

வனப்பகுதிகளில் செல்லும் ரயில்வே தண்டவாளங்களில், யானைகள் ரயில் விபத்தில் சிக்குவது அடிக்கடி நடந்து வருகிறது. கடந்த டிசம்பர் 20ஆம் தேதி கூட அசாமில் தண்டவாளத்தை கடக்க முயன்ற எட்டு யானைகள் ரயில் மோதி பலியாகின. இந்நிலையில் காட்டு உயிரினங்களைப் பாதுகாக்க கோவையில் ஏஐ தொழில்நுட்ப உதவியுடன், கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 6,000 யானைகள் ரயில்வே தண்டவாளத்தை பாதுகாப்பாக கடந்து சென்றதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கோவை வனப் பகுதிகளில், காட்டு உயிரினங்கள் எதுவும் ரயில் விபத்தில் சிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
கோவையிலிருந்து கேரளாவிற்கு போத்தனூர் மற்றும் வாளையார் வழியாக ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்கள் மதுக்கரை வனப்பகுதியை கடந்து செல்வது வழக்கம். ரயில்கள் செல்வதற்கு ஏ மற்றும் பி என்று இரண்டு பாதைகள் உள்ளன. இதில் ஏ ரயில் பாதையில் 2.9 கி.மீ. மற்றும் பி ரயில் பாதையில் 4.15 கி.மீ. தொலைவு வனப்பகுதிக்குள் இருக்கின்றன. இந்த பகுதிகளில் காட்டு உயிரினங்கள் அடிக்கடி ரயில் பாதையை கடந்து செல்லும்போது விபத்துகள் ஏற்படுகின்றன.
குறிப்பாக யானைகள் இந்த ரயில் விபத்தில் அதிகளவில் உயிரிழப்பதாக ரயில்வே துறைக்கு புகார்கள் வந்து கொண்டே இருந்தன. இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கும் வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியுடன் காட்டு யானைகள் உயிரிழப்பு முற்றிலுமாக தவிர்க்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் உள்ள வாளையார் முதல் கஞ்சிக்கோடு வரையிலான வனப்பகுதிக்குள், கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் 35 யானைகள் ரயில் மோதி உயிரிழந்துள்ளன. இந்நிலையில் யானைகளின் உயிரிழப்பைத் தடுக்க வனத்துறையுடன் கைகோர்த்தது ரயில்வே துறை. இதன் ஒரு பகுதியாக வாளையார் பகுதிக்கு அருகில் 2 இடங்களில் யானைகள் வந்து செல்ல சுரங்கப் பாதைகள் அமைக்கப்பட்டன.
மேலும் ஏஐ தொழில்நுட்ப உதவியுடன் யானைகளின் நடமாட்டத்தை 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதற்காக 12 டவர்கள் அமைக்கப்பட்டு, சுமார் 24 AI கேமராக்கள் வனப்பகுதிக்குள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் யானைகள் தண்டவாளத்திற்கு அருகில் வரும் போதெல்லாம் எச்சரிக்கை அனுப்பப்பட்டு ரயில்களின் வேகம் குறைக்கப்பட்டது.
காட்டு உயிரினங்களைப் பாதுகாக்கும் இந்த பணியில் கிட்டத்தட்ட 7.05 கி.மீ. தொலைவு வனப்பகுதியை ரயில்வே துறை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
காட்டு யானைகள் தண்டவாளத்திற்கு அருகே வரும் போது வனத்துறை, ரயில்வே துறை மற்றும் லோகோ பைலட் உள்ளிட்ட அனைவருக்கும் கட்டுப்பாட்டு அறையில் இருந்து எச்சரிக்கை அனுப்பப்படும். உடனே லோகோ பைலட் ரயில்களின் வேகத்தைக் குறைப்பார். யானைகள் பாதுகாப்பாக தண்டவாளத்தை கடந்த பின்னர், வனப்பகுதியை ரயில் கடந்து செல்லும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் தண்டவாள பராமரிப்பு பணிகளில் வேலை ஆட்கள் ஈடுபடும் போது, யானைகள் வந்தால் அவற்றை விரட்டும் பணியும் தொடர்ந்து நடந்து வருகிறது.
மதுக்கரையில் அமைக்கப்பட்டுள்ள ஏஐ கட்டுப்பாட்டு அறையை ஆய்வு செய்த தமிழ்நாடு சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகு, கைதட்டி தனது பாராட்டுகளையும் தெரிவித்தார். ரயில் விபத்தில் இருந்து காட்டு உயிரினங்களை பாதுகாக்கும் வகையில், நாடு முழுவதும் இந்த திட்டத்தை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்