
பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ள நிலையில், இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற முக்கியமான 12 கோயில்களில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து இந்து சமய அறநிலையத் துறை அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. பிளாஸ்டிக் இல்லா கோயில்களை உருவாக்குவதே இந்த உத்தரவின் முக்கிய நோக்கமாகும்.
பிளாஸ்டிக் உபயோகத்தால் மனிதர்கள் மட்டுமின்றி நுண்ணுயிரிகள் மற்றும் பிராணிகள் என அனைத்து வகையான உயிரினங்களும் பாதிப்பைச் சந்திக்கின்றன. இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில் பிளாஸ்டிக் டீ கப், பேப்பர் கப், தடிமனான கேரி பேக், பிளாஸ்டிக் ஷீட் மற்றும் தெர்மாகோல் கப் உள்ளிட்ட 9 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்தது.
இருப்பினும் கூட தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலுமாக குறைக்க முடியவில்லை. ஆகையால் கொஞ்சம் கொஞ்சமாக பிளாஸ்டிக்கை குறைக்க அரசு தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக தற்போது தமிழ்நாட்டின் 12 முக்கியமான கோயில்களில் பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலை வெகுவாக பாதிக்கும் பிளாஸ்டிக் எனும் அரக்கனை ஓரங்கட்ட பசுமை கேரி பேக்குகள் ஆங்காங்கே நடைமுறைக்கு வந்து விட்டன.
திருப்பதி தேவஸ்தானத்தில் பிளாஸ்டிக் கேரி பேக்குகளுக்கு தடை விதிக்கப்பட்ட பிறகு, பசுமை கேரி பேக்குகள் தான் பயன்படுத்தப்படுகின்றன. தமிழ்நாட்டிலும் சில இடங்களில் பசுமை கேரி பேக்குகள் பயன்பாட்டில் உள்ளன. பசுமை கேரி பேக்குகள் எளிதில் மட்கும் தன்மையுடையதால், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருக்கும்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில், பழனி முருகர் கோயில், திருச்செந்தூர் முருகர் கோயில், திருத்தணி முருகர் கோயில், வடபழனி முருகர் கோயில், ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோயில், இராமேஸ்வரம் இராமநாத சுவாமி கோயில் மற்றும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் உள்ளிட்ட 12 கோயில்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த 12 கோயில்களை பிளாஸ்டிக் இல்லா கோயில்களாக மாற்ற இந்து சமய அறநிலையத் துறை முடிவு செய்துள்ளது.
பிளாஸ்டிக் தடை குறித்து சம்பந்தப்பட்ட கோயில் நிர்வாகத்திற்கு இந்து சமய அறநிலையத் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. பிளாஸ்டிக்கிற்கு பதிலாக இயற்கையான பொருட்கள் மற்றும் பசுமை கேரி பேக்குகளைப் பயன்படுத்த அறநிலையத் துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும் பிளாஸ்டிக் தடையை சீரிய முறையில் நடைமுறைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.