விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியா? த.வெ.க. விஜய்யின் நிலை என்ன?

நடிகர் விஜய்
நடிகர் விஜய்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வரவுள்ள நிலையில், தன்னுடைய நிலைப்பாடு என்ன என்பதை தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வெளிப்படுத்தியுள்ளார்.

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் திமுக உறுப்பினராக இருந்த புகழேந்தி காலமான நிலையில், அந்தத் தொகுதிக்கு அடுத்த மாதம் 10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலை அதிமுக புறக்கணித்துள்ள நிலையில், திமுக, பாமக, நாம் தமிழர் கட்சிகள் போட்டியிடவுள்ளன. இந்த நிலையில், இந்தத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியை, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் ஆதரிக்கும் என்ற தகவல் வெளியானது. ஆனால், இதனை மறுத்துள்ள தமிழக வெற்றிக்கழகம் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நிலைப்பாடு தொடர்பாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய், தனது மக்கள் இயக்கத்தின் மூலம் அரசியல் கட்சிகளுக்கு இணையாக பல்வேறு மக்கள் நலப்பணிகளை செய்து வருகிறார்.

அரசியல் களத்தில் அடியெடுத்து வைப்பதற்கான அடுத்தடுத்த நகர்வுகளை கடந்தாண்டு முதலே விஜய் தீவிரமாக முன்னெடுத்து வந்தார். குறிப்பாக 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதித்த 234 தொகுதிகளை சேர்ந்த மாணவர்களை நேரில் வரவழைத்து, அவரது கையால் பரிசுகள் வழங்கி கௌரவித்தார். சுமார் 12 மணி நேரம் நீடித்த இந்த நிகழ்வில், மேடையில் நின்று மாணவர்களை கௌரவித்தார். அப்போது பணம் வாங்கிக் கொண்டு ஓட்டுப் போடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் தனது மேடைப் பேச்சில் அறிவுறுத்தினார்.

இப்படி அரசியல் நகர்வை ஸ்கெட்ச் போட்டு செய்யும் விஜய், சமீபத்தில் நடந்து முடித்த மக்களவை தேர்தலில் சீமானுக்கு வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார். இந்த நிலையில் பலரும் இவர் சீமானுடன் கூட்டணியில் இணைவார் என யூகம் செய்தனர். தற்போது வரும் ஜூலை 10ம் தேதி நடைபெறவுள்ள விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடப் போவதில்லை என தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்:
பன்முகத்தன்மை கொண்ட பஞ்சு அருணாசலம் பிறந்த நாள் இன்று!
நடிகர் விஜய்

இது தொடர்பாக தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘தமிழக வெற்றிக் கழகத் தலைவர் தளபதி விஜய், கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி வெளியிட்ட கட்சித் தொடக்க அறிவிப்பிற்கான முதல் அறிக்கையிலேயே, எங்கள் கழகத்தின் அரசியல் நிலைப்பாடு குறித்துத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

‘வரும் 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு, தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் பணியாற்றுவதுதான் நமது பிரதான இலக்கு’ என்று ஏற்கெனவே தெரிவித்துள்ளார். எனவே, அதுவரை இடைப்பட்ட காலத்தில் நடத்தப்படும் உள்ளாட்சித் தேர்தல் உள்பட எந்தத் தேர்தலிலும் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். குறிப்பாக, வருகிற ஜூலை 10ம் தேதி நடைபெற உள்ள விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாது என்றும், எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அறிவுறுத்தலின் பேரில் தெரிவித்துக்கொள்கிறேன்’’ என புஸ்ஸி ஆனந்த் கூறியுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com