

இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையே நடைபெறும் போரில், ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) மூடி உலகிற்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.சர்வதேச நாடுகளின் முக்கிய பொருளாதாரம் கச்சா எண்ணெய் நம்பியே உள்ளது. ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியது, உலகின் பல நாடுகளுக்கு பொருளாதாரத்தில் பெரிய இழப்பை ஏற்படுத்தக்கூடும்.
சீனா மற்றும் அமெரிக்காவிற்கு அடுத்த இடத்தில், உலகில் அதிக கச்சா எண்ணெய் வாங்கும் நாடாக இந்தியா உள்ளது. உலகின் மிகப்பெரிய மக்கள் தொகையை கொண்ட நாடான இந்தியாவிற்கு , அதிக அளவில் கச்சா எண்ணெய் தேவை உள்ளது. பெரும்பாலும் இந்தியாவின் உள்நாட்டு தேவைகளுக்கே பல நாடுகளிலிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்கிறது. இதன் மூலம் அரபு நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்தியா கணிசமான அளவில் பங்களிக்கிறது.
ஹார்முஸ் ஜலசந்தியின் முக்கியத்துவம்:
பாரசீக வளைகுடாவையும் ஓமன் வளைகுடாவையும் இணைக்கும் ஒரு குறுகிய கடல் பகுதி 'ஹார்முஸ் ஜலசந்தி' என்று அழைக்கப்படுகிறது. இதன் ஒரு எல்லையில் ஈரானும் மறு எல்லையில் ஓமனும் அமைந்துள்ளது. இந்த பகுதி வெறும் 33 கி.மீ அகலம் மட்டுமே கொண்டது , இதில் கப்பல்கள் செல்வதற்கான பாதை வெறும் 3 கி.மீ அகலம் மட்டுமே , இங்கு ஏற்படும் சிறிய போக்குவரத்து இடையூறுகள் கூட பெரிய அளவில் கடல் போக்குவரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.
உலக நாடுகளுக்கு தேவையான கச்சா எண்ணெய் உற்பத்தியில் சுமார் 25% இந்த வழியாகத்தான் செல்கிறது. தினசரி ஏறக்குறைய 21 மில்லியன் எண்ணெய் பீப்பாய்கள் இதன் வழியாக பயணிக்கின்றன. சவுதி அரேபியா, ஈராக், குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற உலகின் பெரிய கச்சா எண்ணெய் வளம் கொண்ட நாடுகள், இந்த பாதையை தங்களின் கச்சா எண்ணெய் வியாபாரத்திற்கு பெரிதும் நம்பியுள்ளனர். மேலும் பெரிய இயற்கை எரிவாயு உற்பத்தியாளரான கத்தாரும் இந்த வழியிலேயே ஏற்றுமதி செய்கிறது.
இந்தியாவிற்கு ஏற்படும் பொருளாதார சவால்கள்:
இந்தியா தனது எரிசக்தி தேவைக்காக கணிசமான அளவில் மத்திய கிழக்கு நாடுகளிலேயே நம்பியுள்ளது. இந்தியா அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதால் அரபு நாடுகள் மத்தியில் அதிக செல்வாக்கும் பெற்றுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி மூடப்படுவதால் இந்தியாவிற்கு கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதில் குறிப்பிட்ட அளவில் பாதிப்பும் ஏற்படும்.
1. எரிபொருள் விலை உயர்வு:
இஸ்ரேல்- ஈரான் போர் தொடங்கும் போதே கச்சா எண்ணெயின் விலை அதிகரிக்க தொடங்கிவிட்டது. இந்தியா 55% கச்சா எண்ணெயை அரபு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறது. தற்போது ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை $100-ஐத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பெட்ரோல் விலை அதிகம் உள்ள நாடாக இருக்கும் இந்தியாவில் இந்த திடீர் விலை உயர்வு பொதுமக்களை அதிகம் பாதிக்கலாம்.
2. உயரும் பணவீக்கம்:
இந்தியாவில் பெட்ரோல் , டீசல் விலை உயரும் போது, காய்கறிகள், மளிகை பொருட்கள் உள்பட அனைத்து பொருட்களின் விலையும் உயரக் கூடும். மேலும் போது போக்குவரத்து செலவுகள் அதிகரிக்கத் தொடங்கும். இது இந்தியர்களின் தனிநபர் பொருளாதாரத்திலும் குறிப்பிட்ட அளவில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும்.
மாற்று ஏற்பாடுகள் :
சில பாதிப்புகள் இருந்தாலும் இந்தியா இதை விரைவில் கடந்து வர வாய்ப்புகள் உள்ளன. இந்தியா ரஷ்யாவிலிருந்து அதிக அளவில் கச்சா எண்ணையை பால்டிக் கடல் வழியாக, கடந்த சில ஆண்டுகளாக இறக்குமதி செய்து வருகிறது. அமெரிக்காவிலிருந்தும் இந்தியா எண்ணெயை இறக்குமதி செய்ய தொடங்கும் , மேலும் வளைகுடாவில் வாங்கும் கச்சா எண்ணெய்களுக்கு புஜாரா துறைமுகத்தை இந்தியா அதிகம் பயன்படுத்தி கொள்ளும். இதனால் , பொருளாதார சிக்கல்களை இந்தியா எதிர்கொண்டு விரைவில் மீண்டு விடும்.