பொதுமக்களுக்கு டீ வாங்கிக்கொடுத்து த.வெ.க கட்சி மாநாட்டிற்கு அழைப்புவிடுத்து வருகின்றனர் த.வெ.க நிர்வாகிகள்.
விஜய் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கட்சியைத் தொடங்கினார். அதன்பின்னர் கட்சியினர் கட்சியை கட்டமைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதன்படி சமீபத்தில் கட்சி கொடி மற்றும் சின்னம் ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டன. நடிகர் விஜய் தனது 69வது படத்துடன் சினிமா துறையை விட்டு விலகுவதாக தெரிவித்தார். இதனையடுத்து கட்சி மாநாட்டுக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்தக் கட்சியின் முதல் மாநாடு வரும் 27ம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்ரவண்டியில் உள்ள வி.சாலையில் நடைபெற இருக்கின்றது.
மாநாடு நடக்கும் இடத்தில் பெரிய பெரிய பேனர்கள், கட்டவுட்கள் எல்லாம் வைக்கப்படுகின்றன. பெரிய கொடிக்கம்பம் முதல் அனைத்து ஏற்பாடுகளும் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. தவெக மாநாட்டிற்கு இலட்சக் கணக்கானோர் வருவார்கள் என்பதால் சுமார் 500க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை அமைத்து மாநாட்டு நிகழ்வுகள் முழுவதையும் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் மாநாட்டில் யாராவது தவறினால் அல்லது வேறு பகுதிக்கு சென்று விட்டால் அவர்களை கண்டுபிடித்து தரவும் காணாமல் போனவர்களை அணுகுவதற்கும் மிஸ்ஸிங் ஜோன் உதவி மையங்கள் Missing center மாநாட்டு திடல் பகுதிகளிலும், நான்கு பார்க்கிங் பகுதிகளிலும் அமைக்கப்படுகின்றன.
தமிழ்நாடு முழுவதும் கொடியேற்றும் நிகழ்வுகள், சுவர் விளம்பரம், போஸ்டர்கள் என தமிழக வெற்றிக் கழகத்தினர் விளம்பர பணிகளை செய்து வருகின்றனர். மேலும் மாநாட்டிற்கு மக்களை அழைத்துவர வேன்கள்கூட புக் செய்யப்பட்டு வருகின்றன.
மாநாட்டு பணிகள் ஒருபுறம் நடைபெற்று இருந்தாலும் மாநாட்டிற்கு வருகை தரும் தொண்டர்களையும் பொதுமக்களையும் அழைத்து வர கட்சி நிர்வாகிகள் பல்வேறு முறைகளில் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
அந்தவகையில் திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் ஆத்தூர் ஒன்றிய தொண்டரணி தலைவர் லலித் மற்றும் ராகுல், மதன், மாதேஷ் சார்பாக த.வெ.க. நிர்வாகிகள் பொதுமக்களுக்கு இலவசமாக டீ வாங்கிக் கொடுத்தும், இனிப்புகள் வழங்கியும் மாநாட்டில் கலந்துக்கொள்ள அழைப்பு விடுக்கின்றனர். மேலும் விளக்குகள் கொளுத்தி, பட்டாசு வெடித்து அழைப்பு விடுத்து வருகின்றனர். இதனை பொதுமக்கள் வியப்புடன் பார்த்து மாநாட்டிற்கு வருவதாக உறுதியளிக்கின்றனர்.