டெல்லியில் எதிரே வரும் வாகனம் கூட தெரியாத அளவிற்கு பனிமூட்டம் இருந்து வருகிறது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இந்தியா முழுவதும் இயற்கையின் கோரத் தாண்டவம் தலைவிரித்தாடுகிறது. சில மாதங்களாக தென்னிந்தியாவில் பல மாநிலங்களில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. வட மாநிலங்களில் பலத்த குளிர் அலை வீசி வருகிறது. ஹிமாச்சல், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. தலைநகர் டெல்லியிலும் பனி மூட்டத்துடன் காணப்படுகிறது. சமீபத்தில் குளிர் காலத்தின் மிகக் குறைந்த வெப்பநிலையை பதிவு செய்தது டெல்லி. கடந்த 1996ம் ஆண்டுக்கு பிறகு 5 டிகிரிக்கும் குறைந்த செல்சியஸ் இருந்தது.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கைப்படி இனி வரும் காலங்களில் இதைவிடவும் அதிக குளிரை மக்கள் எதிர்கொள்ளும் நிலை வருமாம். இதனால் டெல்லி மக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். தங்கள் வீடுகளின் வாசல்களில் தீமூட்டி குளிர்க் காய்ந்து வருகின்றனர்.
இதற்கு காரணம் எல் நினோ நிகழ்வு என்று கூறப்படுகிறது. இந்த நிகழ்வால் இந்தியாவில் கடுமையான குளிர் இருக்குமாம். மேலும் இந்தியா சுற்றியுள்ள நாடுகளிலும் அதிக குளிர் இருக்கும் என்று எச்சரிக்கை செய்யப்பட்டது.
அந்தவகையில், டெல்லியில் அடர்த்தியான மூடுபனி காணப்படுகிறது. மேலும் காற்றின் தரம் மிகவும் மோசமாக உள்ளது. பல இடங்களில் தெரிவுநிலை பூஜ்ஜியமாகக் குறைந்தது. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 10 அடிக்கு முன்னால் செல்லும் வாகனங்கள் கூட தெரியாத அளவிற்கு பனிமூட்டம் நிலவியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். அதேபோல் ரெயில் மற்றும் விமான போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டன.
விமான சேவைகளில் எந்த பாதிப்புகளும் இல்லையென்றாலும், விமான பயணிகள் தங்களது விமானங்கள் பற்றிய செய்திகளை அவ்வப்போது பார்த்துக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நேற்று நிலவிய பனிமூட்டம் காரணமாக ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நேற்று காலை குறைந்தது 39 ரெயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன. இன்று காலை 9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானதாக கூறப்படுகிறது.