

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நடந்து வரும் கடுமையான போரால், உலக சந்தையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு நாடுகளில் பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது.
போர் பதற்றம் காரணமாக ஈரான் அரசு ஹார்மூஸ் ஜலசந்தியை மூடியது. இதன் காரணமாக இவ்வழியாக வர வேண்டிய எண்ணெய்க் கப்பல்கள் வர முடியாமல் அங்கேயே நிற்கின்றன. இந்நிலையில் நேற்று இந்தியாவின் இரண்டு எண்ணெய் கப்பல்கள் ஹார்மூஸ் ஜலசந்தியை கடந்து, வெற்றிகரமாக மும்பையை வந்தடைந்தன. இருப்பினும் 30க்கும் மேற்பட்ட இந்திய கப்பல்கள் ஹார்மூஸ் ஜலசந்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில் ஹார்மூஸ் ஜலசந்தியில் உலக நாடுகளின் கப்பல்களுக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது என அமெரிக்கா அதிபர் டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் போர் தொடங்கிய போது ஹார்மூஸ் ஜலசந்தி வழியாக வரும் கப்பல்களுக்கு பாதுகாப்பு அளிப்பதாக அமெரிக்கா உறுதி அளித்திருந்தது. ஆனால் தற்போது அதிலிருந்து பின்வாங்கியுள்ளது அமெரிக்கா.
ஈரானின் எரிசக்தி கட்டமைப்பை தாக்குவது ஒன்றே எங்களது இலக்கு என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக எண்ணெய் கப்பல்களுக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில் உலகளாவிய எரிபொருள் தட்டுப்பாட்டை குறைக்கும் விதமாக, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணையை வாங்கிக் கொள்ள இந்தியாவைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளுக்கு அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது.
போர் பதற்றத்தால் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டை சமாளிக்க இந்தியாவிடம் அண்டை நாடுகள் உதவி கேட்டுள்ளன. உற்பத்தி அளவை கணக்கிட்டே அண்டை நாடுகளுக்கு எரிபொருள் ஏற்றுமதி செய்ய முடியும் என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
நாளுக்கு நாள் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் வீட்டு உபயோக சிலிண்டருக்கு தட்டுப்பாடு இல்லை என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
ஈரானின் எரிசக்தி கட்டமைப்பை தாக்கினால் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு கிணறுகளை குறிவைப்போம் என அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருவதால், போருக்கான முடிவு எப்போது எட்டப்படும் என உலக நாடுகள் காத்திருக்கின்றன. ஈரானை அடிபணிய வைக்க அமெரிக்கா முயல்கிறது.
ஆனால் அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான், தாக்குதலை நடத்துகிறது. இந்நிலையில் போர் தொடர்ந்தால், இன்னும் சில நாட்களில் எரிபொருள் தட்டுப்பாடு வரலாறு காணாத அளவில் உச்சத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.