ஆச்சாரமா? அரசமைப்புச் சட்டமா? சபரிமலை வழக்கில் 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு எடுக்கப்போகும் முடிவு என்ன?

Swamy Ayyapan
Swamy Ayyapan
Published on

சபரிமலை ஐயப்பன் "நைஷ்டிக பிரம்மச்சாரி" கோலத்தில் அருள்பாலிப்பதால், 10 முதல் 50 வயது வரையிலான பெண்களுக்குப் பல ஆண்டுகளாக அங்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. அந்த தடைக்கு எதிராக 2006-ல் இந்திய இளம் வழக்கறிஞர்கள் சங்கம் (Indian Young Lawyers Association) சார்பில் வழக்குகள் தொடரப்பட்டன. அந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது.

அனைத்து வயது பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லலாம் என்று கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் 28ந் தேதி பரபரப்பான தீர்ப்பை அளித்தது.

இந்த தீர்ப்பு குறித்து மதம், ஜாதி, பாலினம் போன்ற அடிப்படையில் பாகுபாடு செய்யக்கூடாது என்றும் பாலின சமத்துவ உரிமைகள் (Articles 14, 15) கீழ் மற்றும் மதத்தின் பெயரில் பெண்களைத் தடுப்பது அரசியல் என்றும் இந்த விதி சமத்துவ சட்டத்தையும் மீறுகிறது என நீதிமன்றம் குறிப்பிட்டது. மேலும் பெண்களை “மாதவிடாய் வயது” காரணமாகத் தடைசெய்வது பாலின பாகுபாடு என்று நீதிமன்றம் கருதியது. “Constitutional Morality” என்ற கருத்தை வலியுறுத்தியது நீதிமன்றம்.சமூக மரபு அல்லது பாரம்பரியம் இருந்தாலும், அது அரசமைப்பின் அடிப்படை மதிப்புகளுக்கு எதிராக இருந்தால் நீக்கப்பட வேண்டும் என்றது.

2018-இல் அனுமதி கிடைத்தாலும், தரிசனம் செய்ய முயன்ற பெண்கள் பல எதிர்ப்புகளைச் சந்தித்தனர். சமூக எதிர்ப்பு, பக்தர்களின் உணர்வுகள் மற்றும் பாதுகாப்பு அச்சம் காரணமாகப் பெண்கள் தரிசனத்திற்குச் செல்லத் தயங்கியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2018-ஆம் ஆண்டு வெளியான தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய, 2019-இல் மறுஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அமர்விற்குப் பரிந்துரை செய்தது. பின்னர், இது 9 நீதிபதிகள் கொண்ட சிறப்பு அமர்வின் விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த மனுக்கள் மீது 2026-ஆம் ஆண்டு ஏப்ரல் 7-ஆம் தேதி இறுதிக்கட்ட விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மறுஆய்வுக்கு ஆதரவாகவும் எதிராகவும் இருப்பவர்கள், மார்ச் 14-ஆம் தேதிக்குள் தங்கள் எழுத்துப்பூர்வ வாதங்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் சபரிமலையில் இளம் பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில் கேரளா அரசின் முடிவு எப்படி இருக்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது .இது தொடர்பாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் முடிவு செய்யும் என்று அரசு அறிவித்தது. இதைத் தொடர்ந்து திருவிதாங்கூர் தேவஸ்தான கூட்டத் தலைவர் கே.ஜெயக்குமார் தலைமையிலான கூட்டம் திருவனந்தபுரத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு பின் கே.ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது "சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்களின் இறை நம்பிக்கை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே தேவஸ்தானத்தின் முடிவு. அதன்படி ஆச்சார முறைப்படி சபரிமலையில் 10 வயது முதல் 50 வரையிலான பெண்களை அனுமதிக்க தேவையில்லைஎன்று தெரிவித்தார். தேவஸ்தானத்தின் இந்த நிலைப்பாடு குறித்து சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப்படும் என்றும் கூறினார்.

கேரள அரசின் மறைமுக முடிவாகவே கருதப்படும் இந்தத் திடீர் மாற்றம், தற்போது கேரள அரசியல் வட்டாரத்திலும் பக்தர்களிடையேயும் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. 2026 ஏப்ரல் 7-ஆம் தேதி நடைபெறவிருக்கும் 9 நீதிபதிகள் கொண்ட அமர்வின் தீர்ப்புக்காகப் பெண்கள் காத்திருக்கின்றனர்.

நீண்ட காலமாக நிலுவையில் உள்ள இந்த வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை 2026 ஏப்ரல் 7 அன்று நடைபெற உள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்த 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கப்போகும் தீர்ப்பு, மதச் சடங்குகளுக்கும் அரசமைப்புச் சட்ட உரிமைகளுக்கும் இடையிலான ஒரு முக்கியத் தீர்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
#BIG NEWS : ஹார்முஸ் ஜலசந்தியை மூடிய ஈரான்: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை பல மடங்கு உயர வாய்ப்பு..!
Swamy Ayyapan

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com