

தெற்கு கென்யாவின் காஜியாடோ மாகாணத்தில் உள்ள மகோடி ஏரிப் பகுதியில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் இந்திய நிறுவனமான ‘டாடா கெமிக்கல்ஸ் மகோடி லிமிடெட் நிறுவனம்’ (Magadi Soda) தனது ஆலை செயல்பாடுகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் வில்லியம் ரூட்டோ அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். ஒரு நூற்றாண்டு காலமாக இயங்கி வரும் போதிலும், உள்ளூர் மக்களுக்கு போதிய வேலைவாய்ப்புகளையோ அல்லது தொழில்துறை வளர்ச்சியையோ இந்நிறுவனம் வழங்கத் தவறிவிட்டது என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். இதையடுத்து டாடா குழுமத்துக்கும் கென்யா அரசுக்கும் இடையிலான மோதல் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து வரும் நிலையில் தற்போது மேலும் தீவிரமடைந்துள்ளது.
தெற்கு கென்யாவின் காஜியாடோ (Kajiado) மாகாணத்தில் உள்ள மகோடி ஏரிப் பகுதியில் டாடா கெமிக்கல்ஸ் மகோடி லிமிடெட் நிறுவனம் (Tata Chemicals Magadi Limited) செயல்பட்டு வருகிறது.
கண்ணாடி தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு தொழில்களுக்குப் பயன்படும் சோடா ஆஷ் (Soda Ash) தயாரிப்பதற்குத் தேவையான 'டிரோனா' (Trona) என்னும் கனிமம், மகடி ஏரியில் (Lake Magadi) பெருமளவில் கிடைக்கிறது.
மகடியில் 1911-ஆம் ஆண்டு 'பிரன்னர் மாண்ட்' (Brunner Mond) நிறுவனத்தால் தொடங்கப்பட்ட சோடா ஆஷ் ஆலை, 2005-ஆம் ஆண்டு அந்நிறுவனத்தை டாடா கெமிக்கல்ஸ் நிறுவனம் கைப்பற்றியதன் மூலம் டாடா வசமானது."
இங்கிருந்து ஆண்டுதோறும் 3.5 லட்சம் டன்களுக்கும் அதிகமான சோடா ஆஷ் தென்கிழக்கு ஆசியா, இந்தியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வரும் நிலையில், கடந்த ஜூலை 28-ஆம் தேதி கென்யாவின் சுரங்கத்துறை அமைச்சகம் டாடா நிறுவனத்தின் சுரங்கப் பணிகளைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க உத்தரவிட்டது.
கனிமங்களை உள்நாட்டிலேயே சுத்திகரிக்கத் தவறியமை, ராயல்டி நிலுவைத் தொகை, உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்காதது மற்றும் சுற்றுச்சூழல் விதிகளை மீறியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் டாடா நிறுவனம் மீது சுமத்தப்பட்டு விளக்கம் கேட்கப்பட்டதாக கென்ய அரசு தெரிவித்தது.
ஆனால், டாடா கெமிக்கல்ஸ் நிறுவனம் விதிமுறைகளுக்கு முழுமையாக இணங்குவதாக தெரிவித்தது. மேலும் கென்ய சுரங்க அமைச்சகம் கேட்ட அனைத்து தகவல்கள், அறிக்கைகள் மற்றும் ஆவணங்களையும் கடந்த ஆகஸ்ட் 11-ம்தேதி சமர்ப்பித்ததாகவும் டாடா நிறுவனம் கூறியுள்ளது.
இந்நிலையில்தான், டாடா கெமிக்கல்ஸ் நிறுவனத்தை நாட்டை விட்டு வெளியேறுமாறு கென்ய அதிபர் வில்லியம் ரூட்டோ பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.
காஜியாடோவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட அதிபர் வில்லியம் ரூட்டோ அங்கு பேசுகையில், ‘டாடா நிறுவனத்திடம் 100 ஆண்டுகால ஒப்பந்தம் உள்ளது. ஆனால், அவர்கள் காஜியாடோவில் புதிதாக ஒரு தொழிற்சாலையையோ, கண்ணாடித் தயாரிப்பு ஆலையையோ கூட ஏற்படுத்தவில்லை.
நமது இயற்கை வளங்களை இந்தியாவுக்கும் பிற நாடுகளுக்கும் கொண்டுசெல்கிறார்கள். நாம் மற்றவர்களுக்கு அடிமைகளா?’ எனத் தெரிவித்தார்.
மேலும், கென்யா அரசு வெறுமனே இயற்கை வளங்களை வெட்டி எடுத்து ஏற்றுமதி செய்வதை மட்டும் விரும்பவில்லை. மாறாக, வளங்கள் கிடைக்கும் இடத்திலேயே தொழிற்சாலைகளைக் கட்டி உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பையும், தொழில் வளர்ச்சியையும் உருவாக்க விரும்புவதாக கூறிய அதிபர், டாடா நிறுவனத்திற்குப் பதிலாக புதிய முதலீட்டாளர்களைக் கொண்டு வந்து, காஜியாடோ பகுதியில் பெரிய அளவிலான கண்ணாடி தொழிற்சாலைகள் மற்றும் ரசாயன உற்பத்தி ஆலைகளை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
கென்யாவில் டாட்டா கெமிக்கல்ஸ் நிறுவனம் ‘மகடி சோடா’ பிரிவை நடத்தி வருகிறது. இது கண்ணாடி தயாரிப்பு மற்றும் பிற உற்பத்திச் செயல்பாடுகளுக்குப் பயன்படும் தொழில்துறை வேதிப்பொருளான சோடா ஆஷை (Soda Ash) உற்பத்தி செய்கிறது.
இந்த மகடி தொழிற்சாலை செயல்பாடுகளே கென்ய அரசாங்கத்திற்கும் அந்நிறுவனத்திற்கும் இடையே சமீபத்தில் வெடித்துள்ள இந்தச் சர்ச்சையின் மையப்புள்ளியாக அமைந்துள்ளது.
அதிபரின் குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்த டாடா நிறுவனம், ‘கென்ய அரசின் அதிகாரத்தை மதிப்பதாகவும், சட்டப்பூர்வ முறையில் இந்தப் பிரச்சினைக்கு அமைதியான முறையில் தீர்வு காண விரும்புவதாகவும்’ தெரிவித்துள்ளது.
மேலும், மகடிப் பகுதியில் சுமார் 500 நேரடி ஊழியர்கள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் டாடா நிறுவனத்தைச் சார்ந்துள்ளனர் என்றும், சுமார் 30,000 உள்ளூர் மக்கள் நிறுவனத்தின் குடிநீர், சுகாதாரம் மற்றும் கல்விச் சேவைகளால் நேரடியாகப் பயனடைந்து வருகின்றனர் என்றும் அக்குழுமம் தெரிவித்துள்ளது.
கென்ய அதிபரின் உத்தரவை இறுதி முடிவாகக் கருதவில்லை என்றும், பேச்சுவார்த்தை மூலம் இதற்குத் தீர்வு காணப்படும் என்றும் டாடா நிறுவனம் தெரிவித்துள்ளது.