

அரிசி வெறும் உணவு மட்டுமல்ல; நம் வாழ்க்கையோடு ஒன்றிப்போன உணர்வுபூர்வமான தானியம். காலையில் டிபன் முதல் மதியம் சாப்பாடு வரை ஏதோ ஒரு வகையில் அரிசி உணவை நாம் சேர்த்துக்கொள்கிறோம். தமிழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட அரிசி வகைகள் பயன்பாட்டில் இருந்தாலும், பளபளவென வெள்ளை நிறத்தில் மின்னும் பாலிஷ் செய்த அரிசி, மக்களைக் கவர்ந்திழுக்கிறது.
அரிசி உலகின் மிகவும் விரும்பப்படும் மற்றும் பலவிதமாக பயன்படுத்தக்கூடிய உணவுகளில் ஒன்றாகும். இருப்பினும் இது ஆசியாவில்தான் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இது உலகின் மிகப் பழமையான உணவு என்றும் அறியப்படுகிறது. அரிசியானது கிழக்கு ஆசியாவிலிருந்து தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்குப் பரவி, மேற்கத்திய நாடுகள் வழியாக ஐரோப்பாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
அரிசிக்கும் தமிழர்களுக்குமான பந்தம் 8,000 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. இமயமலைப் பகுதியில் வளர்ந்திருந்த ஒருவகைப் புல் வகையிலிருந்துதான் கற்கால மனிதர்கள் அரிசியைக் கண்டுபிடித்தார்கள். அதை Oryza sativa என்று வகைப்படுத்துகிறார்கள். இப்போது நாம் பயன்படுத்துகிற அரிசி Oryza sativa indica இனம். நம் மக்கள் அரிசியைச் செழிப்பின் அடையாளமாகப் பார்க்கிறார்கள்; அதனால்தான் பிறப்பு முதல் இறப்பு வரை எல்லாச் சடங்குகளிலும் அரிசி பிரதானமாக இருக்கிறது.
அப்படிப்பட்ட அரிசியின் விலை கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வருவது அனைவரையும் கவலையடைய செய்துள்ளது.
தமிழ்நாட்டிற்கு ஆண்டுக்குச் சுமார் 95 லட்சம் டன் அரிசி தேவைப்படுகிறது. இதில், சுமார் 75 முதல் 80 லட்சம் டன் அரிசி தமிழ்நாட்டிலேயே உற்பத்தியாகிறது. அதில் 10 லட்சம் டன் மோட்டா ரக அரிசி அண்டை மாநிலமான கேரளாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இதனால் சுமார் 25 லட்சம் முதல் 30 லட்சம் டன் அரிசி அண்டை மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, ஒடிசா, மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. தற்போது தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலும் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், ஒரு கிலோ அரிசி ₹20 முதல் ₹40 வரை உயர்ந்துள்ளது. அரிசி விலை கடந்த ஒரு மாதத்தில் 5.59 சதவீதமும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 52.4 சதவீதமும் உயர்ந்துள்ளது.
சாதாரண அரிசி 26 கிலோ மூட்டை ₹1,800 எனவும், 26 கிலோ சன்னரக அரிசி மூட்டையின் விலை ₹350 அதிகரித்து ₹2,150 ஆகவும் உள்ளது. சன்னரக அரிசி கிலோ ₹82 ஆக உயர்ந்துள்ளது.
2026-ஆம் ஆண்டு காரிஃப் பருவத்தில் நெல் சாகுபடி பரப்பு 449 லட்சம் ஹெக்டேரில் இருந்து 433.62 லட்சம் ஹெக்டேராகக் குறைந்துள்ளது. இந்தச் சரிவுக்கு ‘எல் நினோ’ தாக்கமும் ஒரு முக்கியக் காரணம். ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் தமிழகத்தில் பருவமழை பொய்த்ததால் சாகுபடி பரப்பளவு குறைந்தது. ஆறுகள் மற்றும் அணைகளில் நீர்மட்டம் குறைந்ததால், ஆழ்துளைக் கிணறுகளை மட்டுமே நம்பி விவசாயம் செய்யும் சூழல் ஏற்பட்டு, உற்பத்திச் செலவும் அதிகரித்துள்ளது.
உள்ளூர் தேவைக்குப் போக வெளிமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் அரிசி அனுப்பி வைக்கப்படுகிறது. இதன் காரணமாக விலை கிலோவுக்கு ₹20 முதல் ₹40 வரை உயர்ந்துள்ளது. அரிசி ஆலைகளில் நெல் கையிருப்பு குறைந்துள்ளதால், அரிசி விலை மேலும் உயர வாய்ப்புள்ளது. தீபாவளி பண்டிகைக்கு முன் ஒரு கிலோ அரிசி ₹100-க்கு விற்கப்பட வாய்ப்புள்ளதாக அரிசி ஆலைகள் தரப்பில் எச்சரித்துள்ளனர்.
அரிசி விலை எவ்வளவு உயர்ந்தது?
₹1,400-க்கு விற்பனை செய்யப்பட்ட டீலக்ஸ் பொன்னி தற்போது ₹1,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
₹1,600-க்கு விற்பனை செய்யப்பட்ட பொன்னி அரிசி ₹1,950-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
₹1,900-க்கு விற்பனை செய்யப்பட்ட வெள்ளை பொன்னி அரிசி ₹2,300-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
₹900-க்கு விற்பனை செய்யப்பட்ட இட்லி அரிசி ₹1,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
₹1,500-க்கு விற்பனை செய்யப்பட்ட பச்சரிசி ₹1,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோன்று 25 கிலோ எடை கொண்ட சிவாஜி பொன்னி அரிசி ₹1,800-ல் இருந்து ₹2,400 ஆக உயர்ந்துள்ளது.
30 கிலோ எடை கொண்ட பாஸ்மதி அரிசி ₹3,300-ல் இருந்து ₹3,600 ஆக உயர்ந்துள்ளது.
அதாவது ஒரு மூட்டை அரிசி ₹300 முதல் ₹600 வரை அதிகரித்து உள்ளது.