

சென்னையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் ஷாப்பிங் மால்களில் குடிநீர் வீணாவதைத் தடுக்க சென்னை குடிநீர் வாரியம் தற்போது புதிய திட்டத்தைக் கொண்டு வரவுள்ளது. இதன்படி இனி அனைத்து அடுக்குமாடி குடியிருப்புகளிலும் ஸ்மார்ட் குடிநீர் மீட்டர் பொருத்தப்பட உள்ளது.
இதன் மூலம் குடிநீர் விநியோகம் மற்றும் பயன்பாடு உள்ளிட்டவை கண்காணிக்கப்பட்டு, சரியான கட்டண விவரங்கள் வாடிக்கையாளரின் மொபைல் போனிற்கு அனுப்பப்படும். இதற்காக ஒரு லட்சம் ஸ்மார்ட் குடிநீர் மீட்டர்களை கொள்முதல் செய்ய சென்னை குடிநீர் வாரியம் திட்டமிட்டுள்ளது.
சென்னை உள்ளிட்ட நகரங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் ஷாப்பிங் மால்களில் அதிக அளவு குடிநீர் வீணாகிறது. கோடை காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு அடிக்கடி நிகழ்கிறது. இதனால் பொதுமக்கள் அதிக சிரமத்தை எதிர்கொள்கின்றனர். இதனைத் தடுக்கவே ஸ்மார்ட் குடிநீர் மீட்டர் பொருத்தும் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது சென்னை குடிநீர் வாரியம். இதன்படி 2,400 சதுர அடிக்கு அதிகமாக உள்ள குடியிருப்புகளுக்கு, ஸ்மார்ட் குடிநீர் மீட்டர் கட்டாயம் பொருத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தின் முதல் கட்டமாக சென்னையில் உள்ள வணிக வளாகங்கள் மற்றும் அலுவலக குடியிருப்புகளில் ஸ்மார்ட் குடிநீர் மீட்டரைப் பொருத்த சென்னை குடிநீர் வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் டிசம்பர் மாத இறுதிக்குள் சென்னையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டு விடும் என சென்னை குடிநீர் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் குடிநீர் விநியோக மேலாண்மையில் செயல்திறன் மற்றும் வெளிப்படைத் தன்மை அதிகரிக்கும். மேலும் திடீரென குடிநீர்க் குழாய்களில் ஏற்படும் நீர்க் கசிவுகளை விரைவாகக் கண்டறிந்து, குடிநீர் வீணாவததைத் தடுக்கவும் இந்த அமைப்பு உதவும். ஸ்மார்ட் குடிநீர் மீட்டர் திட்டமானது, ரூ.5 கோடி செலவில் செயல்படுத்தப்படுகிறது. இதன் வாயிலாக சென்னை குடிநீர் வாரியத்தின் வருமானம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் முதலில் அதிகளவில் குடிநீரைப் பயன்படுத்தும் நுகர்வோர்களுக்கு, ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்படும். மாதந்தோறும் இவர்களுக்கு குடிநீர் பயன்பாட்டு விவரங்கள் மொபைல்போன் வழியாக அனுப்பப்படும்.
பொதுவாக சென்னையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் கார்களை கழுவுதல், நீச்சல் குளம் மற்றும் தோட்டங்களுக்கு அதிகளவு தண்ணீர் வீணாகிறது. குடிநீர் மீட்டர்களைப் பொருத்துவதன் மூலம், இதனைத் தடுக்க முடியும் எனக் கூறப்படுகிறது. மேலும் இத்திட்டத்தின் மூலமாக குடிநீர் பயன்பாட்டில் பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படும்.
குடியிருப்புகளில் குடிநீர் பயன்பாட்டுக்கு ஏற்பவே கட்டணம் வசூலிக்கப்படும் என்பதால், இனி தேவையின்றி யாரும் குடிநீரை வீணாக்க மாட்டார்கள் என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் சென்னையில உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் ஒரு முக்கிய மாற்றத்தை நிகழ்த்த உள்ளது குடிநீர் வாரியம்.