

பொதுவாக கேரட்...இளஞ்சிவப்பு(ஆரஞ்சு) நிறத்தில் தான் இருக்கும்.
ஆனால், கருப்பு நிறத்திலும் கேரட் இருக்கிறது என்று சொன்னால் நீங்க நம்புவீங்களா. ஆம்... உண்மைதான்...
அந்த கருப்பு கேரட் சாகுபடியில் தற்போது களமிறங்கி இருக்கிறது, நீலகிரி மாவட்ட தோட்டக்கலைத்துறை. அதாவது நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் உள்ள நர்சரியில் தோட்டக்கலைத்துறையின் சார்பில் முதன் முறையாக கருப்பு கேரட் உற்பத்திக்கான சோதனை முயற்சி நடைபெற்று வருகிறது.
இதற்கு முன்பு இங்கு கேரட் சாகுபடி ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அறிமுகம் செய்யப்பட்டு தற்போது மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது. விவசாயிகள் மட்டுமின்றி பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களும் தங்களது வாழ்வாதாரத்திற்கு கேரட் பயிரை மட்டுமே சார்ந்துள்ளனர்.
கருப்பு கேரட் வடமாநிலங்களில் புதிதல்ல. வழக்கமான ஆரஞ்சு நிறத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட 'காலே கஜர்'(Kale Gajar) எனப்படும் இந்த கருப்பு கேரட் சாகுபடி மற்றும் பயன்பாடு உத்தர பிரதேசம், ஹரியானா, பீகார், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் அதிகளவில் உள்ளது.
மேலும் இந்த கருப்பு கேரட்டை வடமாநிலங்களில் மக்கள் பல்வேறு உணவு வகைகள் மற்றும் கேக் தயாரிக்கவும் பயன்படுத்தி வருகின்றனர்.
ஆரஞ்சு தங்கம் என வர்ணிக்கப்படும் கேரட் சாகுபடியில் நீலகிரி மாவட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில் நீலகிரியில் தேயிலை சாகுபடிக்கு அடுத்ததாக பிரதான சாகுபடியாக கேரட் உள்ளது என்பது குறிப்பிட்டத்தக்கது.
இந்நிலையில் டெல்லியில் இருந்து வரவழைக்கப்பட்ட கருப்பு கேரட்டுக்கான விதைகள் சிம்ஸ் பூங்காவில் உள்ள நர்சரியில் விதைக்கப்பட்டுள்ளன. மேலும் இதற்கு உரமாக தோட்டக்கலைத்துறை மூலம் தயாரிக்கப்பட்ட மண்ணுயிர் உரம் இடப்பட்டது.
பொதுவாக ஆரஞ்சு கேரட் 2-3 மாதங்களுக்குப் பிறகு அறுவடை செய்யப்படும் நிலையில் கருப்பு கேரட் 3 முதல் 3½ மாதங்களில் அறுவடைக்கு வந்துவிடும் என்று கூறப்படுகிறது.
நீலகிரியில் பெரும்பாலான இடங்களில் பொதுவாக இளஞ்சிவப்பு(ஆரஞ்சு) நிற கேரட் விளைவிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது புதிய முயற்சியாக கருப்பு நிற கேரட் உற்பத்திக்கான சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக தோட்டக்கலைத்துறையினர் கூறுகையில், கருப்பு கேரட் விதைத்து, அதன் வளர்ச்சி குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது. வளர்ந்த பிறகு, அதில் இருந்து விதைகள் சேகரிக்கப்பட உள்ளது. ஆரஞ்சு கேரட்டை போல் கருப்பு கேரட்டிலும் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. நார்சத்து அதிகம் கொண்ட கருப்பு கேரட், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதில் பொட்டாசியம், வைட்டமின் கே, பீட்டா கரோட்டின், ஆக்ஸிஜனேற்றிகள் அதிகமாக உள்ளது. இந்த கருப்பு கேரட் பொதுவாக சோப்பு தயாரிப்பில் இயற்கை வர்ணத்துக்காகவும் பயன்படுத்தப்படுகிறது என்றனர்.