நாளை பல உண்மைகள் வெளியாகும்..! மின்சார துறையின் வெள்ளை அறிக்கை ரிலீஸ் - அமைச்சர் நிர்மல்குமார்..!

கடந்த கால நிர்வாகச் சீர்கேடுகள் மற்றும் முறைகேடுகள் குறித்த 'வெள்ளை அறிக்கை' (White Paper) நாளை வெளியிடப்படும் என்று மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் அறிவித்துள்ளார்.
Minister Nirmalkumar
Minister Nirmalkumarimage credit-polimernews.com
Updated on

17வது தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் முதல் கூட்டத்தொடர், புதிய முதலமைச்சர் விஜய் தலைமையில் ஆளுநர் உரையுடன் ஜூன் 18-ம்தேதி தொடங்கி மூன்று நாட்கள் நடைபெற்று நேற்றுடன் நிறைவடைந்தது.

முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தவெக (TVK) அரசின் முதல் சட்டமன்றக் கூட்டமாக இது அமைந்தது. கூட்டத்தொடரின் முதல் நாளில் ஆளுநர் விஸ்நாத் அர்லேகர் தனது உரையை வாசித்தார். அரசின் கொள்கைகளை விளக்கும் ஆளுநர் உரை எவ்வித மாற்றமுமின்றி முழுமையாக வாசிக்கப்பட்டது.

முதல் கூட்டத்தொடரின் கடைசி நாளான நேற்று, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்மீதான விவாதத்திற்குப் பதிலளித்த முதலமைச்சர் விஜய், பாரம்பரிய அரசியல் கட்சிகள் பொதுமக்களின் முக்கியப் பிரச்சினைகளைத் தீர்க்கத் தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டினார்.

அப்போது ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே காரசாரமான விவாதங்கள் அரங்கேறின. தமிழக வெற்றிக் கழகத்தின் அரசை நோக்கி எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மின்வெட்டு மற்றும் சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை முன்வைத்து கடுமையான குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.

முதலமைச்சர் விஜய் ஆற்றிய உரை, திராவிட முன்னேற்றக் கழகம் (DMK) மற்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (AIADMK) ஆகிய கட்சிகளை கடுமையாக விமர்சித்தும், தவெகவின் (TVK) தேர்தல் வெற்றியை நியாயப்படுத்தியும் அமைந்தது.

முதலமைச்சர் ஆதாரத்துடன் குற்றச்சாட்டுகளை தெரிவிக்க வேண்டும் என குறுக்கிட்டு எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச சபையில் கடும் அமளி நிலவியது. தொடர்ந்து எதிர்கட்சி எம்எல்ஏ-க்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

முதலமைச்சர் விஜய்யின் பதிலுரையைத் தொடர்ந்து சட்டப்பேரவை நிகழ்வுகளை முடிவடைந்தது அதனைத்தொடர்ந்து சட்டமன்றப் பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார்.

அப்போது செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த அவர், நாளை (ஜுன்.25) காலை எரிசக்தித் துறைக்கு புதிதாக நியமனம் செய்யவுள்ளவர்களுக்கு முதலமைச்சர் பணிநியமன ஆணை வழங்குவார். அதனைத்தொடர்ந்து மின்சாரத் துறையின் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.

சிடிஆர் நிர்மல் குமார்!
சிடிஆர் நிர்மல் குமார்!source:newsmill

தமிழக மின்சார வாரியத்தின் (TANGEDCO)தற்போதைய நிதி நிலைமை, கடந்த கால நிர்வாகச் சீர்கேடுகள் மற்றும் முறைகேடுகள் அனைத்தையும் தோலுரித்துக் காட்டும் மிக விரிவான 'வெள்ளை அறிக்கை' (White Paper) நாளை அதிகாரப்பூர்வமாகத் தாக்கல் செய்யப்படும் என்று மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் அறிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பெரும் புயலை கிளப்பி உள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் மின்சாரத் துறையில் எப்படியெல்லாம் நிர்வாகச் சீர்கேடுகள் நடந்துள்ளது, தேவையின்றியும், கூடுதல் விலைக்கும் மின்கம்பங்கள் மற்றும் மின்மாற்றிகள் வாங்கப்பட்டது எப்படி? மின்சார வாரியம் தற்போது எத்தனையாயிரம் கோடி கடன் சுமையில் தத்தளிக்கிறது? என்பது போன்ற அனைத்து உண்மைகளும் அந்த வெள்ளை அறிக்கையின் மூலம் மக்களின் பார்வைக்கு வைக்கப்படவுள்ளன.

இதையும் படியுங்கள்:
தமிழக அரசியலில் பரபரப்பு..! அடுத்த வாரம் மின்வாரிய 'கறுப்புப் பக்கங்கள்' ரிலீஸ் - நிர்மல் குமார்..!!
Minister Nirmalkumar

இதற்கிடையே கடந்த ஜூன் 16-ம்தேதி தமிழக அரசின் நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் மரியா வில்சன் வெளியிட்டு இருந்தார்.

அதன் அறிக்கையின் சூடே இன்னும் குறையாத நிலையில், நாளை புதிதாக மின்சார துறையின் கடந்த கால நிர்வாக முறைகேடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று அறிவித்திருப்பது கடந்த ஆட்சிகாலத்தில் பெரிய புள்ளிகள் தலையில் இடியை இறக்கியுள்ளது.

நிதியமைச்சர் மரிய வில்சன் வெளியிட்ட தமிழ்நாட்டின் நிதி நிலைமை தொடர்பான வெள்ளை அறிக்கையில், தமிழகத்தின் மொத்த கடன், திமுக ஆட்சியில் கடன் இருமடங்கானது, அரசின் வரவு செலவு கணக்குகள், நிதி நிலை, கடந்த திமுக அரசின் செயல்பாடுகள், ஒவ்வொரு துறைக்கும் எவ்வளவு கடன் இருக்கிறது என்பது பற்றியும் தெளிவாக குறிப்பிடப்பட்டு இருந்தன.

இதையும் படியுங்கள்:
ஒவ்வொரு தனிநபர் மீதும் ரூ.1,28,934 கடன் சுமை: வெள்ளை அறிக்கை காட்டும் அதிர்ச்சி தகவல்..!
Minister Nirmalkumar

இந்நிலையில் நாளை மின்சாரத் துறையின் வெள்ளை அறிக்கை வெளியாக உள்ளதால் இதில் திமுகவில் என்னென்ன தில்லுமுல்லு வெளிவரப்போகிறது என்று மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

logo
Kalki Online
kalkionline.com