
ஆசிரியர் வேலைக்கான அறிவிப்பு கடைசியாக கடந்த 2022 மார்ச் மாதத்தில் வெளியாகி, அக்டோபரில் தேர்வு நடத்தப்பட்டது. அதன்பின் 2023 இல் அடுத்த அறிவிப்பு வெளியாகி தேர்வு நடைபெறாமல் தள்ளிப் போனது. கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் (Teachers Recruitment Board) அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி வருகின்ற செப்டம்பர் 08 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.
அரசு வேலைகளில் பணியாற்ற வேண்டும் என்ற பலரது கனவுகளை நிறைவேற்ற தமிழக அரசு சார்பில் போட்டித் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. அவ்வகையில் நடப்பாண்டு நடைபெறவிருக்கும் ஆசிரியர் தகுதித் தேர்வு (Teachers Eligibility Test), ஆசிரியருக்கான படிப்பை முடித்த மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விண்ணப்பக் கட்டணம்:
பொதுப்பிரிவு விண்ணப்பதாரர்கள் ரூ.600 செலுத்த வேண்டும். எஸ்/எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் இராணுவத்தினர் ரூ.300 செலுத்த வேண்டும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 18 வயதை பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.
தேர்வு நடைபெறும் தேதி:
முதல் தாள் தகுதித் தேர்வு - நவம்பர் 01, 2025.
இரண்டாம் தாள் தகுதித் தேர்வு - நவம்பர் 02.
தகுதிகள்:
முதல் தாள் எழுத்துத் தேர்வை எழுத 12 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் தொடக்க கல்வியில் பட்டயப் படிப்பை முடித்திருக்க வேண்டும். இரண்டாம் தாள் எழுத்துத் தேர்வை எழுத இளங்கலை பட்டம் மற்றும் சம்பந்தப்பட்ட இளங்கலை கல்வியியல் பட்டத்தையும் முடித்திருக்க வேண்டும்.
கடைசி தேதி:
http://www.trb.tn.gov.in என்ற இணையதளத்தில் 08.09.2025 ஆம் தேதிக்குள் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டும். புகைப்படம், கையெழுத்து மற்றும் தேவையான அனைத்து ஆவணங்களையும் இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. தேர்வுக்கு முன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஹால் டிக்கெட் வெளியிடப்படும். முதல் தாள் மற்றும் இரண்டாம் தாள் இரண்டிலும் தலா 150 கேள்விகள் கேட்கப்படும். கலந்தாய்வுக்கு முன் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசிரியர் தகுதித் தேர்வை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருந்த இளைஞர்கள், காலம் தாழ்த்தாது உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் (http://www.trb.tn.gov.in) பார்வையிடவும்.