

தமிழ்நாடு அரசு அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்காகக் கொண்டு வரவிருக்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’ குறித்து சமூக ஊடகங்களில் பரவி வரும் தவறான தகவல்களுக்குத் தமிழ்நாடு அரசின் உண்மைச் சரிபார்ப்புக் குழு அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளித்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு, ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும்' என, முதல்வர் விஜய் அறிவித்தார். தமிழ் கலாச்சாரத்தில் தாய்மாமன் முறைப்படி குழந்தைக்குச் சீர் செய்யும் வழக்கத்தை அடிப்படையாகக் கொண்டு, அரசு மருத்துவமனைகளில் பிரசவத்தை ஊக்குவிக்கவும் தாய்மார்களைக் கௌரவிக்கவும் ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து, தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் சார்பாக, ஆண்டுக்கு 4.41 லட்சம் குழந்தைகளுக்கு, தலா ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது.
அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கடந்த ஜூன் 22-ம்தேதி முதல் பிறக்கும் அனைத்து பச்சிளம் குழந்தைகளும் இத்திட்டத்தின் மூலம் பயனடைவர். இத்திட்டத்திற்காக ஆண்டுதோறும் ரூ.755.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’ பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான வரும் செப்டம்பர் 15-ம்தேதி முதல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்படவுள்ளது.
இந்த திட்டத்தில் தயார் செய்யப்படும் தங்க மோதிரங்களை இருப்பு வைப்பதற்காக மாநிலத்தில் 107 மருத்துவமனை மையங்களில், அனைத்து நவீன அம்சங்களுடன் கூடிய பாதுகாப்பு பெட்டகம் (Safety Caskets) மற்றும் எஃகு அலமாரிகள் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்காக தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் (TNMSC) வெளிப்படையான டெண்டரை (Tender) வெளியிட்டது. இதில் 11 நிறுவனங்கள் பங்கேற்றன.
தங்கத்தின் சந்தை விலையைத் தவிர்த்து, செய்கூலி மற்றும் இதர கூடுதல் கட்டணமாக ஜோயாலுக்காஸ் நிறுவனம் வெறும் ரூ.0.01 (ஒரு பைசா) மட்டுமே கோரியது. ஜோயாலுக்காஸ் நிறுவனத்தின் அதே விலைக்கு மோதிரங்களை வழங்க கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனம் சம்மதித்தது. இதனால் முதற்கட்டமாக 70% ஜோயாலுக்காஸ் நிறுவனத்திற்கும், 30% கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனத்திற்கும் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே ஜோயாலுக்காஸ் வெறும் 1 பைசா (ரூ.0.01) விலைக்கு தங்க மோதிரங்களை வழங்க முன்வந்துள்ளதாகச் சமூக வலைத்தளங்களில் செய்திகள் தீயாய்ப் பரவின. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் முத்தரசன் உள்ளிட்ட பலரும், 1 பைசாவுக்குத் தங்கம் கொடுக்க முடியும் என்றால் அரசு ஏன் அதன் விலையைக் குறைக்கக் கூடாது? எனக் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இந்நிலையில் இந்த விவகாரம் முற்றிலுமாகத் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ள உண்மைச் சரிபார்ப்புக் குழு, அதன் பின்னணியில் உள்ள விவரங்களை விளக்கியுள்ளது
தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தில் ஒரு கிராம் தங்கம் 1 பைசா என்பது வதந்தி. 1 (ரூ.0.01) பைசா என்பது செய்கூலி, சேதாரம் போன்ற இதரக் கட்டணங்கள் மட்டுமே என தமிழ்நாடு அரசின் உண்மைச் சரிபார்ப்புக் குழு விளக்கம் அளித்துள்ளது.
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் தங்கத்தின் விலை தனியாகக் கணக்கிடப்படுகிறது. அதாவது இத்திட்டத்திற்கான ஒரு கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை, அன்றாடச் சந்தை நிலவரத்தின் அடிப்படையில் தனியாகவே கணக்கிடப்பட்டு நிறுவனங்களுக்கு முழுமையாக வழங்கப்படும். இதில் எந்தக் குறைப்பும் இருக்காது.
ஒரு கிராம் தங்கத்தின் விலையைத் தவிர்த்து, மோதிரம் செய்வதற்கான செய்கூலி, சேதாரம், காப்பீடு(Insurance), போக்குவரத்து, பேக்கிங் மற்றும் BIS தரமுத்திரை (Hallmark) போன்ற அனைத்து கூடுதல் கட்டணங்களும் சேர்த்து ஒரு மோதிரத்திற்கு வெறும் ‘1 பைசா’ மட்டுமே கட்டணமாகப் பெறுவதாக ஜோயாலுக்காஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. எனவே, ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.0.01 என்பது தவறான தகவலாகும்.
இது வணிக ரீதியான லாபத்துக்காக அல்லாமல், மக்கள் நலன் மற்றும் சமூகப் பொறுப்புணர்வு (CSR) சார்ந்த திட்டத்திற்கு உதவும் நல்விருப்பத்தின் காரணமாகவே இந்த 1 பைசா விலைப்புள்ளி சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக ஜோயாலுக்காஸ் நிறுவனமும் விளக்கமளித்துள்ளது.
இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்குச் சுமார் ரூ.25 கோடி வரை நிர்வாக மற்றும் இதரச் செலவுகள் சேமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’ குறித்து கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தவறான தகவல்களுக்குத் தமிழ்நாடு அரசின் உண்மைச் சரிபார்ப்புக் குழு இதன் மூலம் அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளித்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்ததுடன், பொதுமக்கள் யாரும் இனிமேல் ‘1 கிராம் தங்கம் 1 பைசா’ என்ற தவறான வதந்திகளை நம்பவோ, மற்றவர்களுக்குப் பகிரவோ வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.