இராமேஸ்வரத்திற்கு அருகிலுள்ள ராம சேது பாலம் வழியாக இந்தியா ஒரு காலத்தில் இலங்கையுடன் இணைக்கப்பட்டதாக புவியியல் சான்றுகள் கூறுகின்றன. இந்த விசித்திரமான நகரம் பழங்காலத்திலிருந்தே பயணிகளின் மிகுந்த ஆர்வத்தையும் போற்றுதலையும் பெற்றுள்ளது. இராவணனுடனான போர் முடிந்து திரும்பிய ராமர், மோதலின் போது தான் செய்த பாவங்களை போக்க சிவபெருமானிடம் தவமிருந்து இங்கு பிரார்த்தனை செய்ததாக கூறப்படுகிறது.
இக்கோயிலில் உள்ள சிவலிங்கத்தின் சிலை அவரது வழிபாட்டின் ஒரு பகுதியாக கட்டப்பட்டது என்றும் வரலாறு கூறுகிறது. கோயிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் நகரத்திற்கு பெருமை சேர்க்கின்றன. இராமேஸ்வரம் இந்துக்களின் வழிபாட்டிற்குப் பெயர் பெற்றது. ஸ்கூபா டைவிங் போன்ற சாகச விளையாட்டுகள் இப்பகுதியில் வழங்கப்படும் பொழுதுபோக்குகளில் ஒன்றாகும். இந்நிலையில் தமிழ்நாட்டின் புகழ்பெற்ற மாவட்டமாகவும் அதிக எண்ணிக்கையில் சுற்றுலாப் பயணிகளும் பக்தர்களும் வருகை தரக்கூடிய ஒரு மாவட்டமாகவும் ராமநாதபுரமும், இராமேஸ்வரமும் இருக்கின்றன.
இந்நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் விமான சேவையைக் கொண்டு வருவதில் தமிழ்நாடு அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. அவற்றில் ஒரு பகுதியாக இம்மாவட்டத்தில் விமான நிலையம் ஒன்றை அமைப்பதில் தமிழக அரசு கவனம் செலுத்தி வருகிறது.
இராமநாதபுரம் மாவட்டத்தில் இராமேஸ்வரம், தனுஷ்கோடி ஆகிய இடங்களுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. ஆகையால், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என்னும் கோரிக்கை தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வந்தது. தமிழ்நாடு அமைச்சர் தங்கம் தென்னரசு, ராமேஸ்வரம் பகுதியில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார். இச்சூழலில் தமிழ்நாடு அரசு ராமேஸ்வரத்தில் விமான நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தமிழ்நாடு அரசு விமான நிலையம் அமைக்க இம்மாவட்டத்தில் ஐந்து இடங்களை தேர்ந்தெடுத்து உள்ளது. இந்த ஐந்து இடங்களையும் இந்திய விமான நிலைய ஆணையம் விரைவில் ஆய்வு செய்யும். அதன்பிறகு விரிவான திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு எந்த இடத்தில் விமான நிலையம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிடும். தற்போதைக்கு இந்த ஐந்து இடங்களிலும் இந்திய விமான நிலைய ஆணைய அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள். அதன் பின்னர் முதல் கட்ட ஆய்வு அறிக்கை தயாரிக்கப்படும். இந்த ஐந்து இடங்களிலும் விமான நிலையம் அமைப்பதன் சாதக பாதகங்கள் அந்த ஆய்வறிக்கையில் இடம்பெறும்.
இதனை அடுத்து இந்த ஐந்து இடங்கள் மூன்று இடங்களாக குறைக்கப்படும். பின்னர் இந்த மூன்று இடங்களிலிருந்து ஓர் இடம் தமிழ்நாடு அரசால் தேர்ந்தெடுக்கப்படும். அந்த இடம் விமான நிலையத்துக்கான இடமாக அடுத்த ஆண்டு அறிவிக்கப்படும் என சொல்லப்படுகிறது. ராமேஸ்வரத்தில் விமான நிலையம் அமைப்பதற்கு கிட்டத்தட்ட 700 ஏக்கர் நிலம் தேவைப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஓர் ஓடுபாதையுடன் விமானங்களை இயக்கும் வகையில் இது இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
தற்போது ராமேஸ்வரத்திற்கு வரக்கூடிய வெளிநாட்டவர்களும் வெளிமாநிலத்தவர்களும் மதுரை வரை விமானத்தில் வருகிறார்கள். பின்னர் மதுரையிலிருந்து 3 மணி நேரம் சாலைவழியில் பயணித்து இராமேஸ்வரத்திற்கு வருகிறார்கள். நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் இராமேஸ்வரத்தில் இராமநாத சுவாமி கோயில் மற்றும் தனுஷ்கோடியை பார்வையிடுவதற்காக வருகின்றனர். பெரும்பாலானவர்கள் இங்கிருந்து வாரணாசிக்கு சென்று தங்களுடைய பக்திப் பயணத்தை பூர்த்தி செய்கின்றனர்.
அவர்களுக்கு இங்கு ஏற்பட இருக்கும் இந்த விமான நிலையம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இராமேஸ்வரத்தில் விமான நிலையம் அமைக்கப்பட்டால் அங்கே பல்வேறு உள்கட்டமைப்புகள் மேம்படும். சுற்றுலாத்துறையும் இன்னும் மேம்பட்டு பொருளாதார ரீதியாக அந்த மாவட்டமே பலன்பெறும் என தமிழ்நாடு அரசு நம்பிக்கை தெரிவிக்கிறது. விமான நிலையம் வரும்போது இந்த பகுதியில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல வேலை வாய்ப்புகள் உருவாகும் என்ற நம்பிக்கையும் மக்களிடையே இருக்கிறது.