிலத்தில் ஏற்படும் சாலை விபத்துகளை பல்வேறு பிரிவுகளின் அடிப்படையில் பதிவு செய்கின்றன. அதன்படி 2021-ம் ஆண்டு முதல் கடந்த 9-ந்தேதி வரை மொத்தம் 14,10,590 விபத்துகள் நடந்துள்ளன.

அதில் நாட்டிலேயே மிக அதிகமாக தமிழகத்தில்தான் ஒரு லட்சத்து 97 ஆயிரத்து 97 விபத்துகள் நடந்துள்ளன. அதாவது சராசரியாக தமிழகத்தில் தினமும் 141 விபத்துகள் நடப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல் மத்திய அரசு வெளியிட்ட கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு சாலை விபத்துகளில் உயிரிழந்தோர் பட்டியலில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. அதன்படி தமிழகத்தில் ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 847 பேர் மரணம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் 2023-24 புள்ளி விவரப்படி, அந்த ஆண்டில் 4,61,312 சாலை விபத்துகள் ஏற்பட்டன. இதில், 1,68,491 பேர் மரணம் அடைந்தனர். இதுவே 2005-06 ஆண்டில் நடந்த விபத்துகளால் 94,968 இறப்புகள் ஏற்பட்டு இருப்பதாக தகவல்கள் பதிவாகியுள்ளன.

இதையும் படியுங்கள்:
நெல்லை ஸ்பெஷல் பனை ஓலைக் கொழுக்கட்டை!
Road accident

இதை ஒப்பிடும்போது கடந்த 17 ஆண்டுகளில், சாலை விபத்துகளால் இறப்பு 177 சதவீதம் அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்த சாலை விபத்துகளில் 39.2 சதவீதம் தேசிய நெடுஞ்சாலைகளில் நடந்துள்ளன. 23.1 சதவீத விபத்துகள் மாநில நெடுஞ்சாலைகளிலும், மீதமுள்ள 43.9 சதவீதம் சாலைகளில் விபத்துகளும் நடந்துள்ளன.

பொதுவாக, சாலை விபத்துகளுக்கு காரணங்கள் குறித்து உலக சுகாதார நிறுவனம் கூறுவது, கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல், அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல், போக்குவரத்து விதிகள் மற்றும் சிக்னல்களை பின்பற்றாமல் போவது போன்ற காரணங்களைத்தான்.

இதுதவிர, வாகன கோளாறு, அதிக சுமை, கடுமையான மழை, மூடுபனி, போதிய வெளிச்சம் இன்மை, ஹெல்மெட் மற்றும் கார் சீட் பெல்ட் அணியாமல் இருப்பது, செல்போன் பேசி்க்கொண்டே வாகனம் ஓட்டுவது போன்றவையும் விபத்துகளுக்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன.

இந்த விபத்துகளை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு ஒவ்வொரு மாநிலங்களையும் கேட்டுக்கொண்டு உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com