பிள்ளைகளே உஷார்..! இனி பெற்றோரை பராமரிக்காவிட்டால் சம்பளத்தில் 15% கட்..!!

வயதான பெற்றோரை பாதுகாக்கும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த மசோதா தெலுங்கானாவில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
Telangana CM Revanth Reddy
Telangana CM Revanth Reddyimage credit-thehindustangazette.com, tv.rediff.com
Published on

தெலுங்கானா அரசு தாக்கல் செய்துள்ள புதிய சட்ட மசோதா, பெற்றோரைப் பராமரிக்கத் தவறும் அரசு மற்றும் தனியார் ஊழியர்களின் சம்பளத்தில் ஒரு பகுதியை நேரடியாகப் பிடித்தம் செய்து பெற்றோரின் வங்கிக் கணக்கில் வழங்க வழிவகை செய்கிறது.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை நல்ல முறையில் வளர்த்து அனைவரும் மதிக்கும் வகையில் ஆளாக்குகின்றனர். ஆனால் பிள்ளைகள் நல்ல வேலை, வருமானம் கிடைத்து நல்ல நிலைமைக்கு வந்தவுடன் பெற்றோர்களை கண்டு கொள்ளாமல் விட்டு விடுகின்றனர். வயதான காலத்தில் பிள்ளைகளால் புறக்கணிக்கப்படும் பெற்றோர்கள், தள்ளாத வயதில் உழைக்க சக்தி இல்லாமல் யாசகம் பெற்று உயிர்வாழும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்க முன்பு நடந்த அரசு நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, பெற்றோர்களை கவனிக்க தவறும் அரசு ஊழியர்கள் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, அவர்களின் சம்பளத்தில் 10 முதல் 15 சதவீதம் வரை சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று அறிவித்திருந்தார்.

இதற்கிடையே பெற்றோரைப் பராமரிக்கத் தவறும் அரசு ஊழியர்கள் மட்டுமின்றி தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தில் குறிப்பிட்ட தொகையைப் பிடித்தம் செய்து, அதனை நேரடியாகப் பெற்றோரின் வங்கிக் கணக்கில் செலுத்துவதற்கான புதிய சட்ட மசோதாவை தெலுங்கானா அரசு சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ளது.

இதையும் படியுங்கள்:
பெற்றோரைப் பிரித்து தனிக்குடித்தனம் கேட்டால் விவாகரத்து: உயர்நீதி மன்றம்!
Telangana CM Revanth Reddy

'தெலுங்கானா ஊழியர்கள் பொறுப்புடைமை மற்றும் பெற்றோருக்கான ஆதரவு கண்காணிப்பு மசோதா 2026' (Telangana Employees Accountability and Monitoring of Parental Support Bill, 2026) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மசோதா, பிள்ளைகளார் கைவிடப்படும் முதியோர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ளது.

அதாவது, தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஊழியர்கள் தங்கள் பெற்றோரைப் புறக்கணிக்கும் பட்சத்தில், அவர்களின் மொத்த ஊதியத்திலிருந்து 15 சதவீதம் அல்லது ரூ.10,000 (இவ்விரண்டில் எது குறைவோ அந்தத் தொகை) பிடித்தம் செய்து, அப்பணத்தைப் பெற்றோருக்கே வழங்கும் வகையிலான ஒரு மசோதா தெலுங்கானா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த மசோதாவின் முக்கிய நோக்கம், சமூகத்தில் முன்மாதிரியாக இருக்க வேண்டிய ஊழியர்கள், வயதான காலத்தில் தங்களை நம்பியுள்ள பெற்றோரைப் புறக்கணிப்பதைத் தடுத்து, அவர்களுக்கு ஒரு வலுவான சட்டப் பாதுகாப்பை வழங்குவதேயாகும்.

ஏற்கனவே 2007-ம் ஆண்டு மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட 'பெற்றோர் மற்றும் முதியோர் பராமரிப்பு மற்றும் நலச் சட்டம்' நடைமுறையில் இருந்தாலும், சம்பளம் பெறும் ஊழியர்களிடம் இருந்து பராமரிப்புத் தொகையைப் பெறுவதற்கு இன்னும் கூடுதலான மற்றும் உறுதியான வழிமுறை தேவை என்பதை உணர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த மசோதாவின்படி, அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மட்டுமல்லாமல், சட்டமன்ற உறுப்பினர்கள் (MLA), சட்டமேலவை உறுப்பினர்கள் (MLC), மாநகராட்சி உறுப்பினர்கள், நகராட்சி மன்ற உறுப்பினர்கள், ஊராட்சித் தலைவர்கள் (சர்பஞ்ச்) உள்ளிட்ட பிற மக்கள் பிரதிநிதிகளுக்கும் பொருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய சட்டத்தின் கீழ், சம்பந்தப்பட்ட ஊழியர் பணிபுரியும் துறையில் ஒரு 'நியமன அதிகார அமைப்பை' (Appointing Authority) அரசு அமைக்கும். ஏதேனும் ஒரு ஊழியர் பெற்றோர் பராமரிப்பைப் புறக்கணித்தால், அவரைச் சார்ந்திருக்கும் பெற்றோர், ஊழியரின் மாதச் சம்பளத்தைப் பங்கீடு செய்யக் கோரி, நியமிக்கப்பட்ட அதிகாரியிடம் எழுத்துப்பூர்வமாக விண்ணப்பிக்கலாம்.

அவ்வாறு பங்கீடு செய்யப்பட்ட தொகையானது, ஊழியரின் சம்பளத்திலிருந்து நியமன அதிகாரியால் ஒவ்வொரு மாதமும் நேரடியாக அவர்களுக்கு வழங்கப்படும். ஆனால் அதற்கு ஊழியரின் பெற்றோர், தங்கள் வாழ்வாதாரத்தை கண்ணியமான முறையில் பராமரிக்க போதுமான வருமான ஆதாரம் இல்லை என்பதையும், ஊழியரிடமிருந்து நிதி உதவி தேவை என்பதையும் முதற்கட்டமாக நிரூபிக்க வேண்டும்.

பெற்றோரிடமிருந்து விண்ணப்பம் பெறப்பட்டவுடன், நியமிக்கப்பட்ட அதிகாரி அந்த விண்ணப்பத்தை 60 நாட்களுக்குள் பரிசீலித்து தீர்வளிக்க வேண்டும். நியமிக்கப்பட்ட அதிகாரி 60 நாட்களுக்குள் தீர்வளிக்க தவறினால், பெற்றோர் 45 நாட்களுக்குள் மூத்த குடிமக்கள் ஆணையத்திடம் மேல்முறையீடு செய்யலாம். ஆணையம் அந்த மேல்முறையீட்டை 60 நாட்களுக்கு மிகாத காலத்திற்குள் தீர்க்க வேண்டும்.

சார்ந்திருக்கும் பெற்றோரில் ஒருவர் (தாய் அல்லது தந்தை)இறக்க நேரிட்டால், உயிருடன் இருக்கும் மற்றொருவர், ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்யப்பட்ட பங்கீட்டுத் தொகையைத் தமது வங்கிக் கணக்கிற்கு மாற்றக்கோரி விண்ணப்பிக்கலாம். ஊழியரை சார்ந்திருக்கும் பெற்றோர்கள் இருவருமே இறக்க நேரிட்டால், சம்பந்தப்பட்ட ஊழியர், பெற்றோர்களின் இறப்பைக் காரணமாகக் காட்டி, ஊதியத்திலிருந்து பங்கீட்டுத் தொகையைப் பிடித்தம் செய்வதை ரத்து செய்யுமாறு கோரி, நியமிக்கப்பட்ட அதிகாரியிடமோ அல்லது முதியோர் நல ஆணையத்திடமோ விண்ணப்பிக்கலாம்.

இதையும் படியுங்கள்:
தெலுங்கானா கர்நாடகாவை பின்னுக்கு தள்ளி தமிழ்நாடு முதலிடம்..! மிரள வைக்கும் ரிப்போர்ட்!
Telangana CM Revanth Reddy

வயதான பெற்றோரை பாதுகாக்கும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த மசோதா தெலுங்கானாவில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com