

தமிழ்நாட்டில் இன்னும் சில நாட்களில் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது. முன்னணி கட்சிகள் தொகுதிப் பங்கீட்டில் தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில், இப்போதே தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது.
தமிழகம் இதுவரை பல தேர்தல்களை சந்தித்து விட்டது. இதுவரை நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் சில முக்கிய வேட்பாளர்கள் கூட அதிர்ச்சி தோல்வியை அடைந்துள்ளனர். அவ்வகையில் தமிழக சட்டமன்றத் தேர்தலில் டாப் 5 அதிர்ச்சி தோல்விகளை இப்போது பார்க்கலாம்.
1. பேரறிஞர் அண்ணா:
திமுக-வில் மிகப்பெரும் சக்தியாக இருந்தவர் சி.என்.அண்ணாதுரை. 1962-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பேரறிஞர் அண்ணா அதிர்ச்சி தோல்வியை சந்தித்தார். திமுக சார்பில் காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிட்ட அண்ணாவை, காங்கிரஸ் வேட்பாளர் ராமசாமி வென்றார். இந்தத் தோல்வி திமுக கட்சியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
2. காமராஜர்:
தமிழக அரசியல் வராற்றைப் பொறுத்தவரை கர்ம வீரர் காமராஜரின் பெயரை பொன்னெழுத்துகளால் பொறிக்க வேண்டும். அந்த அளவிற்கு எத்தனையோ திட்டங்களை செயல்படுத்தி மக்கள் நலனுக்காகவே வாழ்ந்த தலைவர் காமராஜர். ஆனால், 1967-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காமராஜரும் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தார். நல்லாட்சி கொடுத்த காமராஜரும் தோல்வியை சந்தித்தது, அப்போது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் காமராஜரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஸ்ரீநிவாசன் வெற்றி பெற்றார். தமிழக அரசியல் களம் காணாத ஒரு மிகப்பெரும் தோல்வியாக இது பார்க்கப்படுகிறது.
3. ஜெ.ஜெயலலிதா:
தமிழக அரசியல் களத்தில் இரும்பு பெண்மணியாக வலம் வந்தவர் செல்வி ஜெ.ஜெயலலிதா. ஆனால் இவரும் கடந்த 1996-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தார். அதிமுக சார்பில் பர்கூர் தொகுதியில் போட்டியிட்ட ஜெயலலிதாவை, திமுக வேட்பாளர் இ.ஜி.சுகவனம் வென்றார்.
4. அன்புமணி ராமதாஸ்:
16-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தனது சொந்தத் தொகுதியான பென்னாகரத்தில் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தார். பாமக சார்பில் பென்னாகரம் தொகுதியில் போட்டியிட்ட அன்புமணியை, திமுக வேட்பாளர் இன்பசேகரன் வென்றார். வன்னியர்கள் வாக்கு அதிகமிருந்த தொகுதியில் பாமக தோல்வியை தழுவியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
5. விஜயகாந்த்:
2016-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக தலைவர் தலைவர் விஜயகாந்த், தனது பலத்தை நிரூபிக்க உளுந்தூர்பேட்டை தொகுதியில் நின்றார். ஆனால் இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் குமரகுரு வெற்றியை தட்டிச் சென்றார். இந்தத் தோல்வி விஜயகாந்தின் அரசியல் பயணத்தில் ஒரு பெரும் வீழ்ச்சியை ஏற்படுத்தியது என்றே சொல்ல வேண்டும்.
நடப்பாண்டு நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாக நடிகர் விஜய் களம் காண்பதால், எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இருப்பினும் அவரால் தாக்கத்தை ஏற்படுத்த முடியுமா அல்லது முடியாதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.