

தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு, உலகப் புகழ்பெற்ற அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் பெருமைமிகு அடையாளமாக திகழ்கிறது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் நடைபெறும் தீபத் திருவிழா உலகப் புகழ் பெற்றது. 10 நாட்கள் நடைபெறும் தீபத் திருவிழாவின் கொடியேற்றம், இன்று (நவம்பர் 24) அதிகாலை திரளான பக்தர்கள் படை சூழ நடைபெற்றது.
தீபத் திருவிழாவின் பத்தாம் நாளான டிசம்பர் 3 ஆம் தேதி கோயிலின் கருவறையில் அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் திகழ்கிறது. இந்த திருக்கோயிலுக்கு உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி, வெளி மாவட்ட, வெளி மாநில மற்றும் வெளிநாட்டு பக்தர்களும் வருகை புரிவார்கள்.
நடப்பாண்டு கார்த்திகை மாத தீபத் திருவிழா, அருணாச்சலேஸ்வரர் கோயிலில் இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியுள்ளது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, தங்கம் முலாம் பூசப்பட்ட 63 அடி கொடிக்கம்பத்தில் இன்று அதிகாலை கொடியேற்றப்பட்டது. கொடியேற்ற நிகழ்ச்சியை திரளான பக்தர்கள் கண்டுகளித்தனர். இந்நிலையில் இன்று முதல் விழாக்கோலத்துடன் காட்சியளிக்கப் போகிறது திருவண்ணாமலை.
பத்து நாட்கள் வரை நடைபெறும் தீபத் திருவிழாவில் முதல் நாளான இன்று, காலை மற்றும் இரவில் பஞ்ச மூர்த்திகள் வீதி உலா வர இருக்கின்றனர். 7வது நாள் தேரோட்டத்தைத் தவிர்த்து மற்ற அனைத்து நாட்களிலும் காலையில் விநாயகரும், சந்திரசேகரரும் வீதி உலா வருவார்கள்.
அதோடு இரவு நேரத்தில் பஞ்ச மூர்த்திகள் வீதி உலா நடைபெறும். தினந்தோறும் மாலையில் மாட வீதிகளில் உலா வரும் பஞ்ச மூர்த்திகளுக்கு, திருக்குடைகள் கட்டப்பட்டு அலங்காரம் செய்யப்படும்.
தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 10 ஆம் நாள், வருகின்ற டிசம்பர் 3 ஆம் தேதியன்று அதிகாலை 4 மணியளவில் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்படும். அன்று மாலை 6 மணிக்கு கோயிலின் பின்புறம் உள்ள 2,668 அடி உயரம் கொண்ட அண்ணாமலையார் மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும்.
மகா தீபத்தைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கூடுவார்கள் என்பதால், பாதுகாப்பு பணியில் எண்ணற்ற காவல்துறையினர் ஈடுபட உள்ளனர். அதோடு பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.
சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு புறப்படும் பக்தர்கள் அடையாறு பணிமனை மற்றும் கிளாம்பாக்கம் பணிமனையில் இருந்து திருவண்ணாமலைக்கு பேருந்தில் செல்லலாம்.