நாம் வாழ்கின்ற பூமியானது, தனது அச்சில் சுழன்று கொண்டே இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. இருப்பினும் மனிதர்களின் செயல்பாட்டினால், பூமியின் இந்த சுழற்சியில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுவதாக கடந்த சில ஆய்வுகள் கூறுகின்றன. இந்நிலையில் தற்போது தென்கொரியா நாட்டைச் சேர்ந்த ஆய்வாளர்கள், சுழற்சியில் ஏற்பட்ட மாற்றத்தால் பூமியானது சிறிதளவு சாய்ந்து விட்டதாக திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளனர்.
இதற்கு மிக முக்கிய காரணமாக, பூமியின் நிலத்தடி நீர் அதிக அளவில் உறிஞ்சப்படுவது தான் என கூறப்பட்டுள்ளது. தென்கொரிய நாட்டின் இந்த ஆராய்ச்சி முடிவுகளை அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகளும் அங்கீகரித்துள்ளனர்.
தென்கொரியா நாட்டில் உள்ள சியோல் தேசிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த புவி இயற்பியலாளர் கி-வீயோன் சியோ தலைமையில் பூமி குறித்த புதிய ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் பூமியின் சுழற்சி அச்சு தீவிரமாக கண்காணிக்கப்பட்டது. ஆய்வின் முடிவில் 1993 முதல் 2010 வரையிலான ஆண்டு காலத்தில், பூமியிலிருந்து அதிக அளவு நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு, வெளியேற்றப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது கிட்டத்தட்ட 2,150 ஜிகா டன்கள் (2,150,000,000,000 டன்) அளவு நிலத்தடி நீர் பூமியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளது. இதனால் பூமியின் அச்சானது 31.5 இன்ச் விலகி உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
விவசாயப் பயன்பாட்டிற்கு போக, மீதம் இருந்த நிலத்தடி நீர் கடலில் கலந்து விட்டது. இதனால் பூமியின் எடையில் சமநிலையற்ற சூழல் ஏற்பட்டு, தனது சுழற்சியில் மாற்றத்தைக் கண்டுள்ளது பூமி. பூமியில் இருந்து நிலத்தடி நீரானது கிணறுகள் மற்றும் குழாய்கள் வழியாக உறிஞ்சப்பட்டு, இறுதியில் கடலைச் சென்றடைகிறது. இதனால் கடலின் மட்டம் 0.24 அங்குலம் அதிகரித்து விட்டது.
கடலின் நீர்மட்டம் உயர்வது ஆபத்தை ஏற்படுத்தும் என்றால், மற்றுமொரு விளைவாக பூமியின் சுழற்சியிலும் மாற்றம் ஏற்பட்டிருப்பது பேராபத்தை ஏற்படுத்தக்கூடும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். பூமியிலிருந்து ஒரு மிகப்பெரிய எடையை எடுத்து, வேறொரு இடத்தில் வைத்ததன் மூலம் சமநிலையற்ற சூழல் காரணமாக பூமியின் சுழற்சியில் மாற்றம் ஏற்பட்டு சாய்ந்துள்ளது.
காலநிலை மாற்றத்தில் பனி மலைகள் உருகுவதைக் காட்டிலும், நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது தான் அதிக ஆபத்தை ஏற்படுத்தும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
நிலத்தடி நீர் எங்கெல்லாம் அதிகளவில் வெளியேற்றப்பட்டுள்ளதோ, அங்கெல்லாம் இதன் விளைவு கடுமையாக இருக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன்படி, வடமேற்கு இந்தியா மற்றும் மேற்கு வட அமெரிக்கா ஆகிய இடங்களில் தான் நிலத்தடி நீர் அதிக அளவு உறிஞ்சப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகில் உள்ள கண்டங்களில் நீர் இருப்பு எவ்வளவு இருக்கிறது என்பதை இனி அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும். மேலும் வருங்காலத்தில் நாம் எவ்வளவு நீரை கையாள வேண்டும் என்பதும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும். மனித செயல்பாடுகளினால், பூமி அதிக அளவு பாதிப்பை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இயற்கையை பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் அனைவரும் இருக்கிறோம்