

தெலுங்கானாவின் மாத சம்பளம் மற்றும் ஓய்வூதிய செலவுகள் கடந்த பத்தாண்டுகளில் நான்கு மடங்கு உயர்ந்து சுமார் ரூ.6,000 கோடியாக உயர்ந்துள்ளது தெரிய வந்துள்ளது. நீண்டகாலமாக பணியாற்றும் துப்புரவுத் தொழிலாளர்கள் ரூ.2 லட்சம் வரை சம்பாதிக்கின்றனர். ஓட்டுநர்கள் மாதம் ரூ.1 லட்சத்தைத் தாண்டியுள்ளனர். குறிப்பாக மின்சாரத் துறையில் தூய்மைப் பணியாளர்கள் போன்ற நான்காம் நிலை ஊழியர்கள்கூட மாதத்திற்கு சுமார் ரூ2 லட்சம் வரை ஊதியம் பெறுவது கவனத்தை ஈர்க்கிறது.
அம்மாநில தலைமைச் செயலாளர் கே. ராமகிருஷ்ணா ராவ் வெளியிட்ட தகவல்படி, 2014-ல் ஆந்திரப் பிரதேசத்திலிருந்து தெலுங்கானா பிரிக்கப்பட்டபோது, ரூ 1,500 கோடியாக இருந்த இந்தச் செலவு, தற்போது ரூ6,000 கோடியாக உயர்ந்துள்ளது. அதன் பிறகு, தொடர்ச்சியான ஊதிய திருத்தங்கள் செலவை கிட்டத்தட்ட 300% அதிகரித்து, மாநிலத்தின் நிலையான செலவினங்களை கடுமையாக அதிகரித்துள்ளன. தேர்தல்களை ஒட்டி நடந்த ஊதிய திருத்தங்களே முக்கிய காரணம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொருளாதார மற்றும் சமூக ஆய்வுகள் மையம் ஏற்பாடு செய்த 16வது நிதி ஆணையத்தின் பரிந்துரைகள் குறித்த மாநாட்டில் பேசிய ராமகிருஷ்ணா ராவ், இந்த திருத்தங்களின் ஒரு குறிப்பிடத்தக்க விளைவு என்னவென்றால், சில பொதுத்துறை ஊழியர்கள் இப்போது ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் ஆளுநரை விட அதிகமாக சம்பாதிக்கிறார்கள் என்று கூறினார்.
பிற அரசுத் துறைகளைப் போலன்றி, 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய திருத்தங்கள் செய்யப்படுவதே மின்வாரிய ஊழியர்களின் உயர் சம்பளத்திற்குக் காரணம் என்று ராவ் மேலும் விளக்கினார்.
மாநில மின்சார வாரியங்களில் உயர் மட்டத்தில் உள்ள தலைமைப் பொறியாளர்கள் மாதத்திற்கு ரூ.7 லட்சம் வரை பெறுகின்றனர். குறிப்பாக, சம்பள உயர்வு அனைத்து நிலைகளிலும் பரவியுள்ளதால், தொடக்க நிலை நகராட்சி ஊழியர்கள் கூட மாதத்திற்கு சுமார் ரூ.28,000 சம்பாதிக்கின்றனர். சுமார் 30 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்ட ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர்கள் மாதந்தோறும் ரூ.1 லட்சத்திற்கு மேல் சம்பளம் பெற முடியும் என கூறியுள்ளார். தூய்மைப் பணியாளர்கள் உட்பட நான்காம் நிலை ஊழியர்கள்கூட சுமார் ரூ 2 லட்சம் மாத ஊதியம் ஈட்டுகின்றனர் என்றார்.
கிரேட்டர் ஹைதராபாத் மாநகராட்சியில், (GHMC) சுமார் 2% துப்புரவுத் தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர், இதனால் அவர்கள் இதர சலுகைகள் இல்லாமல், சராசரியாக ரூ 70,000 மாத ஊதியம் வழங்கப்படுகிறது.
சம்பள திருத்தங்கள் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஊதிய திருத்த ஆணையங்கள் மூலம் தீர்மானிக்கப்படுகின்றன. இத்தகைய அதிக ஊதியம் அரசு வேலைகளுக்கான போட்டியை தீவிரப்படுத்தியுள்ளது. சமீபத்தில் அறிவிக்கப்பட்ட 563 குரூப்-1 பணியிடங்களுக்கு, ஒரு இடத்திற்கு 799 பேர் என விண்ணப்பங்கள் குவிந்ததாக ராவ் கூறினார்.
சம்பளச் சுமை அதிகரித்து வந்தாலும், வலுவான பொருளாதார செயல்திறன் காரணமாக தெலுங்கானா செலவினங்களைத் தாங்கிக்கொள்ள முடிந்ததாக தலைமைச் செயலாளர் ராமகிருஷ்ணா ராவ் தெரிவித்தார். மேலும் தெலுங்கானா மாநிலம் தோராயமாக 11% வளர்ச்சியையும் வருவாய் ஆதாரங்களில் நிலையான உயர்வையும் பதிவு செய்துள்ளது என்று ராவ் கூறினார்.
“நாங்கள் மானியங்களுக்காக வலுவான டிஜிட்டல் உள்கட்டமைப்பை உருவாக்கியுள்ளோம். ரிது பந்து திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரூ.7,000 கோடியை விநியோகித்தோம், இந்த செயல்பாட்டில் 6% பிழை விகிதம் மட்டுமே உள்ளது,” என்று அவர் கூறினார்.
தெலுங்கானா உருவானதிலிருந்து முதல் 10 ஆண்டுகளில், மொத்தம் ரூ.15 லட்சம் கோடியை செலவிட்டது.இதில், கிட்டத்தட்ட ரூ.12 லட்சம் கோடி (80 சதவீதம்) சம்பளம், ஓய்வூதியம் மற்றும் கடன் திருப்பிச் செலுத்துவதற்கே செலவிடப்பட்டது. அதே நேரத்தில் ரூ.3 லட்சம் கோடி மட்டுமே மூலதனச் செலவினங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டது.
அதே காலகட்டத்தில், சொத்து விற்பனை சுமார் ரூ.15,000 கோடியை மட்டுமே ஈட்டியது. இந்த புள்ளிவிவரங்கள் மாநிலம் அதன் உறுதிமொழிகளை நிறைவேற்ற வழக்கமான வருவாயை எவ்வளவு அதிகமாகச் சார்ந்துள்ளது என்பதைக் காட்டுகிறது.